Published : 19 Feb 2025 06:37 AM
Last Updated : 19 Feb 2025 06:37 AM
ஒரு பூனை எப்போது, எங்கே தோன்றும் என்று யாராலும் சொல்ல முடியாது. ரயில் பிடிப்பதற்காக விரைந்து சென்றுகொண்டிருப்பேன். இன்னும் 2 நிமிடங்கள்தான் இருக்கின்றன... இன்னும் 1 நிமிடம்தான் இருக்கிறது... இதைப் பிடித்தால்தான் சரியான நேரத்துக்குச் சரியான இடத்துக்குப் போய்ச் சேரமுடியும். அங்கே காத்துக்கொண்டிருக்கும் நண்பரைக் காணவும் முடியும். கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி ஓட்டமும் நடையுமாக விரைந்து கொண்டிருப்பேன்.
தொப்பென்று வானத்திலிருந்து குதித்ததுபோல் ஒரு வெள்ளைப் பூனை என் முன்னால் வந்து நிற்கும். வட்டக் கண்களைக் கொண்டு என்னை உற்று உற்றுப் பார்க்கும். மணிக்கட்டைப் பார்ப்பேன். இன்னும் 20 விநாடிகள் இருக்கின்றன. அதோ, ரயில் மேடை. தாவி ஓடினால் பிடித்துவிட முடியும்.
ஆனால், தாவி வந்து நிற்கும் பஞ்சுப் பூனையை என்ன செய்வது? அது ஏன் என்னைக் குறுகுறுப்போடு பார்க்கிறது? கொட்டாவி விடுவது போல் வாயை ஏன் திறந்து மூடுகிறது? மியாவ் என்று ஏன் சத்தமிடுகிறது? என்னைவிட உனக்கு உன் ரயில் முக்கியமா, உன் நண்பர் முக்கியமா, உன் வேலை முக்கியமா என்று கேட்கிறதா? இங்கேயே இரு, ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று சொன்னால் கேட்குமா? தோன்றியதுபோல் மாயமாக மறைந்துவிட்டால் என்ன செய்வது? குனிந்து தரையில் அமர்ந்துகொண்டேன். என் கால்மீது முதுகை வைத்துத் தேய்க்க ஆரம்பித்தது பூனை. வாலைச் சுழற்றி என் மடிமீது தொப்பென்று போட்டது. மீண்டும் ஒரு மியாவ்!
தலையை வருடிக்கொடுத்தேன். வருட, வருட தன் தலையைத் தாழ்த்திக்கொண்டே போனது. முதுகைத் தடவினேன். மேலும் நெருக்கமாக வந்து ஒட்டிக்கொண்டு, என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு குழந்தைபோல் மியாவ் என்றது. வா என்றேன். தாவி வந்து ஏறிக்கொண்டது. என் கண் முன்னால் ஒரு பந்துபோல் உடலை வளைத்து மடிமீது படுத்துக்கொண்டது. ரயில் என்னைவிட்டுப் பறந்து செல்லும் ஓசையைக் கேட்டேன். பரவாயில்லை.
இன்றில்லாவிட்டால் என்ன, இன்னொரு நாள் சந்தித்துக்கொள்ளலாம். மன்னித்துக்கொள் நண்பா, ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டது என்று சொன்னால் நண்பர் புரிந்துகொள்வார். முக்கியமான வேலை என்றால் முக்கியமான பூனை என்று அவருக்குத் தெரியும். என்னைத் தெரிந்த எல்லாருக்குமே தெரியும். என் உலகம் பூனைகளால் ஆனது.
அதனால்தான் நான் என்ன எழுதினாலும் அதில் ஒரு பூனை வந்துவிடுகிறது. ஒரு ஜப்பானிய நகரத்தின் கதையைக் கவனமாகத் திட்டமிட்டு எழுதி முடிப்பேன். எழுதி முடித்த பிறகு படித்துப் பார்த்தால் அங்கும் இங்கும் பூனை அமைதியாக உலவிக்கொண்டிருக்கும். ஒரு குடும்பத்தின் கதையை எழுதுவேன். பூனை தோன்றிவிடும். ஒரு பெண்ணின் கதை, ஒரு குழந்தையின் கதை, ஒரு தாத்தாவின் கதை, ஒரு நூலகத்தின் கதை. எதை எழுதினாலும் அதற்குள் இருந்து மியாவ், மியாவ் என்று சத்தம் வந்துகொண்டே இருக்கிறது.
சரி, கற்பனையாக ஓர் உலகை உருவாக்கிப் பார்ப்போம் என்று முயன்று பார்த்தேன். அந்த உலகிலும் மனிதர்களுக்கு இணையாகவும் மனிதர்களைவிட மிகுதியாகவும் பூனைகள்தான் சுற்றிக்கொண்டிருந்தன. நம்புங்கள், இதுவரை ஒரே ஒரு பூனையைக்கூட நான் திட்டமிட்டு எழுதியதில்லை.
இருந்தும், எப்படி உன்னால் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்க முடிகிறது? எதிர்பாராத இடங்களில் எல்லாம் எப்படித் தோன்ற முடிகிறது உன்னால்? நீ உண்மையில் யார்? நீ உண்மையான உயிர்தானா அல்லது மாயமா? உன் மியாவுக்கு என்ன பொருள்? உன்னைப் பார்க்கும்போது ஏன் எனக்கு உலகம் மறந்து போய்விடுகிறது? தொடர்ந்து என் வேலையைக் கெடுத்துக்கொண்டிருந்தாலும் உன்மீது ஏன் கோபமே வர மாட்டேன் என்கிறது? நான் எழுதிக் கொண்டிருக்கும்போது என் மேஜஜையின்மீது என் அனுமதி இல்லாமல் நீ தாவி ஏறுவதைக்கூட ஏற்க முடிகிறது.
என் எழுத்துகளுக்குள் எப்படி நீ தாவி அமர்ந்துகொள்கிறாய்? நான் ஏற விரும்பிய ரயில் மறைந்து, மேலும் 3 வண்டிகள் சென்ற பிறகும் பால்நிறப் பூனையைத் தடவிக்கொடுத்துக் கொண்டே இருந்தேன். நீ ஒரு பெரும் புதிர். எவ்வளவு வாழ்நாள்கள் கிடைத்தாலும், எத்தனை ஆயிரம் பூனைகளோடு பழகினாலும் உன்னுடைய ஒரே ஒரு சிறு அசைவைக்கூட என்னால் புரிந்துகொள்ளவே முடியாது. எத்தனை பெரிய கற்பனை உலகை உருவாக்கினாலும் உன் வாழ்வின் ஒரே ஒரு கணத்தைக்கூட என்னால் கற்பனை செய்ய முடியாது.
என்னோடும் உலகோடும் பேசுவதற்கு உன்னிடம் ஒரே ஒரு சொல்தான் இருக்கிறது. ஆனால், அந்த ஒரு சொல்லுக்குள் நான் இதுவரை எழுதிய லட்சம் சொற்களில் இல்லாத அதிசயம் ஒளிந்துகொண்டிருக்கிறது. என்னால் சொல்ல முடியாத கதைகளை எல்லாம் அந்த ஒற்றை மியாவில் நீ சொல்லிவிடுகிறாய்!
என்றேனும் ஒரு நாள் உன்னைப் போல் நானும் பாய்ந்து, பாய்ந்து எல்லாவற்றையும் தேட ஆரம்பிப்பேன். உன்னைப்போல் எல்லாவற்றுக்குள்ளும் நுழைந்து பார்க்கும் ஆற்றலை அடைவேன். உன் துடிப்பு என்னிடமும் ஒட்டிக்கொள்ளும். அப்போது உன் கதையை எழுதுவேன். எழுதி முடித்ததும் உன்னை மடியில் போட்டுக்கொண்டு உன் காதுக்குள் படித்துக் காட்டுகிறேன். எனக்கு எழுத வருகிறதா, நான் ஓர் எழுத்தாளன் ஆகிவிட்டேனா என்பதை நீதான் சொல்ல வேண்டும்.
ஹாருகி முரகாமி: உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர். இவருடைய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. ஜப்பானிலும் சர்வதேச அளவிலும் பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன.
(இனிக்கும்)
- marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT