Published : 18 Jun 2025 07:05 AM
Last Updated : 18 Jun 2025 07:05 AM
மனிதர்களைப் போலவே பறவைகளின் உடலிலும் 60-75 சதவீதம் நீர் உள்ளது. வளர்ந்த பறவைகளைவிடச் சிறிய பறவைகளின் உடலில் இருக்கும் நீரின் அளவு சற்று அதிகம். பறவைகளுக்கும் தாகம் ஏற்படும். கோடைக் காலத்தில் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போதும், பறக்கும்போதும் பறவைகளின் உடல் வறட்சி அடையும். உடலில் உள்ள நீர்ச்சத்துக் குறைவதால் தாகம் ஏற்படுகிறது. நீரைக் குடிப்பதன் மூலம் பறவைகள் தங்களுடைய நீர்ச்சத்து சமநிலையைப் பேணுகின்றன.
பறவைகளுக்குப் போதிய அளவு நீர் கிடைக்காதபோது நீரிழப்பு நிலைக்கு உள்ளாகி, அவற்றின் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். மேலும் பறவைகளின் இடப்பெயர்வு, இனப்பெருக்கம் நடைபெறும் காலத்தில் அதிக அளவில் ஆற்றலைச் செலவிடுவதால் நீர் முக்கியமானது. பெண் பறவைகள் முட்டையிடும்போது, முட்டையின் உள்ளே இருக்கும் திரவப் பகுதி கருவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. உடலில் போதுமான நீர்ச்சத்து இருந்தால்தான் ஆரோக்கியமான முட்டைகளை இட முடியும்.
பறவைகளின் வாழிடம், அலகு, நாக்கு போன்ற பலவும் அவை தண்ணீர் குடிக்கும் முறையில் முக்கியப் பங்காற்றுகின்றன. புறாக்களும் கிளிகளும் தங்கள் அலகை நீருக்குள் செலுத்தி, நாக்கைப் பயன்படுத்தித் தண்ணீரை உறிஞ்சுகின்றன. அலகை நீரில் வைத்து, தொடர்ச்சியாக உறிஞ்சுவதன் மூலம் நீரை உட்கொள்கின்றன. இந்த முறையில் விரைவாக நீரைப் பருக முடியும்.
சிறிய பறவைகள், கொக்குகள், நாரைகள் போன்ற நீர்ப்பறவைகள் தங்கள் அலகின் மூலம் நீரை எடுத்து, தலையைப் பின்னோக்கிச் சாய்த்து, தொண்டைக்கு அனுப்புகின்றன. முதலில் தண்ணீரை அலகில் சேர்த்து வைத்து, பின்னர் அலகை மூடிக் குடிக்கின்றன. தேன் சிட்டுகள் போன்ற பறவைகள் நீளமான நாக்கைப் பயன்படுத்தி, பூக்களில் உள்ள தேனையும் சில நேரம் நீரையும் பருகுகின்றன. அவற்றின் நாக்கின் நுனியில் சிறிய தூரிகை போன்ற அமைப்பு, திரவத்தை உறிஞ்ச உதவுகிறது. இந்தப் பறவைகள் மலர்களில் உள்ள தேனை உறிஞ்சுவது போலவே நீரையும் உட்கொள்கின்றன.
வாத்து, கொக்கு போன்ற நீர்ப்பறவைகள், தங்கள் உடல் முழுவதையும் நீரில் மூழ்கடித்து, நீரை உட்கொள்கின்றன. இந்தப் பறவைகள் நீரில் உள்ள உணவையும் நீரையும் ஒரே நேரத்தில் உட்கொள்ளும் திறன் கொண்டவை. பாலைவனப் பகுதிகளில் வாழும் பறவைகள், தண்ணீரை நேரடியாகக் குடிப்பதற்குப் பதிலாக, அவை உண்ணும் பழங்கள், இலைகள், பிற தாவரங்களில் இருந்து நீரைப் பெறுகின்றன.
சிறிய பறவைகள் மழைக்குப் பிறகு இலைகளில் படிந்திருக்கும் நீர்த்துளி களையும், காலையில் புற்களில் படிந்திருக்கும் பனித்துளிகளையும் குடித்துத் தாகத்தைத் தீர்த்துக் கொள்கின்றன. பாலைவனப் பறவைகள் நீர் ஆதாரங்கள் குறைவாக உள்ள இடங்களில் வாழ்வதற்கு ஏற்றவாறு, பரிணாமத்தில் தகவமைப்பைப் பெற்றுள்ளன. வறண்ட நிலப்பரப்புகளில் வாழும் பறவைகள் தங்கள் சிறுநீரகங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்துகின்றன. அவை மிகக் குறைந்த அளவு நீரை வெளியேற்றி, உடலில் அதிக நீரைத் தக்கவைத்துக்கொள்கின்றன.
சில பறவைகள் தாங்கள் உண்ணும் உணவில் இருந்து தேவையான நீரைப் பெறுகின்றன. பழங்கள், பூச்சிகள் போன்ற ஈரப்பதம் நிறைந்த உணவு வகைகளை உண்ணும் பறவைகளுக்கு நேரடியாக நீர் அருந்தும் தேவை குறைவாக இருக்கலாம். சில பறவைகள் தங்கள் உடலில் நீரைச் சேமித்து வைக்கும் திறனைக் கொண்டுள்ளன. சில வகை ஆப்ரிக்க கல் கெளதாரி (Sandgrouse) தங்கள் இறகுகளில் நீரை உறிஞ்சி, நீண்ட தூரம் கொண்டு சென்று குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றன.
சில கடல் பறவைகள் பறக்கும்போதே கடலின் மேற்பரப்பில் உள்ள நீரை அலகால் தொட்டுப் பருகும் திறனைக் கொண்டுள்ளன. இது அவற்றுக்கு நீண்ட தூரம் பறக்கும்போது நீர்ச்சத்தை இழக்காமல் இருக்க உதவுகிறது. கடல்பறவைகள் உப்பு நீரைப் பருகுகின்றன. இவற்றின் கண்களுக்கு மேலே உப்புச் சுரப்பிகள் உள்ளன. அவை அதிகப்படியான உப்பை வெளியேற்று கின்றன. இதனால் நன்னீர், உப்பு நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி பறவைகளால் உயிர் வாழமுடிகிறது.
பறவைகள் நீண்ட வலசையின்போது உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி ஆற்றலைப் பெறுகின்றன. தண்ணீரைத் தேடுவதில் நேரம் செலவழிக்காமல் கிடைக்கும் உணவில் இருந்தே நீரைப் பயன்படுத்திக்கொள்கின்றன. சுத்தமான நீர் பறவைகளுக்கும் தேவை. அதிகமாக மாசடைந்த நீர் பறவைகளுக்கும் தீங்கு விளைவிக்கிறது.
(பறப்போம்)
- writersasibooks@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT