Published : 20 Jun 2025 11:50 AM
Last Updated : 20 Jun 2025 11:50 AM
நரிகள் ஒன்றோடு மற்றொன்று தகவல் தொடர்புகொள்ள ஒலிகள், உடல் மொழி, வாசனைக் குறிப்புகள் எனப் பல வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. நரிகளின் ஒலி தொடர்பு பன்முகத்தன்மை கொண்டது. 1992 ஆம் ஆண்டு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியின்படி, நரிகளால் குறைந்தது இருபது தனித்துவமான ஒலிகளை உருவாக்க முடியும். வளர்ந்த நரிகள் பன்னிரண்டு வகையான ஒலிகளையும், குட்டிகள் 8 வகையான ஒலிகளையும் எழுப்பும் திறன் கொண்டவை. ஒவ்வோர் ஒலிக்கும் வெவ்வேறு அர்த்தம் உண்டு.
நரிகள் ஊளை மட்டும் இடுவதில்லை. சில நேரம் நாய்கள் போல் குரைக்கும். அப்போது அதன் சத்தம் மிகக் கூர்மையானதாக இருக்கும். மற்ற நரிக் கூட்டம் தனது எல்லைக்குள் வரும்போதும் குரைக்கும். பொதுவாக இது எச்சரிக்கைக்கான செயல். அதுவே ஆக்ரோஷத்துடன் இருக்கும்போது, குட்டி நரிகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது, சண்டையிடும் போது, ’அக்...அக்...அக்க்கூவ்.. அக்..அக்’ என்கிற ரிதத்தில் ஊளையிடும்.
குட்டி நரிகள் ஊளையிடும் போது ஒரு தொனியில் அலறும். அந்தச் சத்தத்தைப் பெரிய நரிகளால் நகலெடுக்க முடியாது. அவை தாயுடன் தொடர்புகொள்ளும் போதும், பசி மற்றும் பாதுகாப்பின்மையின் போதும் அலறும். வயதுவந்த நரிகள் அலறுகிறது என்றால் அது பயத்தில் அல்லது ஏதோ அசௌகரியத்தில் இருக்கிறது என்று அர்த்தம்.
நிம்மதியாக, மகிழ்ச்சியாக, குதூகலமாக இருக்கும் போது நரிகள் முணுமுணுக்கும்.
எல்லா விலங்குகளின் தொடர்பு மொழியையும் எடுத்துக் கொண்டால், அவை ஒலிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதன் ஒவ்வோர் அசைவும் ஒரு தொடர்பு மொழி. நரியின் மனநிலையை அறிந்துகொள்ள அதன் வாலைக் கவனித்தால் போதும். வால் மேல்நோக்கி இருந்தால் அது சந்தோஷமாக இருக்கிறது என்று அர்த்தம். பயந்த நரி வாலைக் கீழே தொங்கவிடும். வால் விறைப்பாக இருந்தால், அது கோபத்தில் இருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
காதுகள் வெறுமனே கேட்பதற்கு மட்டுமல்ல. அதன் அசைவுகளை வைத்து நரியின் மொழியைப் புரிந்துகொள்ள முடியும். நரிகளின் காது ஓர் இடத்தில் நிற்காது. இப்படியும் அப்படியும் ஏதோ ஓர் அசைவைக் காட்டிக் கொண்டே இருக்கும். நரிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும் போது அவற்றின் காதுகள் நிமிர்ந்து நிற்கும். பயம் வந்துவிட்டால் , காதுகள் பின்னோக்கி மடங்கிவிடும்.
ஒரு நரி நேராக, கம்பீரமாக நடக்கிறது என்றால் அது அந்தக் கூட்டத்தின் தலைவனாக இருக்கும். அதற்கு முன் கீழ்ப்படியும் நரிகள், உடலைத் தாழ்த்திக்கொள்ளும்.
இனப்பெருக்கக் காலத்தில் இவை எழுப்பும் ஒலி மற்ற ஒலிகளைவிட மிகவும் வித்தியாசமானது. பெண் நரி ரத்தத்தை உறைய வைக்கும் அளவுக்கு உச்சஸ்தாயில் கத்தும். அது பயத்தால் ஊளையிடுவது அல்ல, தன் இணையைத் தேடிக்கொண்டிருக்கும் போது, தான் தயார் நிலையில் இருக்கிறேன் என்று கூறுவதாக இருக்கும். ஆண் நரிகளும் சும்மா இருப்பதில்லை, ஹப்..ஹப்.. என்கிற ஒலிகளைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்கும்.
இணையைத் துரத்துவது போல், பாய்வது போல் போலி சண்டையில் ஈடுபடும். பெண் நரி தன் உடலை வளைத்து வயிற்றுப் பகுதியைக் காட்டும். ஆண் நரி அதன் வாசனையை நுகரும்.
கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் எலினோர் கீன் என்கிற ஆராய்ச்சியாளர் நரிகளின் வாசனைச் சுரப்பிகளில் 80க்கும் மேற்பட்ட வெவ்வேறு ரசாயனக் கலவைகள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளார். நரிகளின் முகர்வுத் தன்மை மனிதர்களை விட ஆயிரம் மடங்கு அதிகம்.
நரிகளுக்குப் பல இடங்களில் வாசனைச் சுரப்பிகள் உள்ளன. குதவாய் இருபுறமும் உள்ள குதப்பைகள் வாசனையை வெளியேற்றுகின்றன. தாடைப் பகுதியிலும், வாலின் நுனிப்பகுதியிலும் வாசனைச் சுரப்பிகள் உள்ளன. தன் இருப்பிடத்தில் உள்ள பாறைகள், செடிகள் போன்றவற்றில் வாலை, தாடையைத் தேய்க்கும். அதுமட்டுமன்றி, ஆண் நரி கடந்து செல்லும் இடங்களில் சிறுநீர் கழிக்கும். நரிகள் தங்கள் பிரதேசத்தின் எல்லைகளையும் பெண் நரிகளையும் குழுவையும் மற்ற நரிகளிடமிருந்து காக்க இந்த வாசனைக் குறியீடுகள் உதவுகின்றன.
இன்னும் சில ஆராய்ச்சிகள் தொழில்நுட்பம் கொண்டு நடந்து கொண்டிருக்கின்றன. அதன் முடிவுகள் வெளிவரும் போது மேலும் பல தகவல்கள் தெரியவரும்.
கட்டுரையாளர், எழுத்தாளர் - தொடர்புக்கு : writernaseema@gmail.com
முந்தைய அத்தியாயம்: புறாக்களின் மொழி | உயிரினங்களின் மொழி - 23
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT