Published : 19 Feb 2025 06:23 AM
Last Updated : 19 Feb 2025 06:23 AM
கரடியின் முதுகில் லேசாகத் தட்டிவிட்டு மரத்தின் மீது ஏறிக்கொண்டது குரங்கு. கோபம் அடைந்த கரடி, மரத்திலேறி அதைப் பிடிக்க முயற்சி செய்தது. ஆனால், குரங்கு சட்டென்று இன்னொரு மரத்துக்குத் தாவிவிட்டது. அந்த மரத்தில் இருந்துகொண்டு கரடியைப் பயமுறுத்துவது போலச் சத்தமாகச் சிரித்தது குரங்கு. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு நரி விழுந்து விழுந்து சிரித்தது. கரடியின் கோபம் இன்னும் அதிகமானது.
நரிக்கு அருகில் இருந்த ஆமை சிரிக்காமல் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தது. ‘என்ன, நாம இவ்வளவு குறும்பு செய்தும் இந்த ஆமை சிரிக்க மாட்டேங்கிறதே... என்ன செய்வது?’ என்று யோசித்தது குரங்கு. குரங்கு இருக்கும் மரத்துக்கு அருகே வந்த நரி, “நீ செய்யும் சேட்டைகளால் கவலைகள் மறந்து சிரித்தேன். நீ ஏன் திடீரென்று கவலையோடு உட்கார்ந்திருக்கிறாய்? உன்னுடன் நட்புகொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன். என்னை உன் நண்பனாக ஏற்றுக்கொள்வாயா?” என்று கேட்டது.
குரங்கு மகிழ்ச்சியாகத் தலையை அசைத்தது. உடனே, “நானும் உன் நண்பனாக இருக்கிறேனே?” என்று ஆமையும் கேட்டது. குரங்கு அமைதியாக இருந்தது. “ஆமையையும் நண்பனாகச் சேர்த்துக்கலாமே…” என்றது நரி.‘சரி’ என்று தலை ஆட்டியது குரங்கு. அன்றிலிருந்து நரி, ஆமை, குரங்கு ஆகிய மூன்றும் நண்பர்களாக வலம்வந்தன.
குரங்கு வழக்கம்போல் குறும்புகளைத் தொடர்ந்து கொண் டிருந்தது. ஆனால், அந்தக் குறும்பு மூலம் யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. யார் மனதையும் காயப்படுத்தவும் இல்லை. ஆனாலும் கரடி, மான் போன்ற சில விலங்குகள் குரங்கின் மீது எரிச்சலுடன் இருந்தன.
அன்று குரங்கும் நரியும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டு காட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றன. “அமைதியாகப் போகக் கூடாதா? எதுக்கெடுத்தாலும் சிரிக்குதுங்க” என்று கரடி மானிடம் சொன்னது. ”ஆமா, இதுக்கு ஒரு முடிவு கட்டணும்” என்றது மான். “குறும்புக்காரக் குரங்கை எப்படியாவது காட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.” “அது எப்படி முடியும்? இந்தக் காடு எல்லாருக்கும் பொதுவானதுதானே…” என்று கேட்டது அங்கு வந்த யானை.
“ஒரு போட்டி நடத்தி, அதில் குரங்கு தோற்றுப்போனால் காட்டைவிட்டு விரட்டி விடலாம்…” என்று ஏற்கெனவே தன் மனதில் இருந்த திட்டத்தைச் சொன்னது மான். “என்ன போட்டி?” “குரங்கு சேட்டைகளைச் செய்து இரண்டு விலங்குகளையாவது சிரிக்க வைக்க வேண்டும். அப்படிச் சிரிக்க வைத்து விட்டால், அது காட்டிலேயே இருக்கலாம். இல்லை என்றால், குரங்கு காட்டைவிட்டு ஓடிவிட வேண்டும்…”
“நாம் வேண்டுமானால் சிரிப்பை அடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் நரியும் ஆமையும் அதன் நண்பர்களாச்சே! அவை இரண்டும் சிரித்து விட்டால் குரங்கு வென்றுவிடுமே…” என்றது யானை. உடனே கரடி, “நரி வேண்டுமானால் சிரிக்கும்.
ஆனால், ஆமை சிரிக்கவே சிரிக்காது. என்னிடம் குரங்கு குறும்பு செய்த அன்று பார்த்தேன். சிரிக்காமல் அமைதியாகத்தான் இருந்தது…” அன்று மாலையே விலங்குகள் கூடி முடிவெடுத்த விவரங்களையும் போட்டியையும், குரங்கிடம் சொன்னது மான். நரியையும் ஆமையையும் நம்பி போட்டிக்கு ஒப்புக்கொண்டது குரங்கு. போட்டி நாளும் வந்தது.
விதவிதமான குறும்புகளைச் செய்ய ஆரம்பித்தது குரங்கு. வேண்டுமென்றே சிரிக்காமல் அமைதியாக இருந்தன விலங்குகள். நரி மட்டும் விழுந்து விழுந்து சிரித்தது. ஆமையைப் பார்த்தது குரங்கு. அது அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. தோல்வி அடையப்போவதை உணர்ந்த குரங்கு,
கவலையாக நின்றது. “போட்டியின் முடிவை யானை அறிவிக்கும்” என்றது மான். அப்போது சிரிப்புச் சத்தம் கேட்டது. எல்லா விலங்குகளும் திரும்பிப் பார்த்தன. ஆமை சிரித்துக்கொண்டிருந்தது. உடனே வெற்றிக் களிப்பில் குரங்கும் நரியும் நடனம் ஆடின.
கோபம் கொண்ட கரடி, “அதெப்படி, இப்ப மட்டும் உனக்குச் சிரிப்பு வந்தது...” என்று ஆமையிடம் கேட்டது. “போன வாரம் குரங்கு உன் முதுகுல தட்டிட்டு, மரத்தில் ஏறுச்சே... அது நினைவுக்கு வந்தது. என்னால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதான் சிரித்துவிட்டேன். சிரிக்கிறது எல்லாம் ஒரு குற்றமா? ஜாலியா எடுத்துக்கோங்கப்பா” என்றது ஆமை. உடனே எல்லா விலங்குகளும் சிரித்துவிட்டன. அதைப் பார்த்து குரங்கும் நரியும் ஆமையும் நிம்மதியடைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT