Last Updated : 02 Apr, 2025 06:07 AM

 

Published : 02 Apr 2025 06:07 AM
Last Updated : 02 Apr 2025 06:07 AM

நத்தைகளின் ஓட்டப்பந்தயம் | ஸ்பானியக் கதை

நத்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் டோனா அத்தையின் கீரைப் பாத்தியில் நடைபெற இருந்தது. “வணக்கம் நத்தைகளே! இந்த நாள் இனிய நாளாகுக! நான் உங்களின் பிரியமான வர்ணனையாளர் ஓடில்லா நத்தை ட்ரேவர் பேசுகிறேன். நத்தைகளின் ஓட்டப்பந்தய மைதானங்களிலேயே சிறந்த மைதானமாகிய, டோனா அத்தையின் கீரைப் பாத்தியில் இருந்து பேசுகிறேன். மறக்க முடியாத நாள் ஒன்று நமக்கு முன்னே காத்திருக்கிறது. ஐந்தாவது முறையாகத் தன் சாதனையை முறியடிக்க இருக்கிறார் ட்ரெய்ல்பிலாஸர்.”

அப்போது மைதானத்துக்குள் மகிழ்ச்சியாக நுழைந்தது ட்ரெய்ல்பிலாஸர் நத்தை. பந்தயத்தைக் காண்பதற்குக் காத்திருந்த நத்தைகள் எல்லாம் கரவொலி எழுப்பின. “இதோ அவர் வந்துவிட்டார். மைதானத்துக்குள் நுழைகிறார்… உடலை லகுவாக்க உடற்பயிற்சிகளைச் செய்கிறார்.

போட்டி தொடங்கும் இடத்தில் போட்டியாளர்கள் தங்களுக்கு உரிய இடத்தில் நிற்கிறார்கள்… ஓட்டம் தொடங்கிவிட்டது. எப்போதும்போல ட்ரெய்ல்பிலாஸர் எல்லாரையும்விடச் சில அங்குலங்கள் முன்னே ஓடுகிறார். இடைவெளி அதிகரிக்கிறது. சிறப்பாகத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். முதல் ஒரு மீட்டர் தூரத்தைப் பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்திலேயே கடந்துவிட்டார். எல்லாருக்கும் முன்பாக, அதிக இடைவெளியில் வெற்றிக்கோட்டை நெருங்குகிறார்…”

அப்போது ஒரு நத்தை பயத்துடன் ஓடிவந்து, “பொறுங்க… பொறுங்க….” என்றது. “என்ன ஆச்சு?’’ என்று கேட்டது ட்ரேவர்.விஷயத்தைச் சொன்னது அந்த நத்தை. “பார்வையாளர்களின் கவனத்துக்கு, அவசரகால உதவி மையத்திலிருந்து தகவல் வந்திருக்கிறது.

பறவை ஒன்று டோனா அத்தையின் காய்கறிப் பாத்திக்குள் நுழைந்துவிட்டது. ஒவ்வொருவரும் அருகில் உள்ள பசலைக்கீரைச் செடிக்கு அடியில் மறைந்துகொள்ளுங்கள். மறுபடியும் சொல்கிறோம் அனைவரும் ஓடிச்சென்று அருகில் உள்ள பசலைக்கீரைச் செடிக்கு அடியில் மறைந்துகொள்ளுங்கள்...” ட்ரேவர் ஒரு பசலைக்கீரைச் செடிக்கு அடியில் ஒளிந்துகொண்டது.

“ஓடில்லா நத்தை ட்ரேவர் மெதுவாகப் பேசுகிறேன். எல்லா நத்தைகளும் பாதுகாப்பாகவே உள்ளன. ஆனால், ட்ரெய்ல்பிலாஸர் இன்னும் பந்தயத் தடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறார். தன் மின்னல்வேக ஓட்டம் தன்னைத் தப்பிக்க வைத்துவிடும் என்கிற நம்பிக்கையோடு ஓடுவதுபோல தெரிகிறது. அதோ கேமராவைப் பார்த்து மகிழ்ச்சியோடு கையசைத்தபடி தன்னுடைய சாதனையை முறியடித்துவிடும் உறுதியுடன் ஓடுகிறார்…” அப்போது நடக்கக்கூடாத ஒரு நிகழ்வு நடந்து விட்டது.

“ஐயோ… அன்பானவர்களே, நம்ப முடியாத வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த ட்ரெய்ல்பிலாஸரின் வேகம், அதனினும் அதிவேகம் கொண்ட பறவையிடமிருந்து தப்பிக்கப் போதுமானதாக இல்லை. சந்தேகமே இல்லை, நத்தைகளின் ஓட்டப்பந்தயப் போட்டிக்கு இது மிகப் பெரிய ஆபத்து.

அந்தப் பறவை தன்னுடைய கால் நகங்களில் நம் வெற்றியாளரைத் தூக்கிக்கொண்டு உயரே பறப்பதைப் பார்க்க முடிகிறது…” பசலைக்கீரைச் செடிகளுக்கு அடியில் ஒளிந்திருந்த நத்தைகளுக்குப் பயமாக இருந்தது. ட்ரெய்ல்பிலாஸருக்கு என்ன ஆகுமோ என்கிற கவலையில் அனைத்தும் இருந்தன.

“அடடா! நம்ப முடியாத காட்சி! தன் கால்களில் இருந்த ட்ரெய்ல்பிலாஸரை அந்தரத்தில் அப்படியே விட்டுவிட்டுப் பறந்துவிட்டது அந்தப் பறவை. ட்ரெய்பிலாஸர் கீழே வருகிறார்… இதோ என் அருகில் வந்து விழுந்துவிட்டார். வெற்றி வீரரே, ஓடி வாருங்கள். பசலைக்கீரை இலைகளுக்கு அடியில் மறைந்து கொள்ளுங்கள்” என்று மகிழ்ச்சியில் கத்தியது ட்ரேவர் நத்தை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, ஆபத்து அகன்றதும் ட்ரெய்ல்பிலாஸரிடம் நத்தைகள் வந்தன. ஒரு சாகசத்தை நேரடியாகப் பார்த்ததில் அவை மகிழ்ச்சியாக இருந்தன. மரணம் நிச்சயம் என்னும் நிலையில் மில்லிமீட்டர் இடைவெளியில் தப்பியிருந்தது ட்ரெய்ல்பிலாஸர்.

“வாழ்த்துகள் வெற்றி வீரரே!” “இதைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீரா?” “ஆம் ட்ரேவர். எனக்கும் மரண பயம் இருந்தது, ஆனால் நான் அதைப் பற்றி யோசிக்கவில்லை. இதுவரை இருந்த நத்தைகளிலேயே, மிக வேகமாக ஓடக்கூடய நத்தையாக நான் இருந்தாலும், ஒரு பறவையின் வேகத்துக்கு என்னால் ஓட முடியாது என்பதை நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததே இல்லை. ஓடு சிறிதளவு பாதிப்படைந்துள்ளது. ஆனால், ஒரு முக்கியமான பாடத்தை இன்று கற்றுக்கொண்டேன்.”

“உண்மைதான், ட்ரெய்ல்பிலாஸர். சில செயல்களில் சிறப்பாக இருப்பதாலேயே, யாராலும் நம்மைத் தோற்கடிக்கவே முடியாது என்கிற அர்த்தம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டிருப்பீர்கள். சரி, தோழர்களே! நம் நிகழ்ச்சி இப்போது நிறைவுக்கு வருகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தீர்கள் என நம்புகிறோம். டோனா அத்தையின் தோட்டத்தில் ஏராளமான கீரைகள் இருக்கின்றன. எவ்வளவு வேண்டுமோ நன்றாகச் சாப்பிடச் சொல்லியிருக்கிறார் டோனா அத்தை.” அனைத்து நத்தைகளும் விருந்து உண்ணும் ஆவலில் பசலைக்கீரைச் செடிகளை நோக்கிச் சென்றன.

- தமிழில்: சூ.ம.ஜெயசீலன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x