Last Updated : 02 Jul, 2025 07:36 AM

 

Published : 02 Jul 2025 07:36 AM
Last Updated : 02 Jul 2025 07:36 AM

‘மல்யுத்த மாவீரன்’ டெரிபிள் டெட் முகில்  | வரலாறு முக்கியம் மக்களே! - 05

1877ஆம் ஆண்டில் நியூயார்க் நகரத்தின் கில்மோர் கார்டனில் பெரும் கூட்டம் கூடியது. பீட் என்கிற கரடியுடன் அதன் பயிற்சியாளர் மல்யுத்தம் செய்து காட்டினார். இதுவே மனிதனுக்கும் கரடிக்கும் நடந்த முதல் நவீன மல்யுத்தப் போட்டியாகப் பதிவாகி இருக்கிறது. அதற்குப் பிறகு காட்சிப் போட்டிகளிலும் சர்க்கஸ்களிலும் கரடி - மனிதன் மல்யுத்தப் போட்டிகள் ஆங்காங்கே நடந்தன. ஆனால், அவை பெரிதாகப் புகழ்பெறவில்லை.

மல்யுத்தத்தில் புகழ் பெறுவதற் காகவே நான் அவதரித்திருக்கிறேன் என்று கறுப்புக் கரடி ஒன்று 1949ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தது. டெட் என்பது அதற்கு வைக்கப்பட்ட பெயர். ஒரு கரடியை வைத்து வித்தை காட்ட வேண்டும் என்று மனிதர்கள் முடிவு செய்துவிட்டால், முதல் காரியமாக அது குட்டியாக இருக்கும்போதே அதன் நகங்களை எடுத்து விடுவார்கள்.

அதன் கோரைப் பற்களையும் நீக்கிவிடுவார்கள். இயற்கை தனக்களித்த ஆயுதங்கள் இன்றிதான் டெட் வளர்ந்தது. நியுஜெர்ஸியில் தனது முதல் மல்யுத்தப் போட்டியில் களமிறங்கியது. Ted: The Wrestling Bear என்று மைக் அதிர அறிவிப்பு செய்தார்கள்.

வாயைத் திறக்க இயலாதபடி கவசம் அணிந்து, டெட்டைக் களத்துக்குக் கொண்டு வந்தார்கள். நான்கு கால்களில் நடந்து வந்த அது, களத்தில் நிமிர்ந்து நின்றபோது கூட்டம் ஆர்ப்பரித்தது. டெட்டை எதிர்த்துப் போட்டியிட்டவரும் சாதாரணமானர் அல்ல. டோனி கேலண்டோ என்கிற அமெரிக்காவின் ஹெவி-வெயிட் மல்யுத்த வீரர். நியுஜெர்ஸியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டெட், டோனியை வீழ்த்தியது. மல்யுத்தக் கரடியாகத் தன்னை நிரூபித்தது.

டெட்டை வளர்த்தவர்கள், ஊர் ஊராகச் சென்று கண்காட்சி நடத்திப் பிழைப்பவர்கள். விரைவிலேயே அவர்களது நிறுவனம் திவாலாகிப் போனது. டெட்டின் திறமையைக் கண்ட டேவ் மெக்கிக்னி, அதனை வாங்கினார். அவரும் மல்யுத்த வீரர்தான். பல களங்களைக் கண்டவர். டெட்டைத் தன் வளர்ப்பு உயிரினமாக ஆக்கினார். அதற்கு முறைப்படி மல்யுத்தப் பயிற்சிகளை அளித்தார். தொடர்ந்து அதனுடன் மோதி, மோதி போட்டிகளுக்குத் தயார் செய்தார்.

1958. சுமார் 600 பவுண்ட் எடை கொண்ட ஆஜானுபாகுவான மல்யுத்தக் கரடி வீரனாக டெட், Terrible Ted என்கிற அடைமொழியுடன் களமிறங்கியது. டேவும் கரடிக்குப் போட்டியாக முடி வளர்த்திருந்தார். ஒரு காட்டுவாசிபோல உடையணிந்து டெட்டுடன் மோதுவதற்காகக் களமிறங்கினார். பழகிய கரடி என்பதால் டேவ், மல்யுத்தக் களத்தில் டெட்டைச் சமாளித்தார்.

இருந்தாலும் அதற்கு அடிக்கடி கோபம் வந்தது. தூக்கம் தடைப்பட்டாலோ பசித்தாலோ அதன் மூர்க்கத்தைக் கட்டுப்படுத்த மெனக்கெட வேண்டியிருந்தது. சில நேரம் டெட், கட்டுப்பாடு இழந்து ரிங்குக்கு வெளியே விழுந்துவிட, மக்கள் கூட்டம் பயந்து, கலையவும் செய்தது.

1966ஆம் ஆண்டில் டேவ், புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ‘டெரிபிள் டெட் உடன் மோதி, அதனை வீழ்த்தும் பார்வையாளர் களுக்கு 3 ஆயிரம் டாலர் பரிசு!’ இந்த அறிவிப்புக்குப் பலன் இருந்தது. கூட்டம் அதிகமாகக் கூடியது. பார்வையாளர்கள் சிலர், களத்தில் தைரியமாக இறங்கினர்.

பாய்ந்து வரும் டெட்டைச் சமாளிக்க முடியாமல் பயந்தோ தோற்றோ வெளியேறினர். ஜான் சிகெட்டி என்கிற ஆஜானுபாகுவான, உயரமான மனிதர் களத்தில் இறங்கினார். வியாபாரத்தைப் பெருக்குவதற்காக அந்தப் பணம் அவருக்குத் தேவைப்பட்டது. டெட் - ஜான் மோதல் என்பது ரசிகர்கள் எதிர்பார்த்த விதத்தில் கடுமையாகவே இருந்தது. இறுதியில் டெட்டின் மீது விழுந்து, அதை 15 நொடிகள் வரை எழ முடியாதபடி அடக்கினார் ஜான்.

டெட் தோல்வியடைந்ததை டேவ் ஒப்புக்கொள்ளவில்லை. ஜான், தான் வெற்றி பெற்றதற்காகப் பணம் கேட்டு டேவுடன் சண்டையிட்டார். டேவ் கோபத்தில் டெட்டின் வாய்க்கவசத்தைக் கழற்றிவிட்டார். அது ஜான் மீது பாய, அவர் களத்தை விட்டு வெளியே விழ, கூட்டம் அலற, கலவரமாகிப் போனது.

1968ஆம் ஆண்டில் ஜானுக்கு நீதிமன்றம் மூலமாக நியாயம் கிடைத்தது. விதிக்கப்பட்ட தண்டனையின் விளைவாக டெட்டையும் சில நாள்கள் சிறையில் அடைத்தார்கள். ஆம், முதலாளி செய்த தவறுக்காக, அந்தப் பாவப்பட்ட கரடியும் சிறைக்குச் சென்றது. கூண்டோ சிறையோ எல்லாம் அதற்கு ஒன்றுதானே.

அதற்குப் பிறகும் டேவ், டெட் உடன் மோதி வெல்லும் வீரருக்கு 1500 டாலர் பரிசு என்று அறிவித்தார். எட் வில்லியம்ஸ் என்கிற மகா பலசாலி முன்வந்தார். போட்டிக்கான ஒப்பந்தங்கள் எல்லாம் கையெழுத்தாயின. போட்டிக்கு முன்பாக, ‘டெட் ஆக்ரோஷ மனநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது.

ஆகவே போட்டியை ரத்து செய்கிறேன்’ என்று டேவ் அறிவிக்க, அதுவும் பிரச்சினை ஆனது. இப்படி டேவ் என்கிற முதலாளியால் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தாலும் ‘டெரிபிள் டெட்’ என்று சுமார் 18 ஆண்டுகளுக்கு மல்யுத்த நட்சத்திரமாக வலம்வந்தது. 1973ஆம் ஆண்டில் தான்யா வெஸ்ட் என்கிற வீராங்கனையுடன் முதன் முதலாக மோதி வென்றது. 1975, மார்ச் 29 அன்று தனது இறுதிப் போட்டியை டேவ் உடன் விளையாடியது. பின்பு களத்திலிருந்து ஓய்வு பெற்றது.

டேவ், ஸ்மோக்கி என்கிற இன்னொரு கரடியையும் வளர்த்து வந்தார். ஒருநாள் அதன் கூண்டு திறந்திருப்பதை டேவ் கவனிக்கவில்லை. வெளியே வந்த ஸ்மோக்கி, வீட்டில் இருந்த லின் என்கிற பெண்ணைத் தாக்கியதில் அவர் மரணமடைந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மனித உரிமை அமைப்பினர் ஸ்மோக்கியுடன் டெட்டையும் பிடித்துச் சென்றனர்.

அதற்குப் பிறகு டெட்டுக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல் கிடையாது. இருந்தாலும் மல்யுத்த உலகில் மிகவும் புகழ்பெற்ற விலங்கு வீரராக, மனிதர்களுடன் அதிகப் போட்டிகள் மோதி வெற்றி பெற்ற சாம்பியனாக, ‘டெரிபிள் டெட்’ வரலாற்றில் ஜொலிக்கிறது.

(சந்திப்போம்)

- writermugil@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x