Published : 09 Apr 2025 06:23 AM
Last Updated : 09 Apr 2025 06:23 AM
பறவைகளுக்கு உணவுக்கு அடுத்தபடியாக இருப்பிடம் அவசியமானது. ஆனால், எல்லாப் பறவைகளும் கூடுகட்டுவதில்லை. அப்படி என்றால் கூடு எதற்கு? அடுத்த சந்ததியை உருவாக்குவதற்குப் பறவைகளுக்குக் கூடுகள் தேவைப்படுகின்றன. முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, வளரும் வரை பாதுகாக்கத் தேவையான இடமாகக் கூடுகள் இருக்கின்றன.
அதிக வெப்பம், அதிகக் குளிர் இருக்கும் புறச்சூழ்நிலையில் இருந்து காத்துக்கொள்ளச் சில பறவைகள் கூடுகளைக் கட்டுகின்றன. முட்டையை அடைகாக்க, குறிப்பிட்ட வெப்பநிலையில் முட்டைகளை வைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதுக்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கக் கூடு அவசியம்.
பறவைகளின் வாழ்விடத்தைப் பொருத்தும், அவற்றுக்குக் கிடைக்கும் பொருள்கள், அவற்றின் கூடுகட்டும் திறன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் ஒவ்வொரு பறவையும் கூட்டை உருவாக்குகிறது. கூடுகட்ட முடிவு செய்தவுடன் இடத்தைத் தேர்வு செய்வது முக்கியம். நீர்நிலைக்கு அருகிலேயே இருக்கும் யகானா (African Jacana) போன்ற பறவைகள் தங்களின் கூட்டை அதற்கு அருகிலேயே உருவாக்குகின்றன. பெரிய கூடுகளை இவை கட்டுவதில்லை. பறவைகளின் பாதுகாப்பு, எளிதில் வந்து செல்ல, உணவு உள்ள இடங்களைத் கூடுகள் அமைக்கத் தேர்ந்தெடுக்கின்றன. புறாக்கள் பாதுகாப்பு கருதி உயரமான இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றன.
இடத்தைத் தேர்ந்தெடுத்த உடன் கூடு கட்டுவதற்கான பொருள்களைச் சேகரிக்க வேண்டும். பெரும்பாலும் அருகில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே கூடுகளை அமைக்கின்றன. சில நேரம் கூடு கட்டுவதற்காக நீண்ட தூரம் பயணம் செய்வதும் உண்டு. அலகுகளைப் பயன்படுத்தி பறவைகள் கூடுகளைக் கட்டுகின்றன.
பொருள்களைத் தூக்கிக்கொண்டு வருவதற்கு மட்டுமல்லாமல், இலைகளைத் தைப்பது போன்றவற்றுக்கும் அலகுகளைப் பயன்படுத்துகின்றன. சில பறவைகள் கால்களையும் கூடுகட்டுவதற்குப் பயன்படுத்துகின்றன. சில கூடுகள் மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பஞ்சு, துணி, தாவர நாரிழைகள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன.
சாதாரணமாக நாம் காணும் கோப்பை வடிவக் கூடுகளை (Cup Nest) ராபின், தகைவிலாங்குருவி, ஓசனிச்சிட்டு போன்ற பறவைகள் கட்டுகின்றன. கூட்டின் நடுவில் பள்ளமாக இருக்கும் இடத்தில் முட்டைகளும் குஞ்சுகளும் இருக்கும். அடுத்ததாக மேடை வடிவக் கூடு. காகம், கழுகு, நாரை போன்ற பறவைகள் மேடை போன்ற அமைப்பில் கூடுகளைக் கட்டுகின்றன.
கழுகுகளின் கூடு மற்ற பறவைகளைவிடப் பெரிய மேடை வடிவக் கூடாக இருக்கும். 6 அடி விட்டமுடைய கூடுகள் சில அடிகள் உயரம் வரை இருக்கும். பல கிலோ எடை உள்ள பொருள்களைப் பயன்படுத்தி இவை கூட்டை உருவாக்கும். ஒருமுறை உருவாக்கப்படும் கூடுகள் பல ஆண்டுகள் பயன்படுத்தும் வகையில் இருக்கும்.
பறவைகளின் நெசவுத்திறனுக்குச் சான்றாக இருப்பவை தொங்கும் கூடுகள். மெல்லிய புற்களை அழகாக நெய்து, சிறிய துவாரத்துடன் இருக்கும் தொங்கும் கூடுகளை இவை உருவாக்குகின்றன. தூக்கணாங்குருவி போன்ற பறவைகள் மரக்கிளைகளில் தொங்கும் கூடுகளைக் கட்டுகின்றன.
இது வேட்டையாடிகளிடமிருந்து பாதுகாப்பைத் தருகிறது. முக்குளிப்பான் போன்ற சில நீர்ப்பறவைகள் நீர்நிலைகளில் மிதக்கும் கூடுகளைக் கட்டுகின்றன. இவை நாணல்கள், நீர்த்தாவரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன. மீன்கொத்தி, கடல் கிளி (Puffins) போன்ற பறவைகள் நிலம் அல்லது மணல் பகுதிகளில் தரைகளைத் தோண்டி, பாதுகாப்பான கூடுகளை உருவாக்குகின்றன.
பறவைகள் தங்கள் கூடுகளைக் கட்ட குச்சி, இலை, புல் போன்றவற்றைப் பொதுவாகப் பயன்படுத்துகின்றன. அதற்கு மேலே பிணைப்பை உருவாக்குவதற்காகச் சேறு, களிமண், சிலந்தி வலை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. கூட்டின் உள்ளே குறிப்பிட்ட வெப்பநிலையைப் பராமரிப்பதற்காக மென்மையான பஞ்சு, முடி, தாவர நாரிழைகள் பயன்படுத்தப்படுகின்றன. மழை, வெயிலிலிருந்து பாதுகாக்க அடர்த்தியான மரங்கள், பெரிய இலைகள், அடர்ந்த புதர்களின் கீழ் தஞ்சமடைகின்றன. உழவாரக்குருவி, வல்லூறு, சில ஆந்தைகள் இயற்கையான பாறைப் பிளவுகள் அல்லது குகைகளில் ஓய்வெடுக்கின்றன.
சில பறவைகளுக்கு அவற்றின் இறகுகள் வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள உதவுகின்றன. வாத்துகளுக்கும் கடற் பறவைகளுக்கும் நீர்புகா இறகுகள் உதவுகின்றன. வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்குத் திறந்தவெளி கூடுகளைவிட மூடிய கூடுகள் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றன.
பொதுவாகப் பறவைகள் ஓர் ஆண்டில் குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொரிக்கின்றன. அந்தக் காலத்தில் மட்டும்தான் இவை கூடுகளை உருவாக்குகின்றன. குஞ்சு பொரித்து அவை பறக்க ஆரம்பித்த உடன் கூடுகள் அவற்றுக்குத் தேவைப்படுவதில்லை. அடுத்த முட்டையிடுதலுக்குப் புதிய கூடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.
ஒரே காலக்கட்டத்தில் இரண்டு, மூன்று முறை முட்டையிடும் அமெரிக்க ராபின் போன்ற பறவைகள் ஒரே கூட்டைப் பயன்படுத்திக்கொள்கின்றன. கழுகு புதிதாகக் கூட்டைக் கட்டுவதற்குப் பதிலாகத் தனது பழைய கூட்டிலேயே மேலும் குச்சிகளைச் சேர்த்து, புதிதாக மாற்றிக்கொள்கிறது. Hammerkop என்கிற பறவை கூடுகட்டுவதற்கு 2-5 மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.
ஆயிரக்கணக்கான சிறு குச்சிகளை வைத்து மண்ணையும் பயன்படுத்தி இது கூடுகளைக் கட்டுகிறது. Rufous Hornero எனும் தென்னமெரிக்கப் பறவையின் கூடு அழகானது. வைக்கோல், மண் ஆகியவற்றைக் கலந்து குறுகிய வாயை உடைய கோள வடிவ கூடுகளைக் கட்டுகிறது. நாம் கற்பனை செய்ய முடியாத அளவு சிறிய அலகைக் கொண்டு, அழகிய கூடுகளைக் கட்டுவதில் பறவைகளுக்கு நிகர் பறவைகள்தான்!
(பறப்போம்)
- writersasibooks@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT