Published : 11 Jul 2018 10:38 AM
Last Updated : 11 Jul 2018 10:38 AM
உடலில் உள்ள ஒன்பது முக்கிய நாளமில்லாச் சுரப்பிகளில் மிகப் பெரியது, தைராய்டு சுரப்பி (Thyroid gland). இது கழுத்தின் முன்பகுதியில் ‘ஆதாமின் ஆப்பிளுக்கு’ (Adam’s Apple) அருகில் இருக்கிறது. சரியாகச் சொன்னால், இது குரல்வளையின் கீழ்ப்பகுதி, மூச்சுக் குழாயின் (Trachea) மேற்பகுதி, இவற்றுக்கு முன்பாக, ஒட்டினாற்போல் அமைந்துள்ளது.
இது ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் இருக்கிறது. பக்கத்துக்கு ஒன்றாக, வண்ணத்துப்பூச்சியின் இறக்கைகளைப் போன்று இரண்டு ‘பக்க மடல்கள்’ (Lateral lobes) இருக்கின்றன. இவற்றின் நடுவில் இரண்டையும் இணைக்கிற குறுகிய பாலம்போல் ‘சந்தி’ (Isthmus) எனும் இடைத்திசு இருக்கிறது. இதிலிருந்து கூம்பு வடிவத்தில் மேல்நோக்கி ஒரு திசுச் சுரப்பி அமைந்திருக்கிறது. அது ‘கூம்பு மடல்’ (Pyramidal lobe). ஒருவரின் வயதைப் பொறுத்து தைராய்டு சுரப்பியின் எடை 15 - 30 கிராம் இருக்கும்.
தைராய்டு சுரப்பி இரண்டு உறைகளால் மூடப்பட்டுள்ளது. ஒன்று, ‘உண்மை உறை’ (True capsule). இது தைராய்டின் சொந்த உறை. இதற்கு வெளியில், இதைச் சுற்றியுள்ள இணைப்புத் திசுக்கள் கெட்டிப்பட்டு, ஓர் உறை போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கும். அது ‘பொய்யுறை’ (False capsule). உடலில் அதிகம் ரத்தம் பாயும் உறுப்புகளில் தைராய்டும் ஒன்று.
தைராய்டின் உள்ளே பல்லாங்குழிகள் போல் நுண்மடல்கள் (Lobules) நிறைய உள்ளன. இவற்றில் 30 லட்சம் குமிழ்ச் சுரப்பிகள் (Follicles) உள்ளன. இவற்றில் தைராய்டு கூழ்மம் (Thyroid colloid) நிரம்பி இருக்கிறது. இதில் தைரோகுளோபுலின் எனும் புரதம் இருக்கிறது. இந்தச் சுரப்பிகளைச் சுற்றியும் இடையிலும் சுத்த அணுக்கள் (Clear cells) இருக்கின்றன.
குமிழ்ச் சுரப்பிகள், மூளையின் முன் பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கப்படும் ‘தைராக்ஸின் ஊக்கி ஹார்மோ’னின் (Thyroxine Stimulating Hormone - TSH) தூண்டுதலால், தைராக்ஸின் (Thyroxine - T4), டிரை அயோடோதைரோனின் (Triiodothyronine - T3) எனும் இரண்டு முக்கியமான ஹார்மோன்களைச் சுரக்கின்றன.
இவை சரியாகச் சுரக்கப்படுவதற்கு அயோடின் சத்து தேவை. சமையல் உப்பில் அயோடின் சேர்க்கப்படுவதற்கு இதுதான் காரணம். உணவிலிருந்து கிடைக்கும் அயோடைடை குமிழ்ச் சுரப்பிகள் ரத்தத்திலிருந்து உறிஞ்சி முதலில் அயோடினாக மாற்றுகின்றன. பின்னர், அதை தைரோகுளோபுலினில் உள்ள டைரோஸின் (Tyrosine) எனும் அமினோ அமிலத்துடன் கலந்து, இந்த ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இந்த இரண்டும் நம் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தேவைப்படுகின்றன.
இவற்றின் பணிகளை இப்படிப் பட்டியலிடலாம்:
நாம் கருவில் உருவாகும் காலத்திலிருந்து உடலின் வளர்ச்சியைப் பேணுவதற்கு இந்த ஹார்மோன்கள் அதிகம் உதவுகின்றன. உடலின் எல்லாப் பகுதிகளிலும் நிகழும் வளர்சிதைமாற்றத்தைச் (Metabolism) சீராக வைத்துக்கொள்கின்றன. இதன் பலனாக, அந்தந்தத் திசுக்கள் தங்களுக்குத் தேவைப்படும் ஊட்டச்சத்துகளைப் பெற்று வளர்ந்து, சரியாகப் பணி செய்கின்றன.
நரம்புத் திசு, எலும்பு, பற்களின் வளர்ச்சியில் இவற்றின் பங்கு மகத்தானது. குறிப்பாக, குழந்தைக்கு ஒரு வயது முடிவதற்குள் மூளை நரம்புகள் வளர்ச்சியடைய வேண்டியது முக்கியம். அப்போது இந்த ஹார்மோன்கள் சரியாக இருக்க வேண்டியது கட்டாயம்.
அணுக்கள் வளர்ச்சியடைதல், முதிர்ச்சியடைதல் ஆகியவற்றை இவை கவனித்துக் கொள்வதால், எலும்பு, தசை, தோல், நரம்பு என எல்லாமே சரியாக வளர்கின்றன. கருவில் வளரும்போதும், குழந்தைப் பருவத்திலும் இவை குறைந்து போனால், உடல் வளர்ச்சி குறைந்து குள்ளத்தன்மை ஏற்படும்; மனவளர்ச்சியும் அறிவாற்றலும் குறையும். இதை ‘வளர்ச்சிக்குறை நோய்’ (Cretinism) என்கிறோம்.
அடுத்து, திசுக்களின் ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் இவைதான் கவனித்துக்கொள்கின்றன. அதனால், சரியாகப் பசி எடுப்பது, உணவைச் சாப்பிடுவது, உணவு செரிமானம் அடைவது, உணவுச் சத்துகள் உடல் திசுக்களுக்குச் சென்றடைவது என எல்லாவற்றிலும் இவற்றின் பணி அதிகம்.
உடலில் வெப்பத்தை உற்பத்தி செய்ய உதவுவதும் இவைதான். தட்ப வெப்பச் சூழல்களுக்கு ஏற்ப உடலின் வெப்பத்தை இவை சமன் செய்வதால்தான், நம்மால் குளிரையும் தாங்க முடிகிறது; கோடை வெப்பத்தையும் தாங்கிக்கொள்ள முடிகிறது.
தவிரவும், கொழுப்பு உணவையும் மாவுப் பொருட்களையும் செரிக்க உதவுவது, அணுக்களின் புரதப் புத்தாக்கத்தை மேம்படுத்துவது, உடலில் நீரின் அளவைக் கட்டுப்படுத்துவது, கொலஸ்டிராலைக் குறைப்பது, இதயத் துடிப்பைக் கண்காணிப்பது, பாலுறுப்புகளின் வளர்ச்சி, செயல்பாடுகளுக்கு உதவுவது என இன்னும் நிறையப் பணிகளை இவை மேற்கொள்கின்றன.
இவை சுரப்பது குறைந்து விட்டால், தைராய்டு வீங்கிவிடும். முன் கழுத்தில் இந்த வீக்கம் தெரியும். எச்சிலையோ உணவையோ விழுங்கும்போது, இது மேலும் கீழும் அசையும். இதை முன்கழுத்துக்கழலை (Goitre) என்கிறோம். இதன் காரணமாகக் ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) கோளாறு ஏற்படும். இது பெரியவர்களுக்கு ஏற்படும்போது, ‘குறை தைராய்டு நீர்க்கட்டு’ (Myxoedema) என்று அழைக்கிறோம். இது 16 வயது பெண்களை அதிகம் பாதிக்கிறது. குறைவாகச் சாப்பிட்டாலும் உடல் குண்டாவது இதன் முக்கிய அறிகுறிகளில் ஒன்று.
சிலருக்கு இந்த ஹார்மோன்கள் அதிகமாகச் சுரந்துவிடும். இதுவும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. இதற்கு ‘கிரேவ் நோய்’ (Grave’s disease) என்று பெயர். இதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்காவிட்டால், இதயத்தைப் பாதிக்கும்.
இந்த ஹார்மோன்கள் முதுகெலும்புள்ள எல்லா உயிரினங்களின் வளர்ச்சிக்கும் அவசியம். உதாரணமாக, தவளைகளுக்கு இவை சுரப்பது குறைந்துவிட்டால், தலைப்பிரட்டை நிலையில் அவற்றின் வளர்ச்சி நின்றுவிடும்; முழு தவளையாக வளர முடியாது.
தைராய்டு கால்சிடோனின் (Calcitonin) எனும் ஹார்மோனையும் சுரக்கிறது. ரத்தத்தில் கால்சியத்தின் அளவு அதிகமானால், அதைக் குறைத்து சமன் செய்யும் ஹார்மோன் இது.
சரி, இப்போது தைராய்டு தெரியும். ‘பாராதைராய்டு’ தெரியுமா? அது பற்றி அடுத்த வாரம்.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT