Last Updated : 16 May, 2025 12:34 PM

 

Published : 16 May 2025 12:34 PM
Last Updated : 16 May 2025 12:34 PM

காதுகள் மூலம் தகவல் பரிமாறும் குதிரைகள் | உயிரினங்களின் மொழி - 19

கம்பீரமான தோற்றம் கொண்ட குதிரைகள், பல நூற்றாண்டுகளாக மனிதர்களுடன் நெருங்கிய தொடர்புடையவை. அவை பிரைமோன்கள் (வாசனை வேதிப்பொருள்கள்) மூலம் ஒன்றை மற்றொன்று தொடர்பு கொள்கின்றன. குதிரைகளின் கழுத்து, தோள்பட்டைப் பகுதியில் அதிக தொடு உணர்வுகள் உள்ளன. குதிரைகளைப் பராமரிப்பவர்கள் அவற்றின் கழுத்தைத் தொட்டுத் தடவுவதைப் பார்த்திருப்போம். அதற்குக் காரணம் இதுவே.

அடுத்ததாக உடல்மொழி. குதிரை தலையை உயர்த்தும்போது, அது ஆர்வமாக இருக்கிறது அல்லது எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறது என்று அர்த்தம். அதே தலையைத் தாழ்த்தும்போது அமைதியாக இருக்கிறது என்று பொருள்.

தலையைவிட மிக முக்கியமானது காது. கண் தெரியாத குதிரைக்கும் காது வேலை செய்தால் போதும், பாதி விஷயம் புரிந்துவிடும். இவற்றால் தமது காது மடல்களை நூற்று எண்பது பாகையில் திருப்ப முடியும். எனவே தலையைத் திருப்பாமலேயே அனைத்துத் திசைகளிலிருந்து வரும் ஒலிகளையும் கேட்க முடியும். இந்தத் திறன் ஆபத்துகளைக் கண்டறிய உதவுகிறது. காதுகள் முன்னோக்கி இருந்தால் அது கவனத்துடன் அல்லது ஆர்வத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதுவே பின்னோக்கி அழுத்தப்பட்டிருந்தால், பொதுவாகக் கோபம் அல்லது அச்சுறுத்தல் உணர்வைக் குறிக்கும்.

குதிரைகளின் பெரிய கண்கள் தலையின் பக்கவாட்டில் அமைந்துள்ளன. இவை சுமார் முந்நூற்று ஐம்பது பாகை வரை சுழலும். எனவே, தொலைதூரத்தில் இருப்பவற்றையும் பார்க்கும் திறன்கொண்டவை. அதே நேரத்தில் சிறிய அசைவுகளையும் சட்டென்று கண்டுகொள்ளும். இதனால்தான் சில நேரத்தில் புதர்களிலிருந்து வெளிப்படப் போகும் ஒன்றை நாம் கவனிப்பதற்கு முன்பே குதிரை பார்த்துத் திடுக்கிட்டிருக்கும்!

கண்கள் விரிந்திருந்தால் பயத்தைக் குறிக்கும். பாதி மூடிய நிலையில் இருந்தால் உறக்கத்தில் இருக்கிறது என்று அர்த்தம். விரிந்த நாசிகள் பயம் அல்லது ஆர்வத்தைக் குறிக்கும். உதடுகள் இறுக்கமாக இருந்தால் பதற்றத்துடன் இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அதே நேரம் தளர்வான உதடுகள் அமைதியாக இருக்கிறது, பயமில்லாமல் அருகில் செல்லலாம் என்பதைத் தெரியப்படுத்தும்.

உயர்த்தப்பட்ட வால் உற்சாகத்தையும், சோர்வான வால் பயத்தையும் குறிக்கிறது. குதிரை முன்னங்காலால் தரையைத் தட்டுவதைப் பார்த்திருப்போம். அதற்கு அர்த்தம் வீரம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், உண்மையில் அது பொறுமையை இழந்து நிற்கிறது அல்லது ஏதோ ஒரு சங்கடத்தில் இருக்கிறது என்று பொருள். எனவே, நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

குதிரைகளின் கனைத்தல் அவற்றின் உணர்ச்சி நிலை, உடலியல் நிலை, சூழ்நிலையை மற்ற குதிரைகளுக்கும் மனிதர்களுக்கும் தெரிவிக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. தாழ்ந்த மென்மையான குரலில் கனைத்தால், ’நான் உங்கள் நண்பன்’ என்று அர்த்தம். உறுமும் குதிரையைப் பார்த்தால் இரண்டடி தள்ளி நிற்பது நல்லது. ஏனெனில் அது ஆக்ரோஷமாகவோ அதிருப்தியாகவோ இருக்கிறது என்று பொருள்.

குதிரைகள் மூக்கிலிருந்து உரத்த காற்று வெளிவரும் சத்தம் குறட்டைப் போன்று ஒலிக்கும். அந்தச் சத்தம் கேட்டால், அது அச்சத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். சமீபத்திய ஆய்வுகள் குதிரைகள் பிரச்சினைகளைத் தீர்க்க மனிதர்களின் உதவியை நாடுகின்றன என்பதைக் காட்டுகின்றன. குதிரைகள் தாங்களாகவே திறக்க முடியாத உணவுப் பெட்டியிலிருந்து உணவை எடுக்க முடியாத போது, அவை அருகில் உள்ள மனிதர்களுக்குச் சைகை காட்டி உள்ளன.

குதிரைகளின் தொடர்பு மொழி பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து வளர்ந்துவருகிறது. ஆராய்ச்சியாளர்கள் குதிரைகளின் உணர்ச்சி நுண்ணறிவின் ஆழத்தையும் அதன் பயிற்சி தாக்கங்களையும் ஆராய்ந்து வருகின்றனர். எதிர்காலத்தில் புதிய தொழில்நுட்பங்கள், குதிரைகளின் நுண்ணிய நடத்தை மாற்றங்களை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவக்கூடும்.

கட்டுரையாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: writernaseema@gmail.com

முந்தைய அத்தியாயம் > ஆடுகள் ஏன் முட்டிக்கொள்கின்றன? | உயிரினங்களின் மொழி - 18

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x