Published : 11 Jun 2025 07:33 AM
Last Updated : 11 Jun 2025 07:33 AM
“நாங்க வியர்டோவைப் பார்க்க வந்திருக்கோம்.” "சரி, கைகளுக்கு கையுறை போட்டுக்கோங்க. இல்லேன்னா, உங்க விரல்களுக்குப் பாதுகாப்பு இல்ல.” ”நான் வியர்டோவை போட்டோ எடுக்க வந்திருக்கிறேன்.” ”ஓ. சரி, வேலிக்கு இந்தப் பக்கம் இருந்து எடுங்க. இல்லேன்னா உங்க கேமரா லென்ஸை அது உடைச்சுரும்.” கலிபோர்னியாவின் வெஸ்ட் பாயிண்ட்டில் அமைந்த கோழிப் பண்ணை ஒன்றில் வியர்டோ என்கிற அந்தப் பிரம்மாண்ட ‘தல’ சேவல் வாழ்ந்துவந்தது. அதன் வாழ்க்கைக் கதை 1964ஆம் ஆண்டில் இருந்து ஆரம்பமாகிறது.
வெஸ்ட் பாயிண்ட்டில் வாழ்ந்துவந்த சல்லென்ஸ் என்பவர், தன் நண்பருடன் பந்தயம் கட்டி விளையாடி, ஜெயித்தார். பணம் இல்லாத நண்பர், அதற்குப் பதிலாக சல்லென்ஸிடம் சில கோழிக்குஞ்சுகளைத் தூக்கிக் கொடுத்தார். அதை வீட்டுக்கு எடுத்துவந்த அவர், தன் ஒன்பது வயது மகன் கிராண்ட் சல்லென்ஸிடம் கொடுத்தார். கிராண்ட் அப்படியே அந்தக் கோழிக்குஞ்சுகளை வீட்டின் பின்புறம் விட்டுவிட்டான்.
அவை மேய்ந்தன. தானாகவே வளர்ந்தன. ஆனால், அந்தக் குளிர்காலத்தில் பாதி இறந்து போயின. பிழைத்துக் கிடந்த மீதி கோழிக் குஞ்சுகளைப் பார்த்த கிராண்டுக்கு யோசனை ஒன்று தோன்றியது. ‘இந்தக் கடும் குளிரிலும் இவை பிழைத்துவிட்டன. அப்படி என்றால் இந்தக் கோழிக்குஞ்சுகளைக் கொண்டு ஆரோக்கியமான கலப்பின, புது ரகக் கோழிகளை உருவாக்கலாம்.’
தன்னிடமிருந்த சில கருவிகள், இன்குபேட்டர் ஆகியவற்றைக் கொண்டு கிராண்ட் விளையாட்டுத்தனமாகக் கோழிப்பண்ணை அமைத்து, ஆராய்ச்சிகளைத் தொடங்கினான். சில வருடங்களுக்கு அதில் ஆர்வம் செலுத்தினான். புதிய ரக ஆரோக்கியமான வெள்ளை இனம் ஒன்று கொழுகொழுவென உருவானது. அதற்கு White Sully என்று பெயரிட்டான். அப்படி கிராண்டால் உருவாக்கப்பட்ட புதிய ரகக் கோழி ஒன்று, ஒருநாள் மிகப்பெரிய முட்டை ஒன்றை இட்டிருந்தது. அதற்குப் பிறகு அந்தக் கோழி முட்டையே இடவில்லை. அந்த மெகா முட்டையிலிருந்துதான் ‘அவன்’ பிறந்தான்.
மளமளவென வளர்ந்தான். வெறும் 18 வார காலத்திலேயே மூன்று வயது சேவல் எவ்வளவு பெரியதாக இருக்குமோ, அப்படி வளர்ந்து நெஞ்சை நிமிர்த்தி நின்றான். ‘என்னடா, இது விசித்திரமான, விநோதமான சேவலாக இருக்கிறது’ என்று நினைத்த கிராண்ட் அதற்கு, அதே அர்த்தத்தில் Weirdo என்று பெயர் வைத்தார். 1971ஆம் ஆண்டில் வியர்டோவின் எடை 23 பவுண்ட். அதாவது சுமார் 10.4 கிலோ. மூர்க்கமான சேவலாகவே திரிந்தான் வியர்டோ.
இரண்டு பூனைகளைக் கொன்றது. ஒரு நாயின் கண்ணைக் கொத்தியது. கேமராக்களின் லென்ஸை உடைத்தது. உணவு கொடுக்க வந்த மனிதர்களின் விரல் நுனியைக் கிழித்தது. பண்ணையின் பொருள்கள் பலவற்றைச் சேதப்படுத்தியது என்று வியர்டோ மீது ஏகப்பட்ட புகார்கள் உண்டு.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னை வளர்த்த கிராண்ட்டையே தாக்கியதில், அவருக்கு எட்டுத் தையல்கள் போடும் அளவுக்குக் காயம் உண்டானது. இந்தச் சேவல், கலிபோர்னியாவின் புகழ்பெற்ற உயிரினமாகவும் செய்திகளில் இடம்பெற்றது. உலகின் மிகப்பெரிய சேவல் என்கிற சாதனைக்குச் சொந்தக்காரனாகவும் கருதப்பட்டது.
1980ஆம் ஆண்டில் எர்ரோல் மோரிஸ் என்கிற திரைப்பட இயக்குநர் Weirdo என்கிற பெயரில் மெகா சேவலைப் பற்றித் திரைப்படம் எடுக்கப் போகிறார் என்கிற பேச்சு வந்தது. படம் எடுக்கப்படவில்லை. அதன்பின் கிராண்ட் பற்றியோ, வியர்டோ குறித்தோ எந்தத் தகவலும் இல்லை.
1945, செப்டம்பர் 10. அமெரிக்காவின் கொலரடோ மாகாணத்திலுள்ள ஃபுரூட்டா நகரைச் சேர்ந்த விவசாயி ஆல்சென், சமையலுக்கு வீட்டின் கொல்லைப்புறத்தில் மேய்ந்து கொண்டிருந்த, அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காத கோழியான ‘மைக்’கைப் பிடித்தார். வெட்டுவதற்கேற்ற கோணத்தில் அதனைப் பிடித்துக் கொண்டார். கத்தியை ஓங்கினார்.
ஒரே வெட்டு. மைக்ரோ செகண்டில் ‘மைக்’கின் தலை துண்டாகியிருக்க வேண்டும். ஆனால் மைக், கழுத்தைச் சட்டெனக் கொஞ்சம் உள்ளிழுத்துக் கொள்ள, அதன் கொண்டை, அலகு, கண்கள், ஒரு காது அடங்கிய முகத்தின் முன்பகுதி மட்டும் தனியே துண்டாக விழுந்தது. மூளையும் லேசாகச் சேதமடைந்திருந்தது. ஆனால், மூளைக்கும் இதயத்துக்கும் இடையில் ரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளங்கள் வெட்டுப்படவில்லை.
அரைகுறையாக வெட்டுப்பட்டாலும் மைக், சிறிது நேரத்தில் அடங்கிவிடும் என்று ஆல்சென் நினைத்தார். ஆனால், அவர் பிடியிலிருந்து நழுவி, ரத்தம் சொட்டச் சொட்ட அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தது மைக், தலை இல்லாமல்! மரணத்தை முத்தமிட்டுத் திரும்பிய மைக்கை, அதற்குமேல் கொல்ல மனமில்லாத ஆல்சென், அதனைப் பிடித்துக் காயத்துக்கு வைத்தியம் பார்த்தார்.
ஓரிரு நாள்கள் கடந்தன. மைக் சாகவில்லை. இங்க் பில்லர் மூலம் மைக்கின் தொண்டைக்குள் நீரும் பாலும் ஊற்ற ஆரம்பித்தார் ஆல்சென். விரைவில் காயம் ஆற, சிறுதானியங்களையும் அந்தத் துளையின் வழியே விழுங்க ஆரம்பித்தது மைக். தலையில்லாத அதிசயக் கோழி என அதன் புகழ் அக்கம் பக்கம், கிராமம், நகரம், நாடெல்லாம் பரவ ஆரம்பித்தது.
ஆல்சென், தன் ‘அதிசயக் கோழி மைக்’ உடன், வெட்டுப்பட்ட அந்த முகப் பகுதியையும் ஒரு பாட்டிலில் போட்டுப் பாதுகாத்து, ஊர் ஊராக எடுத்துச் சென்றார். ‘மைக்’கைத் தரிசிக்க ஒரு நபருக்கு 25 சென்ட் கட்டணம். டைம், லைஃப் போன்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம்பெற்ற மைக், புகழின் உச்சத்தில் மாதத்துக்கு 4,500 அமெரிக்க டாலர் தன் எஜமானருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது. 1947 மார்ச். பதினெட்டு மாதங்கள் தலையின்றி வாழ்ந்து, ஆல்செனை வாழ்வில் தலையெடுக்க வைத்த மைக், மரித்துப்போனது. அதன் உயிரற்ற உடலும் நல்ல விலைக்கு விற்கப்பட்டது. மைக், இறந்தும் தன் எஜமானருக்குச் சம்பாதித்துக் கொடுத்தது.
இப்போதும் ஃபுரூட்டா நகரில், Mike The Headless Chicken என்கிற அமைப்பினர், ஆண்டுதோறும் மே மூன்றாவது வார இறுதியில் ‘மைக் டே’ கொண்டாடுகிறார்கள். கோழிகளை வைத்து விதவிதமான போட்டிகளை நடத்துகிறார்கள். தலை இல்லாத கோழி மைக்கின் புகழ் இப்போதும் குறையவில்லை!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT