Published : 04 Jun 2025 07:16 AM
Last Updated : 04 Jun 2025 07:16 AM
அந்த ரயில், சிக்னலைக் கடந்து போய்க் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதரின் கண்கள் பயத்தில் விரிந்தன. ரயில்வே சிக்னலைக் குரங்கு ஒன்று இயக்கிக் கொண்டிருந்தது. ‘சிக்னலில் இருக்க வேண்டிய ஆள் எங்கே? இந்தக் குரங்கு இஷ்டத்துக்கு சிக்னல் கட்டுப்பாடு லீவர்களை இழுத்துவிட்டால், அதனால் ரயில் விபத்தில் சிக்கிவிட்டால்?’
பயந்துபோன அந்த மனிதர் அடுத்த ரயில் நிலையத்தில் இது குறித்துப் புகார் கொடுத்தார். உடனே அதிகாரிகள் அந்த சிக்னலை நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கே சிக்னல்மேன் ஜேம்ஸ் எட்வின் வைட், பறவைகளுக்கு உணவளித்துக் கொண்டு இருந்தார். அந்தக் குரங்கும் இருந்தது.
அது அடுத்த சிக்னலை இயக்குவதற்காகக் காத்துக் கொண்டிருந்தது. ரயில்வே அதிகாரிகள் பதறிப் போய் நிற்க, ஜேம்ஸ் அவர்களைப் புன்னகையுடன் வரவேற்றார். உடனடியாக எழுந்துதான் நிற்க முடியவில்லை. அவருக்கு முட்டிக்குக் கீழ் இரண்டு கால்களுமே இல்லை.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் எட்வின் வைட். ரயில்வேயில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஓடும் ரயிலில் பெட்டி விட்டு பெட்டி தாவுவதில் வல்லவர் என்பதால் ‘ஜேம்ஸ் ஜம்பர்’ என்றே அவரைச் செல்லமாக அழைத்தார்கள். ஒருநாள் அப்படித் தாவும்போது, தவறி விழுந்தார். பெரும் விபத்து. முட்டிக்குக் கீழே இரண்டு கால்களும் சிதைந்து போயின. வலி. அதைவிட மன வேதனை. கட்டையால் ஆன செயற்கைக் கால்களை வைத்துக்கொண்டார். போர்ட் எலிசபெத் அருகே அமைந்துள்ள கரீகா ரயில் நிலையைத்தை விட்டுத் தள்ளி அமைந்த சிக்னலில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டார் ஜேம்ஸ்.
சிக்னலிலிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்வதற்கு அரை மைல் தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அது ஜேம்ஸுக்குக் கடும் சிரமத்தைத் தந்தது. தவிர, சரியான நேரத்தில் சிக்னலை மாற்றுவதும் அவருக்குப் போராட்டமாகத் தான் இருந்தது. ஒருநாள் சந்தைக்குச் சென்றார் ஜேம்ஸ்.
அங்கே பபூன் வகைக் குரங்கு ஒன்று வண்டியை இழுத்துக் கொண்டு சென்றது. வேறு சில வேலைகளையும் செய்தது. யாருடைய குரங்கு என்று விசாரித்தார் ஜேம்ஸ். உரியவருக்குப் பணம் கொடுத்து, அந்தக் குரங்கை வாங்கிக் கொண்டு திரும்பினார். ஜேம்ஸ் அதற்கு வைத்த பெயர் ஜாக்.
ரயில் நிலையத்துக்குச் செல்ல, தனது சக்கரநாற்காலியைத் தள்ளுவதற்கு ஜாக் உதவும் என்று நினைத்தார். ஜாக்கும் சில நாள்களிலேயே ஜேம்ஸ் சொல் பேச்சைக் கேட்க ஆரம்பித்தது. சக்கரநாற்காலியைத் தள்ள உதவியது. மற்ற வேலைகளிலும் உதவ ஆரம்பித்தது. ஆகவே ஜேம்ஸ், நிம்மதியுடன் சிக்னல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினார்.
கரீகா ரயில் நிலையத்தி லிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் விசில் சத்தம் கேட்கும். அதற்கேற்ப சிக்னல் லீவரை இழுத்து தண்டவாளப் பாதையை மாற்ற வேண்டும். அந்த வேலைகளை ஜேம்ஸ் செய்வதை, ஜாக் கூர்ந்து கவனித்தது. விசில்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, எதை மாற்ற வேண்டும், எப்படி மாற்ற வேண்டும் என்று விரைவிலேயே கற்றுக்கொண்டது. நாளடைவில் ஜாக்கே, ஜேம்ஸின் சிக்னல்மேன் வேலையை முழுமையாகச் செய்யத் தொடங்கியது. ஜேம்ஸ், நிம்மதியாகச் சாய்ந்து அமர்ந்துகொண்டார்.
அன்றைக்கு ஜேம்ஸைத் தேடிவந்த ரயில் நிலைய அதிகாரிகள், விசில்களுக்கு ஏற்ப சிக்னல் லீவரை ஜாக் மிகச் சரியாக இயக்குவதைக் கண்டு அதிசயித்து நின்றனர். ஜேம்ஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஜாக்கையும் அங்கே கூடுதல் சிக்னல்மேனாக நியமித்தனர். ஜாக்குக்கு ரயில்வே பணியாளர் அடையாள எண் ஒதுக்கப்பட்டது. நாளொன்றுக்கு 20 சென்ட் பணம் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.
அந்த சிக்னலில் சுமார் 9 வருடங்கள் சிக்னல்மேனாகவும், தன் பாசத்துக்குரிய ஜேம்ஸின் நண்பனாகவும் பணியாற்றியது ஜாக். தன் சர்வீஸில் ஒருமுறைகூட அது தவறு செய்யவே இல்லை. 1890ஆம் ஆண்டில் ஜாக், காசநோயால் மறைந்தது.
1910. அல்பர்ட் மார் என்பவர், தென்னாப்ரிக்காவில் உள்ள ஒரு பண்ணையில் அந்த பபூன் வகை குரங்குக் குட்டியைக் கண்டெடுத்தார். அதற்கு ஜாக்கி என்று பெயரிட்டார். அல்பர்ட்டிடம் பாசமாக ஒட்டிக்கொண்ட ஜாக்கி, அவரிடமே வளர்ந்தது. 1915. முதல் உலகப் போர் ஆரம்பமானதும் மாருக்கு ராணுவத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. ஜாக்கியும் அவருடனேயே சென்றது.
அல்பர்ட்டின் படைப்பிரிவைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகளுக்கும் ஜாக்கியை மிகவும் பிடித்துப் போனது. ஆகவே, அதனையும் ராணுவப் பணியில் சேர்த்துக்கொண்டார்கள். அந்தக் குரங்குக்கு எனத் தனி ராணுவச் சீருடை, தொப்பி, அதன் உணவுக்காகத் தனியே தொகை, அது உண்பதற்கெனத் தனி தட்டு, கரண்டி, முள்கரண்டி, அது கை கழுவுவதற்குத் தனி கைகழுவும் தொட்டி முதலியவை ஒதுக்கப்பட்டன. தனது உயர் அதிகாரிகள் வரும்போதெல்லாம் சல்யூட் அடித்து மரியாதை செய்யக் கற்றுக் கொண்ட ஜாக்கி, படை வீரர்களுக்கும் பலவிதங்களில் உதவ ஆரம்பித்தது.
இரவு நேரத்தில் எதிரிகளின் நடமாட்டம் இருக்கிறதா என்று விழித்திருந்து ராணுவ முகாமைக் காவல் காத்தது. எதிரிகளின் நடமாட்டத்தை வேவு பார்த்து வந்து தன் படை வீரர்களுக்குத் தகவல் சொல்லி, உதவியும் செய்தது. 1916 பிப்ரவரி, எகிப்தில் ஒரு போர்க்களத்தில் அல்பர்ட்டின் தோளில் குண்டு பாய, பதறிய ஜாக்கி அவரது காயத்தை நக்கி நக்கி அவரை ஆற்றுப்படுத்தியது. இன்னொரு போர்க்களத்தில் ஜாக்கியின் காலிலேயே பலத்த குண்டு காயம். வலியைத் தாங்கிக்கொண்ட ஜாக்கி, சிகிச்சைக்குப் பூரண ஒத்துழைப்பும் தந்தது. அந்தக் காயத்தினால் ஜாக்கி சீக்கிரமே இறந்துவிடும் என்று மருத்துவர்கள் நினைக்க, 1921 வரை கம்பீரமாகவே வாழ்ந்தது.
போரின் முடிவில் படைத்துறை அலுவலர் பதவி (Corporal) வழங்கி ஜாக்கியைக் கௌரவித்தார்கள். போரில் கலந்து கொண்டதற்காக ராணுவச் சீருடையில் மெடல் குத்தப்பட, தேசபக்தி பொங்க சல்யூட் அடித்துப் பெற்றுக்கொண்டது ஜாக்கி.
ஜாக்கும் ஜாக்கியும் வரலாற்றில் இடம்பெற்ற பபூன் வகைக் குரங்குகள்!
(சந்திப்போம்)
- writermugil@gmail.com
முகில். தமிழின் முக்கியமான எழுத்தாளர். வாழ்க்கை, அரசியல், வரலாற்று நூல்களை எழுதியிருக் கிறார். பத்திரிகைகளில் பத்தி எழுதி வருகிறார். தமிழ்த் திரையுலகிலும் பங்களிப்பைச் செலுத்தி வருகிறார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT