Last Updated : 02 Apr, 2025 06:27 AM

 

Published : 02 Apr 2025 06:27 AM
Last Updated : 02 Apr 2025 06:27 AM

நான் தேடும் கதைகள் | தேன் மிட்டாய் 44

மற்றவர்கள் என்னவெல்லாம் எழுதுகிறார்கள் என்று மட்டுமல்ல, என்னவெல்லாம் எழுதுவதில்லை என்பதையும் தொடர்ந்து கவனிக்கிறேன். பல நல்ல எழுத்தாளர்கள் நல்ல நல்ல கதைகளை, நல்ல நல்ல கவிதைகளை, நல்ல நல்ல நாவல்களை எழுதிவருவது உண்மைதான். அந்த வகையில் மகிழ்ச்சிதான். என்றாலும் நிறைவாக உணர்கிறாயா அமிதாவ் கோஷ் என்று கேட்டால், இல்லை என்றே மிகுந்த தயக்கத்தோடு சொல்வேன்.

ஒரு காடு குபுகுபுவென்று பற்றிக்கொண்டு எரிவதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அமெரிக்காவில் ஒரு முழுக் காடும் அப்படி எரிந்து முடிந்திருக்கிறது. ஒரு சிறு தீப்பொறியில் தொடங்கி இருக்க வேண்டும். ஒரே ஒரு காய்ந்த சருகை அது பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

அந்த வெப்பம் தாளாமல் சில காய்ந்த இலைகள் புகை விட்டுக் கருக ஆரம்பித்திருக்க வேண்டும். ‘ஐயோ, என் இலைகள், என் குழந்தைகள்’ என்று துடித்தபடி ஒரு மரத்தின் கிளை தாழ்ந்து வந்து காப்பாற்ற முயன்றிருக்க வேண்டும். ஒரு கிளை. இன்னொன்று. மற்றொன்று. முழு மரமும் வானத்தைப் பார்த்தபடி நின்று நிதானமாக எரிந்து முடிந்திருக்க வேண்டும்.

நீ இல்லாமல் காடு இல்லை என்று அருகிலிருந்த மரம் தன் எல்லாக் கரங்களாலும் பாய்ந்து அணைத்திருக்கும். நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்று எல்லா மரங்களிலிருந்தும் நீண்டுவரும் எல்லாக் கரங்களையும் நெருப்பு பாய்ந்து, பாய்ந்து பற்றிப் படர்ந்திருக்க வேண்டும்.

ஒன்றாகவே பிறந்தோம், ஒன்றாகவே வளர்ந்தோம், ஒன்றாகவே வீழ்ந்தும் விடுவோம் வா என்று எல்லா மரங்களும் கட்டியணைத்துக் கரித் துண்டுகளாகச் சிதறித் தெறித்திருக்கும். ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்களே சரியும்போது, முந்தாநாள் முளைத்த செடிகளும் கொடிகளும் என்ன செய்யும்? நெருப்புகூட வேண்டாம். ஒரே ஒரு துளி கரும்புகை போதும். வாடி, வதங்கி, சுருண்டுபோயிருக்கும்.

நான் வாசித்த எந்தக் கதைகளிலும் ஏன் ஒரே ஒரு கொடியின் கதைகூட இல்லை? ஒரு நாட்டின்மீதான போரை ஒரு டால்ஸ்டாயால் ஆயிரம் பக்கங்கள் கடந்து விரித்து எழுதமுடியும் என்றால், ஒரு காட்டின் மீதான போரை எழுத எத்தனை ஆயிரம் பக்கங்கள் தேவைப்பட்டிருக்கும்? ஆனால், ஒரே ஒரு சிறுகதையைக்கூட என்னால் கண்டறிய முடியவில்லை. இது முதல் காடு அல்ல. நடந்து முடிந்திருப்பது முதல் போரும் அல்ல.

எண்ண முடியாத அளவுக்குக் காடுகள் அழிந்து போயிருக்கின்றன. நட்சத்திரங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மரங்கள் மாண்டு போயிருக்கின்றன. முடிவில்லாமல் நீண்டு செல்லும் இந்தப் பெரும் போர் ஏனோ நம் எழுத்தாளர்களை அசைக்கவே இல்லை.

என்னால் இங்கே இருக்க முடியாது. வேறு வானம் தேடிக்கொள்கிறேன் என்று மேகம் எப்போதோ நம்மைவிட்டுக் கலைந்து சென்று விட்டது. அங்கும் இங்கும் அலைந்து திரிந்தும் வேறு வானம் கிடைக்காததால் கடும் கோபத்தில் கடும் புயலாக, பெரும் மழையாக, காதைப் பிளக்கும் இடியாக இறங்கி வந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் நிலங்கள் வறண்டு கொண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் நிலங்கள் மூழ்கிக் கொண்டிருக்கின்றன.

ஒரு நாட்டில் கடல் மறைந்து கொண்டிருக்கிறது. இன்னொரு நாட்டில் கடல் சீற்றத்தோடு பாய்ந்து வந்து நகரங்களையும் கட்டிடங்களையும் தொழிற் சாலைகளையும் வீடுகளையும் சாலைகளையும் கடைத் தெருக்களையும் பாய்ந்து பாய்ந்து விழுங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கண்டத்தில் கடும் குளிர் கொல்கிறது. இன்னொரு கண்டத்தைக் கடும் வெப்பம் எரிக்கிறது.

வருடிக்கொடுக்கும் காற்று மறைந்துவிட்டது. இளம் வெயில், இளம் குளிர் இரண்டும் மறைந்துவிட்டன. பொங்கும் நீர்வீழ்ச்சிகள் உறைந்து நின்றுவிட்டன. காடு இல்லாமல் நான் எங்கே வாழ்வேன் என்கின்றன பூச்சிகளும் வண்டுகளும். ஆறுகளும் குளங்களும் குட்டைகளும் மறைந்துவிட்டன. இனி நான் எங்கே போவேன், எதைப் பருகுவேன், எதைப் பிடித்து உண்பேன் என்று கத்திக் கூச்சலிடுகின்றன பறவைகள். யானைகள் சாலைக்கு வந்து, வீட்டுக்குள் புகுந்து நான் இருந்த காட்டைப் பார்த்தீர்களா என்று தேடிக்கொண்டிருக்கின்றன.

நடந்துகொடிருப்பது போர் என்று சொன்னேன். மடிந்துகொண்டிருப்பது இயற்கை என்று சொன்னேன். இந்தப் போரைத் தொடுத்துக் கொண்டிருப்பது யார் என்று நான் சொல்லவில்லை. அது நம் அனைவருக்குமே தெரியும். நம் அனைவருக்கும் தெரியும் என்பதாலேயே நாம் அமைதியாக நின்றுகொண்டிருக்கிறோம். அமைதியாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம். காட்டை அழித்த தீயின் கரும் புகை காட்டோடு மறைந்துவிடவில்லை.

அது வானத்தை நிறைத்துவிட்டது. நட்சத்திரங்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது. நிலவைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கிறது. கடலைப் பருகிக் கொண்டிருக்கிறது. மலையை உடைத்துக் கொண்டிருக்கிறது. பயிர்களைப் பிய்த்து எரிந்து கொண்டிருக்கிறது. அந்தப் புகை நம் ஒவ்வொருவரின் வீட்டுக்குள்ளும், ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும், துடிக்கும் ஒவ்வோர் இதயத்துக்குள்ளும் ஊடுருவிவிட்டது.

இந்தக் கதைகளைக் கவிஞர்களும் எழுத்தாளர் களும் மலையளவு எழுதிக் குவித்திருக்க வேண்டாமா? ஏன் எழுதவில்லை ஒருவரும்? ஏன் எல்லாக் கரங்களும் ஏதேதோ எழுதிக் கொண்டிருக்கின்றன? எல்லாம் முடிந்த பிறகு, எல்லாம் சாய்ந்த பிறகு எதை எழுதுவது? அதை யாருக்கு எழுதுவது, நான் தேடும் கதைகளை யாரும் எழுதாததால் நானே எழுதத் தொடங் குகிறேன்.

நம் வாழ்வையும் கற்பனையையும் அழித்துக் கொண்டிருக்கும் பெரும் போரின் கதையை நான் எழுதுவேன். ஒரு மரத்தை இன்னொன்று தாவி வந்து அணைத்துக்கொள்வதுபோல், ஒரு கதை இன்னொரு கதையாக வளரட்டும். ஒரு கவிதையை இன்னொரு கவிதைத் தாங்கிப்பிடிக்கட்டும்.

ஒரு நாவல் நூறு நாவல்களாக வளரட்டும். கற்பனை மீண்டுவந்தால் ஒருவேளை போர் முடிவடையலாம். மேகம் திரும்பி வரலாம். இறந்த காடு நம்மை மன்னிக்கலாம். கரும்புகை நம்மைவிட்டு நீங்கலாம். கரும்புகை நீங்கினால் இன்னொரு காட்டை நம்மால் உருவாக்க முடியும். புதிய காடு தோன்றும்போது புதிய உலகமும் தோன்றும். அந்த உலகுக்காகவும் நான் எழுதுவேன்.

காலநிலை மாற்றம் மரணத்தைப் போன்றது. அதைப் பற்றி யாரும் பேச விரும்புவதில்லை. - அமிதாவ் கோஷ், புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்.

(இனிக்கும்)

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x