Published : 04 Apr 2025 12:34 PM
Last Updated : 04 Apr 2025 12:34 PM
உயிரினங்களின் மொழி - 13
பாம்புகளைக் கண்டால் மனிதர்களுக்கு அச்சம். மனிதர்களைக் கண்டால் பாம்புகளுக்கு அச்சம்.
பாம்புகளும் தங்களுக்குள் ஒரு தொடர்பு மொழியை ஏற்படுத்தியுள்ளன. சுற்றி நடப்பதைத் தெரிந்துகொள்ளச் சின்ன சின்ன அதிர்வுகளே பாம்புகளுக்குப் போதுமானதாக உள்ளன. கீழ்த்தாடை எலும்புகள், உடலில் உள்ள உணர்வுப் புள்ளிகள் அதிர்வுகளை உணர்ந்து, அவற்றை மூளைக்கு அனுப்புகின்றன.
2008இல் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தபடி, பாம்புகள் தரையில் ஏற்படும் 100 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வுகளை உணரக்கூடியவை. இதன் மூலம் பாம்புகள் இரைகளையும் எதிரிகளையும் வேறுபடுத்தி அறிகின்றன.
பாம்புகள் தரையில் தங்கள் உடலைத் தட்டுவதன் மூலம் அதிர்வுகளை உருவாக்கி, மற்ற பாம்புகளுடன் தொடர்புகொள்ளும். இது ஒரு வகையான குறியீட்டு முறையைப் போன்றது. வெவ்வேறு விதமான தட்டல்களும் அழுத்தங்களும் வெவ்வேறு செய்திகளைத் தெரிவிக்கின்றன.
பாம்புகள் ஒன்றோடு மற்றொன்று தொடர்புகொள்ள அதிர்வுகளோடு, அவற்றின் பெரோமோன்களும் உதவுகின்றன. இவை மற்ற பாம்புகளுக்குப் பல விதமான தகவல்களைத் தெரிவிக்கின்றன.
பாம்புகளின் வாயின் மேல் பகுதியில் Vomeronasal என்னும் சிறப்பு உணர்வு உறுப்பு அமைந்துள்ளது. பாம்புகள் தங்கள் பிளவுபட்ட நாக்கை வெளியே நீட்டி, காற்றில் உள்ள வேதிப்பொருள்களின் மூலக்கூறுகளைச் சேகரிக்கின்றன. பின்னர் நாக்கை உள்ளே இழுத்து, அவற்றை உணர்வு உறுப்புக்குக் கொண்டு செல்கின்றன. இங்கு சேகரிக்கப்பட்ட வேதிப் பொருள்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, மூளைக்குத் தகவலாக அனுப்பப்படுகிறது.
ஆண் பாம்புகள் பெண் பாம்புகளைக் கவர பெரோமோன்களைப் பயன்படுத்துகின்றன. மேலும் இனப்பெருக்கக் காலத்தில் பெண் பாம்புகளின் பாதையைப் பின்பற்றவும் இவை உதவுகின்றன. அதுமட்டுமன்றி அவற்றின் வயது, பாலினம், உடல்நிலை, இனப்பெருக்கத் தயார்நிலை, எச்சரிக்கைத் தகவல்கள் போன்ற பல தகவல்களையும் தெரிந்துகொள்கின்றன.
பாம்புகள் உடல் அசைவுகளையும் தொடர்பு மொழியாக மாற்றிக்கொள்கின்றன. நாகங்கள் கழுத்து எலும்புகளையும் தசைகளையும் பயன்படுத்தி விரிவடையச் செய்கின்றன. இதை ’ஹூட்’ என்கிறார்கள். பாம்பு அச்சுறுத்தலை உணரும்போது, ஹூட் விரிவடைவது நாககப்பாம்பை இயல்பான அளவைவிடப் பெரிதாகக் காட்டுகிறது. இது எதிரிகளை அச்சுறுத்த உதவுகிறது. ’என்னை அணுகாதே, நான் ஆபத்தானவன்’ என்பதே இதன் அர்த்தம்.
ஹூட் விரித்து எச்சரிக்கையை வெளிப்படுத்தும் போது, நாகங்களின் உடல் அசைவுகளிலும் சில மாற்றங்கள் நடக்கின்றன. அவை உடலை 'S' வடிவில் வளைக்கும். ’உஸ்’ ஒலியை எழுப்பும். உடலின் முன்பகுதியைத் தரையிலிருந்து உயர்த்தி அச்சுறுத்தும். பெரும்பாலான விலங்குகள் இந்தச் சைகையைப் புரிந்துகொண்டு விலகிச் செல்கின்றன. இது பாம்புக்கும் தாக்குதலில் காயமடைவதைத் தவிர்க்கும். பல விஷமுள்ள பாம்புகள் முதலில் எச்சரிக்கை காட்டி, பின்னரே தாக்குகின்றன. இதனால் ஹூட் விரித்தல் என்பது நாகங்களின் மிக முக்கியமான தொடர்பு முறையாக உள்ளது.
ஆப்பிரிக்கத் தரை விரியன் பாம்புகள் ஒன்றுக்கு மற்றொன்று ஆபத்து குறித்த எச்சரிக்கையைத் தங்கள் உடலின் பின்பகுதி அசைவின் மூலம் உணர்த்துகின்றன.
ராட்டில் பாம்புகள் தங்கள் வாலின் நுனியில் உள்ள கெராட்டின் வளையங்களை உராயச் செய்வதன் மூலம் தனித்துவமான ஒலியை உருவாக்குகின்றன.
2018இல் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ராட்டில் பாம்புகள் தங்கள் உடல் அளவைப் பொறுத்து வெவ்வேறு அதிர்வெண்களில் ஒலியை எழுப்புவதைக் கண்டறிந்தனர். பெரிய ராட்டில் பாம்புகள் குறைந்த அதிர்வெண் ஒலியை எழுப்புகின்றன. சிறிய பாம்புகள் உயர் அதிர்வெண் ஒலியை எழுப்புகின்றன. இது எதிரிகளை ஏமாற்றவும் பயன்படுகிறது. சிறிய பாம்புகள் தங்களைப் பெரிய பாம்புகள் போல் காட்டிக் கொள்ளக் குறைந்த அதிர்வெண் ஒலியையும் எழுப்பும் திறன்கொண்டவை.
மற்ற பாம்பு இனங்களும் ’ஹிஸ்ஸிங்’ (hissing) ஒலியைப் பயன்படுத்துகின்றன. இது அச்சுறுத்தும் நடத்தையாகவும் எச்சரிக்கை சைகையாகவும் கருதப்படுகிறது. 2005இல் நடத்தப்பட்ட ஆய்வில், பாம்புகள் தங்கள் நிலைமையைப் பொறுத்து வெவ்வேறு வகையான ஹிஸ் ஒலிகள் எழுப்புவதைக் கண்டறிந்தனர். அதாவது ஒரு ’கோபமான’ ஹிஸ்ஸுக்கும் ’பதற்றமான’ ஹிஸ்ஸுக்கும் வேறுபாடு இருக்கிறது.
பிட் குழிகள் என்பது குழி விரியன் பாம்புகளில் காணப்படும் உணர்வு உறுப்பு. மூக்குக்கும் கண்ணுக்கும் இடையில் இரண்டு பக்கங்களிலும் சிறிய குழிகள் போல அமைந்துள்ளன. ஒவ்வொரு பிட் குழியும் இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடையில் ஒரு மெல்லிய சவ்வு உள்ளது (0.001 மிமீ அளவு மட்டுமே). இந்தச் சவ்வில் ஆயிரக்கணக்கான நரம்பு முடிச்சுகள் உள்ளன. இந்த உறுப்புகள் வெப்பநிலையில் ஏற்படும் மிகச் சிறிய மாற்றங்களையும் உணர உதவுகின்றன. இந்த வெப்பநிலை வேறுபாட்டை நரம்பு முடிச்சுகள் உணர்ந்து, மூளைக்குத் தகவல் அனுப்புகின்றன. இதன் மூலம் பாம்புகள் இருளிலும்கூட இரைகளின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கண்டறிகின்றன. உடல் வெப்பமுள்ள விலங்குகளிலிருந்து வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்வீச்சை இந்த உறுப்புகள் உணர்கின்றன.
பாம்புகளின் ரகசிய மொழி ஆய்வு இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது. இந்த ஊர்வன விலங்கின் தொடர்பு முறைகளில் இன்னும் பல அம்சங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளன. அவற்றின் முடிவுகள் வரும் போது நமக்கு இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கலாம்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writernaseema@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT