Published : 05 Mar 2025 06:57 AM
Last Updated : 05 Mar 2025 06:57 AM
கடவுள் இருந்தாரா, இருக்கிறாரா, இருப்பாரா, டிங்கு? - இரா. தக்ஷ்ணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
என்ன தக்ஷ்ணா, மூன்று காலங்களிலும் கேள்வி கேட்டுவிட்டீர்கள்! உங்கள் வயதுக்கு இந்தக் கேள்வி ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் மீன்கள் இறந்துவிடுவது ஏன் என்று சில வாரங்களுக்கு முன்பு நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொன்னதுபோல், இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிட முடியாது.
இயற்கையாக இருக்கும் எது ஒன்றையும் மனித அறிவால் ஏன், எதற்கு, எப்படி என்று காரணங்களைத் தேடிக் கண்டறிந்து வைத்திருக்கிறோம். அதனால் நீங்கள் கேட்கும் மற்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட முடியும். அவை எல்லாம் அறிவியல் கேள்விகள்.
ஆனால், கடவுள் பற்றிய கேள்வி நம்பிக்கையைச் சார்ந்தது. அதனால் உண்டு, இல்லை என்று சொல்லிவிட இயலாது. நீங்கள் நிறைய படியுங்கள். அந்தப் படிப்பின் மூலம் கிடைக்கும் அறிவால் ஒருகட்டத்தில் நீங்களே இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய முடியும்!
சுவைக்குச் சேர்க்கப்படும் அஜினோமோட்டோ ஏன் உடலுக்குத் தீங்கு என்று சொல்கிறார்கள், டிங்கு? - ம. மெளசிகன், 7-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய காந்தியார் நடுநிலைப் பள்ளி, வேலாயுதம்பாளையம், கரூர்.
மோனோ சோடியம் குளுட்டமேட் என்பதும் ஒருவகை உப்புதான். இந்த உப்பை முதன் முதலில் தயாரித்த நிறுவனம்தான் அஜினோமோட்டோ. பிறகு இந்த உப்புக்கே அந்த நிறுவனத்தின் பெயர் வந்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் சுவைக்காக அஜினோமோட்டோ சேர்க்கப்படுகிறது.
நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்பையும் அளவோடுதான் பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் உடலுக்குத் தீங்குதான். அதேபோல மோனோ சோடியம் குளுட்டமேட் உப்பையும் குறைந்த அளவில் பயன்படுத்தும்போது பிரச்சினை இல்லை. இங்கு பெரும்பாலான துரித உணவு வகைகளில் அஜினோமோட்டோ பயன்படுத்துவதால், அவற்றை விரும்பி அதிகமாகச் சாப்பிடும்போது உடலுக்குத் தீங்கு ஏற்படலாம், மெளசிகன்.
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வந்தது, டிங்கு? - ச. கனிஷ்கா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
நிலத்திலிருந்து தண்ணீரை வேர்கள் மூலம் தென்னை மரம் இழுத்துக்கொள்கிறது. வேர்களில் இருந்து தண்டுகள் வழியாக மரத்தின் பல பாகங்களுக்கும் தண்ணீர் செல்கிறது. அப்படிச் செல்லும்போது தண்ணீர் ஊட்டச்சத்துகளை எடுத்துச் செல்கிறது. அந்தத் தண்ணீர் தென்னை மரம் கருத்தரிக்கும்போது விதையில் எண்டோஸ்பெர்ம் எனும் திசுவாக உருவாகிறது. தேங்காய் வளர வளர திசு அடர்த்தியாகி, தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது, கனிஷ்கா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT