Published : 16 Apr 2025 06:34 AM
Last Updated : 16 Apr 2025 06:34 AM
பேனாவும் கையுமாக இருக்கும் கசுவோ இஷிகுரோவைத்தான் உங்களுக்குத் தெரியும். ஒரு காலத்தில் நான் கிதாரும் கையுமாகவே எல்லா இடங்களிலும் சுற்றி அலைந்துகொண்டிருந்தேன். ஒரு பாடல். நானே எழுதியது. நானே இசை அமைத்தது. இரண்டு நிமிடங்கள் கேட்டுப் பார்க்கிறீர்களா? சரி என்று யாராவது சொன்னால் உற்சாகமாகத் தோளில் இருந்து கைக்கு மாற்றி, வாசிக்க ஆரம்பித்துவிடுவேன். ‘ம், நன்றாக இருக்கிறது’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தால் போதும். கால் தரையில் நிற்காது. ஆகா, அமெரிக்கா என்னை ஏற்றுக்கொண்டுவிட்டது. என் பாடல் வெற்றி பெற்றுவிட்டது. இனி எல்லா மேடைகளிலும் என் இசை ஒலிக்கும்.
என் பாடலைப் பதிவு செய்து மிகுந்த நம்பிக்கையோடு எல்லாப் பெரிய நிறுவனங்களுக்கும் அனுப்பி வைத்தேன். ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றில் கிடைக்காமலா போய்விடும்? இன்று வராவிட்டால் என்ன, நாளை அழைப்பு வந்து சேராதா? யாருக்குதான் பிடிக்காமல் போகும் என் பாடல்? யாருக்குதான் அலுக்கும் என் இசை? கிதாரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு இரவு பகலாகக் கனவில் மிதந்துகொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் எல்லாரும் அழைத்துவிட்டால் எல்லாருக்கும் புதிதாக அளிக்க வேண்டுமே என்று பதறி, புதிய, புதிய பாடல்களாக எழுதிக் குவித்தேன். புதிது, புதிதாக இசைத்து, சேகரித்து வைத்துக்கொண்டேன்.
ஒரே நேரத்தில் எல்லாரும் நிராகரித்துவிட்டால் என்ன செய்வது? அப்படி ஒரு சாத்தியம் இருக்கும் என்று கற்பனைகூடச் செய்ய முடியவில்லை என்னால். ஆனால் நடந்தது என்னவோ அதுதான். நான் யாருக்கெல்லாம் என் இசையைப் பதிவு செய்து அனுப்பி வைத்தேனோ அவர்கள் அனைவரும் உன் இசை வேண்டாம் என்று பதில் அனுப்பினர்.
ஏமாற்றமும் வலியும் தவிப்பும் என்னைப் பிய்த்துத் தின்னத் தொடங்கின. கனவு முறிந்துவிட்டதா? இசை கைவிட்டுவிட்டதா? இனி என்ன செய்யப் போகிறேன்? இருள் தவிர எதுவும் தெரியவில்லை கண்களுக்கு. உடலிலுள்ள வலு அனைத்தையும் ஒன்றுதிரட்டி இசையிலிருந்தும் பாடலிலிருந்தும் வெளியேறிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அது எவ்வளவு கடினமான முடிவு என்பது வெளியேறிய பிறகுதான் தெரிந்தது. அதுவரை கற்பனையில் திளைத்துக்கொண்டிருந்த என் மூளையால் அலைபாயாமல், அமைதியாக இருக்க முடியவில்லை. பாடல் பாடலாக எழுதிக் குவித்த கை, என்னால் சும்மா இருக்க முடியாது, என்னைச் சுதந்திரமாக இயங்கவிடு என்று சண்டை போட்டது. பாடல்தானே எழுதக் கூடாது? கருவிதானே வாசிக்கக் கூடாது? வேறு ஏதேனும் எழுதினால் என்ன? எப்படி அ , ஆ, இ, ஈயில் இருந்து இசை கற்றுக்கொண்டேனோ அதேபோல் கதை எழுதுவதற்கும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
எல்லாவற்றையும் இசையாகப் பார்த்துப் பழக்கப் பட்டுப் போயிருந்த என் உணர்வுகளைத் திசைதிருப்பி எல்லாவற்றிலும் கதைகளைத் தேட ஆரம்பித்தேன். நடக்கும்போது, உறங்கும்போது, உண்ணும்போது, தனிமையில் அமர்ந்திருக்கும்போது, சோகம் வாட்டும்போது, உல்லாசத்தில் உள்ளம் துள்ளும்போது என் மனம் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருக்கும். இப்போது அதே மனம் சின்ன சின்ன கதைகளைக் கட்டமைக்க ஆரம்பித்தது. மெல்ல, மெல்லதான் நடந்தது இந்த மாற்றம்.
என் முதல் கதையை எழுதி முடித்ததும் திரும்பத் திரும்ப வாசித்தேன். திரும்பத் திரும்பத் திருத்தினேன். படித்துப் பார்த்த சிலர், உண்மையாகவே நன்றாக வந்திருக்கிறது, எங்கேனும் அனுப்பி வை என்று உற்சாகப்படுத்தியபோது தலை அசைத்தேனே தவிர, உற்சாகம் கொள்ளவில்லை. உறையில் போட்டு அனுப்பிவிட்டு அமைதியாக அடுத்த கதையை எழுத ஆரம்பித்தேன். முதல் கடிதம், முதல் அழைப்பு, முதல் அச்சு, முதல் பெரும் தொகை, முதல் பாராட்டு, முதல் வியப்பு, முதல் கொண்டாட்டம், முதல் நிறைவு.
பதிப்பகங்களும் பத்திரிகைகளும் கடிதம் மேல் கடிதம் எழுதின. இன்னும் எழுதுங்கள். இன்னும் எழுதுங்கள். உங்கள் எழுத்து அச்சு அசலாகப் புதிதாக இருக்கிறது. உங்கள் மொழி அபூர்வமானதாக இருக்கிறது. ஆரவாரமான இடங்களில் அமைதியான சொற்களை இடுகிறீர்கள்.
அழகான இடங்களில் அடக்கமாக எழுதுகிறீர்கள். எதிர்பாராத இடங்களில் பெரும் ஆரவாரம் செய்கிறீர்கள். எப்படி உங்கள் விரல்களைப் பழக்கப்படுத்தினீர்கள்? எப்படிச் சொற்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? மொழி கடந்து, நாடு கடந்து, கண்டம் கடந்து எல்லா இடங்களுக்கும் சென்று சேர்ந்துகொண்டிருக்கின்றன உங்கள் எழுத்துகள்.
வாசிக்கும் எல்லாரையும் மயக்கி விடுகிறது உங்கள் நடை. எப்படி நிகழ்த்துகிறீர்கள் இந்த மாயத்தை? வியந்து கேட்ட அனைவரிடமும் சொன்னேன். கதை என்று நினைத்து நான் இதுவரை எழுதியவை எல்லாமே பாடல்கள்தான். கிதாரை இறக்கி, கீழே வைத்துவிட்டாலும் அது என்னை இந்தக் கணம்வரை சுமந்துகொண்டுதான் இருக்கிறது. நான் உன்னைவிட்டு நீங்க மாட்டேன் இஷிகுரோ. இது நாள்வரை உன் முதுகில் தொங்கிக் கொண்டிருந்தேன். இனி பேனா வடிவில் உன் சட்டைப் பையில், உன் இதயத்துக்கு அருகில் வாழ்வேன்.
வடிவம் மாறினாலும் இசை மாறாது. கம்பிகள் வழியே பேசிக்கொண்டிருந்தேன். இனி சொற்கள் மூலம் பேசுவேன். நான் உன்னில் ஒரு பகுதி. உன் வாழ்வின் பாடலை, உன் நம்பிக்கையின் பாடலை, உன் கனவின் பாடலைத் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பேன். ‘உங்கள் எழுத்துக்கு நோபல் கிடைத்திருக்கிறது இஷிகுரோ’ என்று நண்பர்கள் ஒருநாள் உற்சாகத்தோடு கத்தியபோது, என் பேனாவைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே புன்னகை செய்தேன். எழுத்துக்கு அல்ல, என் இசைக்கு!
கசுவோ இஷிகுரோ - ஜப்பானில் பிறந்த இங்கிலாந்து எழுத்தாளர். 2017ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.
(இனிக்கும்)
- marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT