Published : 25 Jun 2025 07:03 AM
Last Updated : 25 Jun 2025 07:03 AM
வங்கி ஊழியரான அதியமானின் அம்மாவுக்கு வேறு ஊருக்கு மாற்றலாகி இருந்தது. எனவே அந்தப் புதிய ஊரில் உள்ள ஒரு பள்ளியில் அவன் சேர்க்கப்பட்டான். முதல் இரண்டு நாள்கள் புதிய சூழல், புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் என்று சுவாரசியமாகவே இருந்தது. மூன்றாவது நாள் மாலை பையைத் தோளில் மாட்டிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். அதியமானுக்குக் கணிதம் என்றால் மிகவும் பிடிக்கும்.
அந்தப் பள்ளியில் கணித ஆசிரியர் கதிரையும் அவனுக்குப் பிடித்திருந்தது. அவர் மூலம் அங்கே ஒரு கணித மன்றம் இருப்பதையும் அறிந்து கொண்டான். அம்மா இன்றும் தாமதமாக வருவாரா என்று யோசித்துக்கொண்டே நடந்த அதியமான் திடீரென்று, காலில் ஒரு கல் இடறுவதை உணர்ந்தான். அழகாகச் செங்கற்கள் வரிசையாகப் பதிக்கப்பட்ட, பள்ளிக்கூடத்திற்கும் வாயிலுக்கும் இடையிலான பகுதி அது. முதலில் கவனிக்காமல் நடந்தான்.
பிறகு வரிசையாகக் கற்களில் அவன் தடுக்கிக் கொண்டான். பூமியோடு பதிக்கப்பட்டு இருந்த செங்கற்களில் ஆங்காங்கே சில கற்கள் மட்டும் வெளியே சற்று நீட்டிக் கொண்டிருந்தன. ஒரு நிமிடம் நின்றான் அதியமான். இடறும் கற்கள் அவனுக்கு எதையோ உணர்த்துவது போல இருந்தது. வரிசையாக இந்தக் கற்களில் எத்தனையாவது கல் இடறுகிறது என்பதை அவன் கணக்கிட்டுப் பார்த்தான்.1, 2, 3, 5, 8 என்கிற வரிசையில் கற்கள் மண்ணில் இருந்து மேல்நோக்கிச் சற்றே பிதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக அவன் மனம் துள்ளத் தொடங்கியது. அடுத்து 13, 21 வருகிறதா என்று பரிசோதித்துப் பார்த்தான்.
உண்மையிலேயே 13வது செங்கல், 21வது செங்கல் சற்று மேலெழுந்த வாரியாகப் பதிக்கப்பட்டு இருந்தன. அவை கதிர் சாரும் அவனும் உரையாடிய ஃபிபனாச்சி எண்கள். அதாவது, முதல் இரண்டு எண்களைக் கூட்டினால் மூன்றாவது எண் கிடைக்கும். அவ்விதம் அமைந்த எண்களின் தொடர். அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘அடுத்து 34... 55...’ என்று நினைத்துக் கொண்டே நடந்தான். அவன் நினைத்தது போலவே 34வது செங்கலும் 55வது செங்கலும் சற்றே மேலே எழும்பி இருந்தன.
மீண்டும் தொடங்கிய இடத்திற்குச் சென்றான் அதியமான். அங்கிருந்து 1, 2, 3, 5, 8... பிறகு 13, 21, 34, அப்புறம் 55… என்று தாவித் தாவி ஃபிபனாச்சி எண் செங்கற்களின் மீது காலைப் பதித்தான். அப்போது 55வது செங்கலில் ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருப்பதைக் கண்டான். ‘ஃபிபனாச்சி எண் 55 உடன் ராமானுஜன் எண்ணைப் புரட்டிப் போட்டால் எதிர்காலம் பிறக்கும்.’ ராமானுஜன் எண் என்றதும் அவன் நினைவுக்கு வந்தது 1729. ‘எதிர்காலம் பிறக்குமா!’ செங்கல் 55லிருந்து 9271 என்று ராமானுஜன் எண
ணைத் திருப்பிப் போட்டு, செங்கற்களின் மீது தாவினான். பள்ளிக்கு உள்ளே ஓரமாக வளர்ந்து இருந்த ஒரு புதருக்கு அருகில் 1 என்று முடிந்தது. அங்கே ஓர் இரும்பு கதவு மூடப்பட்டு இருந்தது. அந்தக் கதவில் எதிர்காலம் என்று எழுதப்பட்டிருந்தது. அருகில் ஒருவரும் இல்லை. கதவின் அருகே சென்று அதனைத் தள்ளினான். கதவிற்கு உள்ளே படிக்கட்டுகள். என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்று படிக்கட்டுகளில் இறங்கினான். தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது.
‘அருமை! அசத்திவிட்டாய் அதியமான்!’ என்று கைதட்டியபடி மூன்று பேர் அவனை நோக்கி வந்தார்கள். அவர்களில் கணித ஆசிரியர் கதிரும் இருந்தார். “இதுதான் ராமானுஜன் கணித மன்றம். இளம் கணித மேதைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்து, அவர்களின் உயர் படிப்புக்குச் செலவு செய்து, ஒரு மேதையாகும் வரை உதவுவோம்” என்றார் கதிர்.
“உள்ளூரில் மூன்று பள்ளிகளில் இதுபோல கணிதப் பொறிகளை அமைத்திருக்கிறோம். நீதான் முதலில் இங்கு வந்து சேர்ந்து, எங்களை ஆச்சரியப்பட வைத்துவிட்டாய்! உண்மை யிலேயே நீ ஒரு இளம் கணித மேதைதான்” என்றார் இன்னோர் ஆசிரியர். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் அதியமான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT