Published : 27 Jun 2025 02:38 PM
Last Updated : 27 Jun 2025 02:38 PM
சிங்கங்கள் ஒன்றோடு மற்றொன்று தொடர்பு கொள்ள கர்ஜனை, உடல் அசைவு, வாசனை, தொடுதல் போன்ற வழிகளைக் கையாளுகின்றன. சிங்கத்தின் தொண்டையில் உள்ள குரல் நாண்கள் சதுர வடிவத்தில் இருக்கும். இந்த வடிவம் குரல் நாண்களை உறுதியாக வைத்து, அதன் வழியே காற்று நுழையும்போது பலமான ஒலியை உருவாக்குகிறது. இதனால் சிங்கங்கள் அதிக முயற்சி இல்லாமலே பலமான கர்ஜனையை எழுப்ப முடியும். ஒரு சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரம் வரை கேட்கும். ஒலியின் அளவு ஏறக்குறைய 114 டெசிபல்கள் இருக்கும்.
இவை பல்வேறு காரணங்களுக்காக கர்ஜிக்கின்றன. முதலாவதாக, தங்கள் பிரதேசத்தைக் காப்பாற்றுவதற்காக. ’இது என் இடம்’ என்று மற்ற சிங்கங்களுக்குத் தெரிவிக்கவும், எதிரிகளைப் பயமுறுத்தி விரட்டவும் கர்ஜனையைப் பயன்படுத்துகின்றன. இரண்டாவதாக, தூரத்தில் இருக்கும் தங்கள் குழு உறுப்பினர்களை அழைப்பதற்காகக் கர்ஜிக்கின்றன. ’நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொல்வது போல இந்த ஒலி அமைகிறது.
மூன்றாவதாக, இணையைக் கண்டறிவதற்கும் தன் வலிமையைக் காட்டுவதற்கும் இந்த வலிமையான ஒலியைப் பயன்படுத்துகின்றன. தொண்டை பலமாக இருந்தாலும், எல்லா ஆண் சிங்கங்களும் கர்ஜிக்காது. தனக்கென ஒரு தனிப் பிரதேசத்தைக் கொண்டுள்ள ஆண் சிங்கங்கள் மட்டுமே தைரியமாக கர்ஜிக்கின்றன. இதன் மூலம் மற்ற சிங்கங்களை எச்சரிக்கின்றன. அதிகாரத்தை வெளிப்படுத்துகின்றன.
பெரும்பாலான கர்ஜனை இரவு நேரத்தில் நடக்கிறது. விடியற்காலைக்கு முன் இந்த ஒலி அதிகமாகக் கேட்கும். ஆறு, குளங்களுக்கு அருகில் இருக்கும்போது இவை அதிகம் கர்ஜிக்கின்றன. காற்று அதிகமாக இருக்கும்போது குறைவாக கர்ஜிக்கின்றன.
தனக்கென எந்தப் பிரதேசமும் இல்லாமல் அலையும் ஆண் சிங்கங்கள் கர்ஜிப்பதில்லை. ஏனென்றால் அவை கர்ஜித்தால், அந்தப் பகுதி சிங்கங்கள் தாக்கிவிடும். இதனால் அமைதியாக இருப்பதே அவற்றுக்குப் பாதுகாப்பானது. இது சிங்கங்களின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. இவை தங்கள் நிலைமையைப் பொறுத்து நடத்தையை மாற்றிக்கொள்கின்றன.
மற்ற விலங்குகள் போல் சிங்கங்களும் தங்கள் வாசனை மூலம் தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன. ஒரு சிங்கத்தின் வாசனையை வைத்து அது ஆணா, பெண்ணா, ஆரோக்கியமாக உள்ளதா, எவ்வளவு பலம் என்று மற்ற சிங்கங்கள் தெரிந்துகொள்ளும். இது நம் கை ரேகையைப் போன்றது. இனப்பெருக்க நிலை பற்றிய தகவல்களும் வாசனையில் உள்ளன. இணை தயாராக இருக்கிறதா, கர்ப்பமாக இருக்கிறதா, சரியான நேரமா என்பதெல்லாம் தெரிந்துவிடும்.
சிங்கங்கள் பல வழிகளில் தங்கள் வாசனையை வெளிப்படுத்துகின்றன. ஆண் சிங்கங்கள் மட்டும் சிறுநீர் மூலம் வாசனையை வெளிப்படுத்துகின்றன. இவை பிரதேசத்தின் எல்லைகளைக் குறிக்க மரங்களிலும் பாறைகளிலும் சிறுநீர் கழிக்கின்றன. அதுமட்டுமன்றி முகங்களை மரங்களிலும் நிலத்திலும் உரசுவதன் மூலம் வாசனையை வெளியிடுகின்றன.
சிங்கங்கள் ஒன்றோடு மற்றொன்று உரசிக்கொள்வதன் மூலம் வாசனையை வெளியிடுகின்றன. வாலின் அசைவு மூலமும் அதன் மனநிலையை அறிந்து கொள்ளலாம். வால் நிமிர்ந்து நிற்கும்போது சிங்கம் நம்பிக்கையுடன் இருக்கிறது என்று அர்த்தம். இது ஆதிக்கம் செலுத்துவதைக் குறிக்கிறது. வால் வேகமாக அசையும்போது அது கோபமாக அல்லது எரிச்சலாக இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். வால் மெதுவாக அசையும்போது சிங்கம் அமைதியாக இருக்கிறது என்று அர்த்தம். சிங்கங்களின் முக பாவங்களை வைத்து சில உணர்வுகளை அறிந்துகொள்ளலாம். பற்களைக் காட்டினால், ’அருகில் வராதே’ என்று எச்சரிக்கை செய்கிறது என்று அர்த்தம்.
ஆண் சிங்கத்தின் மேனி பெரிய உடல் வலிமையைக் குறிக்கிறது. இது ஆரோக்கியத்தையும் காட்டுகிறது. இப்படிப்பட்ட உடல் அமைப்பு பெண் சிங்கங்களைக் கவர்ந்திழுக்கிறது. எதிரிகளையும் பயமுறுத்துகிறது.சிங்கங்கள் குழுவாக வேட்டையாடும்போது கண் சமிஞ்ஞைகள் மூலம் தொடர்பு கொள்கின்றன. ஒரு சிங்கம் இரையைப் பார்க்கும் போது குழுவில் உள்ள மற்ற சிங்கங்களும் அதே திசையைப் பார்க்கும். இது வேட்டையின் முதல் படி. இந்தத் தருணத்தில் அவை மென்மையான குரலில் முணுமுணுப்பதுகூட இல்லை. தாய் சிங்கம் குட்டிகளுடன் தொடர்புகொள்ள, மென்மையான முனகல் ஒலியை எழுப்பும்.
விஞ்ஞானிகள் 500க்கும் மேற்பட்ட இரவுகளில், 7 சிங்கங்களின் ஒலிகளை ஆய்வு செய்தார்கள். இதில் பல புதிய விஷயங்கள் தெரியவந்தன. சிங்கங்கள் தங்கள் பிரதேசத்திற்கு வெளியே மிகவும் குறைவாகவே கர்ஜிக்கின்றன. சூழல் நிலைமைகளைப் பொறுத்து ஒலிக்கும் முறையை மாற்றுகின்றன.
கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: writernaseema@gmail.com
> முந்தைய பகுதி: நரிகளும் குரைக்கும் | உயிரினங்களின் மொழி- 24
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT