Published : 26 Feb 2025 06:47 AM
Last Updated : 26 Feb 2025 06:47 AM
மனித உடலுக்குள் பிளாஸ்டிக் ஊடுருவிவிட்டதாகச் சொல்கிறார்களே, உண்மையா? அதைச் சரி செய்வதற்கான ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றனவா, டிங்கு? - வி. ஆதித்யா, வி. விஷ்வா, மினர்வா பப்ளிக் பள்ளி, அருப்புக்கோட்டை.
மனித உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் ஊடுருவிவிட்டன. மைக்ரோ பிளாஸ்டிக் துகள் என்பது 5 மில்லி மீட்டருக்கும் குறைவானது. பிளாஸ்டிக் கழிவுகள் மட்காமல், சிதைவதால் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் உருவாகின்றன. இவை நீர், காற்று, உணவு மூலம் மனித உடலுக்குள் சென்றுவிடுகின்றன.
உடலுக்குள் செல்லும் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் மலம் வழியாக வெளியேறிவிடும் என்று நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால், அது ரத்தத்தில் கலந்துவிட்டதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியிருக்கிறார்கள். மனித உடலுக்குள் புகுந்த மைக்ரோ பிளாஸ்டிக்துகள்கள் நோய்களை உண்டாக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இப்போதைக்கு இந்தத் துறையில் இன்னும் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது. அதேநேரம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களால் நமக்கு ஆபத்து இருப்பது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதும் உண்மைதான் ஆதித்யா, விஷ்வா.
ஒரு நொடிக்குச் சுமார் 30 லட்சம் செல்கள் உருவாகிறதாம். ஒரு நொடிக்கு நம் உடலில் இறக்கும் செல்களின் எண்ணிக்கை எவ்வளவு? செல்களின் பிறப்பும் இறப்பும் சமமாக இருக்கிறதா? - வி. சிவப்ரியா, 7-ம் வகுப்பு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தங்களாச்சேரி.
ஒரு நாளைக்குச் சராசரியாக 50 முதல் 70 பில்லியன் செல்களை மனிதர்கள் இழக்கிறார்கள். 8-14 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு 20-30 பில்லியன் செல்களை இழக்கிறார்கள். செல்களின் வாழ்நாள் அனைத்து செல்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வெள்ளை ரத்த அணுக்கள் 13 நாள்கள் மட்டுமே வாழ்கின்றன.
சிவப்பு ரத்த அணுக்கள் 120 நாள்கள் வரை வாழ்கின்றன. கல்லீரல் செல்கள் 18 மாதங்கள் வரை வாழ்கின்றன. மூளை செல்கள் ஒரு மனிதரின் வாழ்நாள் முழுவதும் உயிருடன் இருக்கின்றன. ஆனால், எல்லா செல்களும் ஒருநாள் மடிந்துதான் போகின்றன. ஆனாலும் பிறக்கும் செல்களுக்கும் இறக்கும் செல்களுக்கும் இடையே சமநிலை இருக்கவே செய்கிறது, சிவப்ரியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT