Published : 18 Jun 2025 07:12 AM
Last Updated : 18 Jun 2025 07:12 AM
‘ஐயையோ… வீடு தீப்பிடிச்சிருச்சு... பூனை உள்ளேதான் இருந்துச்சு. முதல்ல அதைக் காப்பாத்துங்க...’ பண்டைய எகிப்தில் வீடு ஒன்று தீப்பிடித்து விட்டால் எகிப்தியர்கள் வீட்டில் இருப்பவர்களோடு தங்கள் குடும்ப உறுப்பினராகவே கருதிய செல்லப் பூனைகளைக் காப்பாற்றுவதில் கவனமாக இருந்திருக்கிறார்கள்.
அன்றைய எகிப்தியர்களுக்கு உயிருக்கு நிகரான செல்லமான உயிரினம் என்றால் அது பூனைதான். எகிப்தியர்கள் வழிபட்ட கடவுள்களில் விலங்குகள், பறவைகள் உருவம் கொண்டவர்களே அதிகம். அதில் பூனையும் முக்கியமான கடவுள். அந்தப் பெண் மியாவ் கடவுளின் பெயர் ‘பாஸ்டெட்’.
பாம்புகளிடமிருந்தும் எலிகளிடமிருந்தும் வீட்டில் வளர்க்கும் பூனைகளே தங்களைப் பாதுகாப்பது போல, தீய சக்திகளிடமிருந்து பாஸ்டெட் தங்களைக் காப்பதாகக் கருதினார்கள். வீட்டில் பூனை இருந்தால் அதிர்ஷ்டம், நல்ல விஷயங்கள் நடக்குமென உறுதியாக நம்பினார்கள். வசதியான எகிப்தியர்கள் தாங்கள் வளர்க்கும் பூனைகளுக்கு ஜிமிக்கி கம்மல் முதல் நெக்லெஸ், கொலுசு வரை போட்டு அழகு பார்த்தார்கள்.
ஒரு வீட்டில் பூனை இறந்துவிட்டால், ஆண்கள் தங்கள் புருவங்களை மழித்துக்கொண்டனர். மீண்டும் புருவம் வளரும் வரை செத்துப்போன பூனையை நினைத்து துக்கம் கொண்டாடினர். பூனையைக் கொல்வது என்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. பெர்-பாஸ்ட் என்கிற பண்டைய எகிப்திய நகரத்தில் பூனைக்கான பிரம்மாண்டமான கோயிலும் கட்டப் பட்டிருந்தது.
தாங்கள் வளர்க்கும் பூனை இறந்துவிட்டால், அதன் உடலை அழகுபடுத்தி, பதப்படுத்தி, மம்மியாக் கினார்கள் எகிப்தியர்கள். ஆம், பண்டைய எகிப்தில் மியாவ் மம்மிகளும் இருந்தன! சுமார் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் வாழ்ந்த இளவரசர் தூத்மோஸ்.
அவரின் செல்லப்பிராணி டா-மியு என்கிற பெண் பூனை. இளம் வயதிலேயே இளவரசர் இறந்து போக, அவருக்கென்று எகிப்திய பாணி கல்லறை உருவாக்கப்பட்டது. அவரின் செல்லமான டா-மியு பட்டத்து இளவரசருக்கான மரியாதையோடு தன் மீதி காலத்துக்கும் வாழ்ந்து மறைந்தது. அதுவும் இளவரசரோடு ‘மம்மி’யாக வைக்கப்பட்டது.
சரி, செல்ல உயிரினங்களையும் ஏன் ‘மம்மி’ ஆக்கினார்கள்? எகிப்தியர்கள் மரணத்தை ஒரு முடிவாகப் பார்க்கவில்லை. புதிய வாழ்க்கையில் இன்னொரு தொடக்கம் என்று நம்பினார்கள். ஆக, இன்னோர் உலகத்துக்குச் செல்லும் உடலைப் பத்திரமாக அனுப்பி வைக்க, கவனத்துடன் பதப்படுத்தி ‘மம்மி’ ஆக்கினார்கள். அந்த நபரோடு தொடர்பு கொண்ட பொருள்களையும், அவருக்கு விருப்பமானவற்றையும் கல்லறையில் வைத்தார்கள்.
கூடவே, அவரின் பணியாளர்களும், நெருங்கிய உறவினர்களும் அதே கல்லறையில் புதைக்கப்பட்டார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக, இறந்த நபர் வளர்த்த செல்ல உயிரினங்களும் ‘மம்மி’களாக வைக்கப்பட்டன. எல்லாமே அந்த நபரோடு புதிய உலகத்தில் கூடிக்குலாவி வாழுமென நம்பினார்கள்.
பொ.ஆ.மு. (கி.மு.) பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்திய ராணி இஸியம்கேப். அவர் சிறுமான் ஒன்றை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். ஒருநாள் மான் இறந்து போனது. இஸியம்கேப், சகல மரியாதையுடன் அதன் இறுதிச் சடங்குகளை மேற்கொண்டார். அதை ‘மம்மி’ ஆக்கவும் உத்தரவிட்டார். ஓர் உடலை மம்மியாக மாற்றும் வேலை என்பது அதிகச் செலவு வைக்கக்கூடியது.
அதுவும் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உடலை வைக்கும் பெட்டியைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கித் தயாரிப்பார்கள். அந்தச் செல்ல மானின் உடலை வைப்பதற்கான பெட்டியும் மிகுந்த கவனத்துடன், மிகச் சரியான அளவுகளுடன் தயாரிக்கப்பட்டது. பெட்டியின் மேல்பக்கம் அந்த மானின் உருவமும் அழகாகச் செதுக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்தச் செல்ல மான் மம்மி, ராணி இஸியம்கேப்பின் கல்லறையில் கண்டெடுக்கப்பட்டது.
பூனை அளவுக்குச் செல்வாக்குடன் இல்லா விட்டாலும், நாய்களும் பண்டைய எகிப்தியர்களின் செல்லங்களாக வாலாட்டித் திரிந்திருக்கின்றன. எஜமானர்களோடு புதைக்கப்பட்ட நாய்களின் எலும்புகளும் பிற்காலத்தில் அதிகம் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. 1906ஆம் ஆண்டில் எகிப்தில் அகழ்வாராய்ச்சி நடத்திய எட்வர்ட் ஆர். அயர்டன், அரசர் இரண்டாம் அமென்ஹோடெப் கல்லறை அருகே இன்னொரு சிறு கல்லறையைக் கண்டார்.
KV50 என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்தக் கல்லறையில் ஒரு வசதியான, பெயரறியா மனிதர் புதைக்கப் பட்டிருந்தார். அவரோடு செல்ல நாயும் பாசக்கார பபூன் குரங்கும் சேர்த்தே புதைக்கப்பட்டிருந்தன. அந்த நாயும் குரங்கும் எஜமானரோடு சந்தோஷமாக வாழ்ந்த பண்டைய எகிப்திய நாள்களை நாமே கற்பனை செய்துகொள்ள வேண்டியதுதான்.
மாட்கரே முடெம்ஹாத், கி.மு. பதினோராம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த பெண் மதகுரு. மாட்கரேவின் கல்லறையானது 1881ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதில் மாட்கரேவின் மம்மிக்குக் கீழே மிகச் சிறிய மம்மி ஒன்று இருந்தது. அது அவரின் குழந்தையாக இருக்கும் என்று நினைத் தார்கள்.
1968ஆம் ஆண்டில் எக்ஸ்ரே பரிசோதனை மூலம், அது குழந்தை அல்ல, ஆப்ரிக்கன் கிரீன் குரங்கு என்று கண்டறிந்தார்கள். குழந்தைபோல வளர்க்கப்பட்ட குரங்குக்கு மாட்கரே என்ன பெயர் வைத்திருந்தார் என்று தெரியவில்லை.
கீரிப்பிள்ளைகளையும் எகிப்தியர்கள் செல்லங்களாக வளர்த்திருக்கிறார்கள். அவை ‘அரசர்களின் செல்லப் பூனைகள்’ என்று அழைக்கப்பட்டிருக்கின்றன. அவையும் மம்மிகளாக்கப்பட்டிருக்கின்றன. பல செல்லப் பறவைகளின் மம்மிகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றைக்கூடவா செல்லமாக வளர்த்திருக் கிறார்கள் என்று பண்டைய எகிப்தியர்கள், நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறார்கள். அதில் முதல் விலங்கு, சிங்கம். பல்வேறு கலாச்சாரங்களில் இருந்ததைப் போலவே எகிப்தியர்களும் சிங்கங்களைப் ‘பெருமை’க்கு வளர்த்திருக்கிறார்கள். 2019ஆம் ஆண்டில்கூட எட்டு மாதச் சிங்கக்குட்டி ஒன்றின் மம்மியைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
அடுத்த விலங்கு நீர்யானை. மனிதர்களோடு ஒட்டி உறவாடாத நீர்யானைகளும் எகிப்திய அரண்மனைகளில் செல்லங்களாகச் சேற்று நீரில் புரண்டிருக்கின்றன. எகிப்திய தெய்வம் டவெரெட் என்கிற நீர்யானையே அந்தப் பாசத்துக்குக் காரணம். நீர்யானைக் குட்டியின் மம்மிகளும் அங்கே கண்டெடுக்கப்பட்டன. மூன்றாவது விலங்கு முதலை. எகிப்தியர்கள் வணங்கிய முதலைக் கடவுளும் உண்டு.
அவர்கள் முதலைகளையும் குளம் கட்டி செல்ல விலங்குகளாக வளர்த்திருக்கிறார்கள். முதலை ‘மம்மி’களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட விலங்குகளின், பறவைகளின் மம்மிகள் எகிப்தில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன. அதில் அதிக எண்ணிக்கையில் செல்ல மம்மிகளாக வலம்வருபவை பூனைகளே!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT