Published : 02 Jul 2025 07:42 AM
Last Updated : 02 Jul 2025 07:42 AM
பறவைகளில் 5 சதவீதத்துக்கும் குறைவான இனங்கள் மட்டுமே தாவர உண்ணிகள். பெரும்பாலான பறவைகள் தாவர, இறைச்சி உண்ணும் ஊன் உண்ணிகள். ஊன் உண்ணிப் பறவைகளில் 10-15 சதவீதப் பறவைகள் வேட்டையாடிகள். பூச்சிகளைப் பிடித்து உண்ணும் பறவைகள் சிறிய வேட்டையாடிகள். வேட்டையாடி பறவைகள் கம்பீரமானவை.
திறமையாக வேட்டையாடக்கூடியவை. இவை இரையைப் பிடிப்பதற்குத் தனித்துவமான திறன்களையும் உடல் அமைப்பையும் பெற்றுள்ளன. வேட்டையாடுவதற்கு வசதியாகக் கூர்மையான நகங்கள், வலுவான அலகுகள், கூரிய பார்வை போன்றவற்றைப் பெற்றுள்ளன.
வேட்டையாடும் பறவைகள் இரையைப் பிடிக்கப் பல்வேறு உத்திகளைக் கையாள்கின்றன. கழுகுகளைப் போன்று கூர்மையான பார்வை வேட்டையாடி பறவைகளுக்கு உதவுகிறது. இரண்டு கி.மீ. உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போதும் தரையில் நடமாடும் இரையை எளிதாகக் கண்டறிவதோடு, அதன் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாகக் கணிக்கிறது.
குறைவான வெளிச்சத்திலும் தெளிவான பார்வையைக் கொண்டுள்ள ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளுக்கு, பார்வைத் திறனுடன் சத்தம் எழுப்பாமல் பறக்கக்கூடிய ஆற்றலும் வேட்டையாட உதவுகிறது. உயர் அதிர்வெண் ஒலிகளை ஆந்தைகள் உணர்கின்றன. 10 மீட்டர் தொலைவில் இருக்கும் எலியின் சிறு அசைவில் உண்டாகும் ஒலியை உணர்ந்து வேட்டையாடுகின்றன.
வேட்டையாடிகளின் பாதங்கள் பெரியதாகவும் வலிமையானதாகவும் உள்ளன. வளைந்த கூர்மையான அலகு, இரையை எளிதில் கிழித்து உண்ண உதவுகிறது. ஒரு மனிதனின் பிடியைவிடப் பத்து மடங்கு வலிமையானது கழுகின் பிடி. இவ்வளவு அழுத்தம் கொடுக்கப்படுவதால், பிடித்த இரையின் எலும்புகளை நொறுக்கவும் பாதுகாப்பாகப் பிடித்துக் கொள்ளவும் முடிகிறது.
பறக்கும் வேகமும் வேட்டையாடிகளுக்கு உதவியாக இருக்கிறது. பொரி வல்லூறு (Peregrine falcons) மணிக்கு 300 கி.மீ. வேகம் வரை பறந்து சென்று இரையைத் தாக்குகிறது. உயரத்தில் பறந்து கொண்டிருக்கும்போது இறக்கைகளை விரிக்காமல், கால்களை உடலுடன் ஒட்டி வைத்து, மேலிருந்து வந்து இரையைத் தாக்குகின்றன.
கழுகுகள் (Hawks) எளிதில் தங்களது பாதையை மாற்றிப் பயணிக்கக்கூடிய திறமையைக் கொண்டுள்ளன. அதனால் கணிக்க முடியாத நேர இடைவெளியில் பறந்து சென்று இரையை இவற்றால் பிடிக்க முடிகிறது. காத்திருந்து வேட்டையாடக்கூடியது ‘விரால் அடிப்பான்’ (Osprey). மரம் அல்லது கம்பத்தில் அமர்ந்து, நீர்நிலைகளில் மீன்களைக் கவனித்து, தண்ணீரில் மூழ்கிப் பிடிக்கிறது. இவற்றின் கால்களில் உள்ள முள் போன்ற உகிர்கள் (நகம்) மீன்களை இறுகப் பிடிக்க உதவுகின்றன. இவற்றின் கண்கள் நீரிலும் மீனைத் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன.
வெகுசில பறவைகள் மட்டும்தான் கூட்டு வேட்டையில் ஈடுபடுகின்றன. இரையைத் திசைதிருப்பவும், எதிர்த் திசையில் இருந்து பறந்து வந்து பிடிக்கவும் இவை உதவுகின்றன. கூழைக்கடா (Pelicans) போன்ற பறவைகள் கூட்டாகத் தண்ணீரில் இறங்கி மீன்களை வேட்டையாடுகின்றன. வேட்டையாடி பறவைகளுக்கு இயற்கையின் குறிப்பிட்ட சூழலும் பெரும் அளவு உதவுகிறது.
நீர் நிலைகளில் இருக்கும் மீன்கள், வயல்களில் இருக்கும் எலிகள், பாலைவனத்தில் வாழும் ஊர்வன விலங்குகள் என அவற்றின் வாழிடத்துக்கு ஏற்ப பறவைகள் இரைகளை வேட்டையாடுகின்றன. பாறு கழுகுகள் இயற்கை துப்புரவாளர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் இறந்த விலங்குகளை மட்டுமே உண்கின்றன, உயிருடன் இருக்கும் விலங்குகளை வேட்டையாடுவதில்லை.
மற்ற வேட்டையாடி பறவைகளைப் போலக் கூர்மையான பார்வைக்குப் பதிலாக மோப்பத்திறனை இவை கொண்டுள்ளன. இறந்த விலங்குகளின் உடல் அழுகும்போது அவற்றிலிருந்து உருவாகும் வாசனையைத் தொலைவிலிருந்தே கண்டறிந்து கொள்கின்றன. பாறு கழுகுகள் அதிக அமிலம் கொண்ட செரிமான அமைப்பைப் பெற்றுள்ளன. அதனால் அழுகிய இறைச்சியில் உள்ள நுண்ணுயிரிகளை ஜீரணிக்கும் திறன் இவற்றுக்கு இருக்கிறது.
(பறப்போம்)
- writersasibooks@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT