Last Updated : 02 May, 2025 01:10 PM

 

Published : 02 May 2025 01:10 PM
Last Updated : 02 May 2025 01:10 PM

ஆந்தையின் அலறல் என்ன சொல்கிறது? | உயிரினங்களின் மொழி - 17

ஆந்தைகள் பகலில் உறங்கி, இரவில் இரை தேடுகின்றன. இவை ஒலிகளால் மட்டுமன்றி பார்வையாலும் உடல் அசைவுகளாலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. இரவின் அமைதியில் திடீரென்று கேட்கும் 'ஹூ-ஹூ' என்கிற ஒலி பலரையும் அச்சத்தில் ஆழ்த்துவது உண்டு. இந்த அலறல் ஆந்தையின் அடிப்படை தொடர்பு முறைகளில் ஒன்று. ஆண் ஆந்தைகள் இந்த ஒலியைத் தங்கள் பிரதேசத்தை அறிவிக்கவும், பெண் ஆந்தைகளைக் கவரவும் பயன்படுத்துகின்றன.

ஒவ்வோர் ஆந்தை இனமும் தனக்கென ஒரு தனித்துவமான ஒலியைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தங்கள் இனத்தை அடையாளம் காணவும், வேறு இனங்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டவும் முடிகிறது. சில ஆந்தை இனங்கள் மென்மையான, இனிமையான ஒலிகளை எழுப்பும். சில இனங்கள் கடுமையான, ஊடுருவும் ஒலிகளை எழுப்புகின்றன.

ஆபத்து நேரத்தில் உரத்த, தீவிரமான கூச்சல்களை ஆந்தைகள் எழுப்புகின்றன. இது மற்ற ஆந்தைகளுக்கு உடனடி ஆபத்து குறித்த எச்சரிக்கையாக அமைகிறது.
உணவுக்காகவும் பாதுகாப்புக்காகவும் குஞ்சுகளுடன் தொடர்புகொள்ளும் போது சிறிய உயர் அதிர்வெண் ஒலிகளை எழுப்புகின்றன. ஆந்தைகள் தங்கள் அலகுகளை அசைப்பதன் மூலமும் ஒலிகளை உருவாக்குகின்றன. இது பொதுவாக எச்சரிக்கையாகவும், இணையைச் சந்திக்கும் போதும், குஞ்சுகளுக்கு உணவளிக்கும் போதும் பயன்படுத்தப்படுகிறது.

ஆந்தைகளின் கண்கள் இரவில் பார்ப்பதற்கான தனித்துவமான அமைப்பைக் கொண்டுள்ளன. இது அவற்றின் தொடர்பு முறையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பெரிய முன்னோக்கி அமைந்த கண்கள், குறைந்த வெளிச்சத்தில்கூட சிறிய அசைவுகளைக் கண்டறிய உதவுகின்றன. கண்களைச் சுழற்றுவதன் மூலம், அது எதிர்கொள்ளும் சூழ்நிலையை மற்ற ஆந்தைகளுக்குத் தெரிவிக்கின்றன. விரிந்த கண்கள் அச்சத்தைக் குறிக்கும். பாதி மூடிய கண்கள் அமைதியான, விழிப்புடன் கூடிய நிலையைக் குறிக்கும்.

ஆந்தைகளின் உடல் மொழியும் அவற்றின் தொடர்பில் மற்றொரு முக்கிய அம்சம். ஆபத்தை உணரும் போது, ஆந்தைகள் இறகுகளை விரித்து, மிகப் பெரியதாகக் காட்டிக்கொள்கின்றன. இது எதிரிகளை அச்சுறுத்தவும், மற்ற ஆந்தைகளுக்கு ஆபத்து குறித்த எச்சரிக்கையாகவும் அமைகிறது. தங்கள் தலையை அசைப்பதன் மூலமும் அவை தகவல்களைத் தெரிவிக்கின்றன. தலையை ஒரு பக்கமாகச் சாய்ப்பது ஆர்வத்தைக் குறிக்கும். அதே, தலையை வேகமாகச் சுழற்றினால், அதிர்ச்சி அல்லது குழப்பத்தைக் குறிக்கும்.

இனப்பெருக்கக் காலத்தில் ஆண் ஆந்தைகள் இணைசேரும் நடனங்களை ஆடுகின்றன. இதன் மூலம் அவற்றின் ஆரோக்கியத்தையும் வசீகரத்தையும் காட்டுகின்றன. பெண் ஆந்தைகள் இந்தக் காட்சிகளைக் கவனமாகக் கண்டு, தங்களுக்குப் பொருத்தமான துணையைத் தேர்வு செய்கின்றன.

தங்கள் பிரதேசங்களை வரையறுக்க ஆந்தைகள் ஒலிகளை முக்கியமாகப் பயன்படுத்துகின்றன. அவை வழக்கமான இடைவெளிகளில் குறிப்பிட்ட ’ஹூட்’ ஒலிகளை எழுப்புகின்றன. ஆண் ஆந்தைகள் குறிப்பாக இரவு நேரத்தில் இந்த ஒலிகளை அதிகமாக எழுப்புகின்றன. இந்த ஒலிக் குறியீடுகள் மற்ற ஆந்தைகளை அந்தப் பகுதியில் நுழையாமல் தடுக்கின்றன

ஆந்தைகள் தலையைச் சுழற்றுவதில் வல்லவர்கள். இந்தத் திறன் மூலம், தங்களைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளைப் பார்க்க முடிகிறது. ஓர் ஆந்தை தனது தலையைச் சுழற்றுவதைப் பார்க்கும் மற்ற ஆந்தைகள், அந்த இடத்தில் ஏதோ ஆர்வமூட்டும் விஷயம் இருப்பதாகப் புரிந்துகொள்கின்றன.

ஆந்தைகள் தங்கள் சுற்றுச்சூழலை அறிந்து கொள்ளக் கேட்கும் திறனைப் பெரிதும் நம்பியுள்ளன. பல ஆந்தைகளின் ஒரு காது சற்று மேலே, மற்றொன்று சற்றுக் கீழே இருக்கும். இந்த வித்தியாசமான அமைப்பு ஆந்தைகளுக்கு ஒலியின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிய உதவுகிறது. இந்தச் சிறப்பு அமைப்பால், ஆந்தைகள் இருளில்கூடச் சிறிய விலங்குகளின் அசைவைக் கண்டறிந்து வேட்டையாட முடிகிறது.

ஆந்தைகளின் தொடர்புத் திறன்கள் அவற்றின் வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் முக்கியமானவை. அவை விவசாய நிலங்களில் உள்ள எலிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆராய்ச்சியாளர்கள் ஆந்தைகளின் தொடர்புத் திறன்களை ஆய்வு செய்வதற்காகச் சிறப்பு ஒலிப்பதிவு கருவிகளையும் படக்கருவிகளையும் பயன்படுத்துகின்றனர். இந்த ஆய்வுகள் மூலம், ஆந்தைகளின் தொடர்பு முறை குறித்த புதிய தகவல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. சமீபத்திய ஆய்வுகள், ஒவ்வோர் ஆந்தை இனமும் தனக்கென ஒரு தனித்துவமான ஒலி முறையைக் கொண்டுள்ளதைக் கண்டறிந்துள்ளது.

கட்டுரையாளர், எழுத்தாளர். | தொடர்புக்கு : writernaseema@gmail.com

முந்தைய அத்தியாயம்: அணில் எவ்வாறு தொடர்புகொள்கிறது? | உயிரினங்களின் மொழி - 16

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x