Last Updated : 02 Jul, 2025 07:50 AM

 

Published : 02 Jul 2025 07:50 AM
Last Updated : 02 Jul 2025 07:50 AM

இந்தியர்களின் பெருமைக்குரிய ‘இருவர்’ | சாதனையாளர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியரான ஷுபன்ஷு சுக்லாவைக் கோடிக்கணக்கான மக்கள் வாழ்த்தினர். அந்த வாழ்த்துகளில் ஒன்று மிகவும் சிறப்பானது. அது, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மாவின் வாழ்த்துதான்! 1949ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள பாட்டியாலாவில் பிறந்தார் ராகேஷ் சர்மா.

பள்ளிக் கல்வியை ஹைதராபாத்தில் முடித்தார். 1966ஆம் ஆண்டு தேசிய ராணுவப் பள்ளியில், விமானப்படைப் பிரிவில் சேர்ந்து படிப்பை முடித்தார். 1970ஆம் ஆண்டு, 21 வயதில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானியாக நியமிக்கப்பட்டார்! 1982ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் (ரஷ்யா) விண்வெளி நிலையத்துக்குச் செல்லும் திட்டத்தில் சேர்ந்தார்.

1984, ஏப்ரல் 3 அன்று இரண்டு சோவியத் விண்வெளி வீரர்களுடன், சோயுஸ் டி-11 விண்கலம் மூலம் சல்யுட் 7 விண்வெளி நிலையத்துக்குச் சென்றார் ராகேஷ் சர்மா. இதன் மூலம் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் என்கிற சாதனையைப் படைத்தார்! விண்வெளி நிலையத்தில் இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ‘விண்வெளியிலிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருக்கிறது?’ என்று கேட்டார்.

அதற்கு, ‘சாரே ஜஹான் சே அச்சா’ (உலக நாடுகளில் இந்தியா சிறப்பாக இருக்கிறது) என்று பதில் அளித்தார் ராகேஷ் சர்மா. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர், ‘சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ’ என்கிற விருதைப் பெற்ற ஒரே இந்தியர் ஆகிய பெருமைகளையும் பெற்றார் ராகேஷ் சர்மா. அதோடு, ‘அசோக சக்ரா’ என்கிற இந்தியாவின் உயர் விருதும் ராகேஷ் சர்மாவோடு அவருடன் பயணித்த சோவியத் வீரர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டது.

ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு மற்றோர் இந்தியர் விண்வெளிக்குச் செல்வதற்கு 41 ஆண்டுகள் ஆகிவிட்டன. (கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் இந்திய வம்சாவளியினர்.) அந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர் ஷுபன்ஷு சுக்லா. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியர், விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் ஆகிய பெருமைகளைப் பெற்றிருக்கிறார்.

ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்ற அடுத்த ஆண்டு, 1985இல் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் பிறந்தார் ஷுபன்ஷு சுக்லா. 13 வயதில் கார்கில் போரால் ஈர்க்கப்பட்டு, இந்திய ஆயுதப்படையில் சேர்வதற்கு ஆர்வம் கொண்டார். இந்தியப் பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து படித்தார்.

பின்னர் இந்திய வான்படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு இந்திய விண்வெளிப் பயணத்திட்டத்தில் சேர்க்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு விண்வெளிக்குச் செல்லும் 4 பேரில் ஒருவராக ஷுபன்ஷு சுக்லா தேர்ந்தெடுக்கப்பட்டு, ரஷ்யாவில் பயிற்சி பெற்றார்.

2024ஆம் ஆண்டு இந்தியாவின் மனிதர்கள் செல்லும் முதல் விண்வெளிப் பயணத்தில் (ககன்யான்) பங்குபெறும் விண்வெளி வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துவருகிறது.

அப்படி ஒரு தனியார் நிறுவனத்தின் திட்டம்தான் அக்ஸியம் 4. சர்வதேச விண்வெளி நிலையம் 2030ஆம் ஆண்டு செயலிழந்துவிடும் என்பதால், புதிய விண்வெளி நிலையத்தைத் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிறுவுவதற்கு நாசா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதிதான் இந்த அக்ஸியம் 4 திட்டம். அக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் நான்காவது கட்டத் திட்டத்தில்தான் ஷுபன்ஷு சுக்லா விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். அங்கு இந்தியாவுக்காகப் பல பரிசோதனைகளை மேற்கொள்கிறார். சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து உரையாடிய ஷுபன்ஷு சுக்லா, “விண்வெளியி லிருந்து பூமியைப் பார்க்கும்போது, நாம் அனைவரும் பூமியைச் சேர்ந்தவர்கள், நாம் அனைவரும் ஒன்று என்று உணர்கிறேன்.

இந்தப் பயணம், இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்துக்கான தொடக்கம்’ என்று கூறியிருக்கிறார். இந்திய விண்வெளித் திட்டத்தில் மனிதர்கள் விண்வெளிக்குச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x