Last Updated : 18 Apr, 2025 12:46 PM

 

Published : 18 Apr 2025 12:46 PM
Last Updated : 18 Apr 2025 12:46 PM

முதலைகளின் மொழி | உயிரினங்களின் மொழி - 15

முதலைகள் பூமியில் வாழும் மிகப் பழமையான உயிரினங்களில் ஒன்று. இவை எவ்வாறு ஒலிகளை உருவாக்குகின்றன என்றும் இந்தச் செயல்முறையில் அவற்றின் மூளை எப்படிச் செயல்படுகிறது என்பது குறித்தும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். முதலைகள் தங்களுக்குள் தொடர்புகொள்ளப் பல்வேறு ஒலிகளை எழுப்புகின்றன. பெண் முதலைகள் தங்கள் குஞ்சுகளுடன் தொடர்புகொள்ள, ’கர்ர்ர்’ என்கிற தனித்துவமான ஒலியை எழுப்புகின்றன. இது குஞ்சுகளை அவற்றின் தாய்க்கு அருகில் வரவழைக்கிறது.

இனப்பெருக்கக் காலத்தில் ஆண், பெண் முதலைகள் இரண்டுமே உரத்த கர்ஜனைகளைச் செய்கின்றன. அவை தங்கள் தசைகளை இறுக்கி, உடலை நீருக்கு மேலே வளைத்து இந்த ஒலிகளை உருவாக்குகின்றன. முதலாவதாக, இந்த ஒலிகள் துணையைக் கவரும் அழைப்புகளாகச் செயல்படுகின்றன. இந்த ஒலி நீரின் குறுக்கே தொலைதூரம் பயணிக்கிறது. முதலைகள் ஒன்றை மற்றொன்று கண்டறிய உதவுகிறது. இரண்டாவதாக, அந்த ஒலிகள் எல்லைப் பகுதியைக் குறிக்கின்றன. அவை எந்தப் பகுதியை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதை மற்ற முதலைகளுக்குத் தெரிவிக்கின்றன. இறுதியாக, இந்த உரத்த அழைப்புகள் மற்ற ஆண் முதலைகளை விரட்டி, அவற்றின் எல்லைப் பகுதியைப் பாதுகாக்கின்றன.

முதலைகளும் பல்வேறு காரணங்களுக்காக இருமுகின்றன. அவற்றின் மேல் சின்ன விலங்கு அல்லது பறவை உட்காரும் போது, அதை விரட்ட இருமுகின்றன. வேறு சில நேரத்தில், அவற்றால் செரிக்க முடியாத பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற இருமுகின்றன.

முதலைகள் எவ்வாறு கேட்கின்றன என்பதும் மற்றொரு முக்கியமான கண்டறிதல். முதலையின் காதுகள் பறவையின் காதுகளைப் போலவே செயல்படுகின்றன. மேலும் அவற்றின் மூளைகள் ஒலிகளைக் கையாளும் விதத்திலும் ஒத்திருக்கின்றன. இந்த ஊர்வன விலங்குகளுக்கு வலுவான மடிப்பால் மூடப்பட்ட ஒரு குறுகிய குழாயால் ஆன வெளிப்புறக் காது உள்ளது. இந்தக் குழாய் டிம்பானம் என்கிற செவிப்பறையில் முடிவடைகிறது.

முதலைகள் ஒலிகளின் திசையை அறிய அவற்றின் காதுகளுக்கு இடையேயான ஒலி அளவில் உள்ள வேறுபாடுகளைச் சார்ந்திருக்கின்றன. இரையை வேட்டையாடும்போது, ஒலி அளவில் ஏற்படும் மாற்றம் அவற்றிற்குப் பல தகவல்களைத் தெரிவிக்கிறது. குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளைவிட, அதிக அதிர்வெண் கொண்ட ஒலிகளுக்குத்தான் இந்த ஒலி அளவு வேறுபாட்டை அவை அதிகம் நம்பியுள்ளன.

முதலைகள் தங்கள் உடல் மொழி மூலமாகவும் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. அவற்றின் வால் அசைவுகள், தலை அசைவுகள், உடல் அசைவுகள் ஆகியவை பல்வேறு உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகின்றன. இனப்பெருக்கக் காலத்தில் ஆண் முதலைகள் தண்ணீரில் ’குமிழி’ உருவாக்கி, தங்களின் இருப்பைப் பெண் முதலைகளுக்குத் தெரியப்படுத்துகின்றன.

முதலைகள் தங்கள் உடலின் அதிர்வு உணர்வுகளைப் பயன்படுத்தி தகவல்களைப் பெறுகின்றன. அவற்றின் தோலில் உள்ள உணர்வு உறுப்புகள் நீரின் அதிர்வுகளைக் கண்டறிந்து, நீரில் மூழ்கியிருக்கும்போதும் இரையை அறிய உதவுகின்றன.

முதலைகளின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவரும் முன்பே, அவை ஒலி மூலம் தாய்க்குச் சமிக்ஞை அனுப்புகின்றன. இந்த ஒலி ’யிப், யிப்’ என்கிற குரலாக இருக்கும். இது தாய் முதலை முட்டைகளை உடைத்து, குஞ்சுகளை வெளியே கொண்டுவர உதவுகிறது. பொரிப்பதற்கு முன்பே குஞ்சுகள் தங்களுக்குள் தொடர்புகொள்வது, அவற்றின் பொரிப்பு நேரத்தை ஒருங்கிணைக்க உதவுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

முதலைகளின் மற்றொரு தொடர்பு முறை ’இன்ஃப்ராசவுண்ட்’ பயன்பாடு. இவை மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகள், மனிதக் காதால் கேட்க முடியாதவை. இந்த ஒலிகள் நீரில் நீண்ட தூரம் பயணித்து, மற்ற முதலைகளால் உணரப்படுகின்றன. சில ஆய்வாளர்கள் இந்த இன்ஃப்ராசவுண்ட் பயன்பாடு யானைகளின் தொடர்பு முறைகளுடன் ஒத்திருப்பதாகக் கூறுகின்றனர்.

முதலைகளின் வேட்டையாடும் திறன் மட்டுமல்லாமல், அவற்றின் தொடர்பு முறைகளும் அவற்றை மிகவும் வெற்றிகரமான உயிரினங்களாக ஆக்கியுள்ளது. எளிதில் புரிந்துகொள்ள முடியாத இந்த அற்புதமான உயிரினங்களின் தொடர்பு முறைகளை ஆராய்வது தொடர்கிறது.

கட்டுரையாளர், எழுத்தாளர். | தொடர்புக்கு: writernaseema@gmail.com

முந்தைய அத்தியாயம் > மயில்களின் வண்ணமயமான மொழி | உயிரினங்களின் மொழி - 14

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x