Published : 18 Feb 2025 01:48 PM
Last Updated : 18 Feb 2025 01:48 PM
எட்மண்ட் ஹாலி இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர், ஹாலி வால்மீனைக் கண்டறிந்தவர் . ஐசக் நியூட்டனின் பிரின்சிபியா என்கிற புத்தகம் வெளிவர பெரும்பங்காற்றியவர். லண்டன் அருகிலுள்ள ஹேகர்ஸ்டன் நகரில் 1656, நவம்பர் 8இல் பிறந்தார் எட்மண்ட் ஹாலி. லண்டன் செயிண்ட்பால் பள்ளியில் படித்தார். கணிதத்தை ஆர்வத்தோடு பயின்றார். கூடுதலாக லத்தீன், பிரெஞ்சு மொழிகளையும் கற்றார்.
1673இல் ஆக்ஸ்போர்டில் உள்ள குயின்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது வானியல் துறை பிரபலமாக இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்தார் ஹாலி. கணிதம் நன்றாக வரும் என்பதால் வானியலில் கணக்கீடுகளைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். சூரியக் குடும்பம் பற்றிய ஹாலியின் கட்டுரைகள் பலராலும் பேசப்பட்டன.
ஆனால், கட்டுரைகள் ராயல் கழகத்தில் வெளிவந்தால் இன்னும் அதிக மக்களைச் சென்றடையும், உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றார் ஆசிரியர். ஹாலி தன் தந்தையின் நிதி உதவியால் ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய நுண்ணோக்கியை வாங்கினார். கோள்கள் ஒரே வேகத்தில் சூரியனைச் சுற்றவில்லை என்பதைக் கண்டறிந்தார். இதைக் கட்டுரையாக எழுதி ராயல் கழகத்துக்கு அனுப்பினார். கட்டுரை வெளியானது.
வடக்கு வான் வால்மீன்களை ஜான் ஃபிளம்ஸ்டீடு ஆராய்ந்து பட்டியலிட்டார். ஹாலிக்குத் தானும் இப்படிச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. தெற்கு வானை ஆராய்ச்சி செய்ய நினைத்தார் ஹாலி. முதுகலைப் பட்டத்திற்கு முன்பாக ஆக்ஸ்போர்டைவிட்டு வெளியேறினார். இரண்டாம் சார்லஸ் மன்னரின் உதவியுடனும், தந்தையின் நிதி உதவியுடனும் ஆராய்ச்சி செய்ய தெற்கு அட்லாண்டிக்கின் செயிண்ட் ஹெலினா தீவுக்குச் சென்றார். அங்கு நிலவிய மோசமான வானிலையால் முதலில் விரக்தி அடைந்தார். ஆனால், வீடு திரும்பியபோது, 341 நட்சத்திரங்களின் தீர்க்கரேகைகளையும், அட்சரேகைகளையும் பதிவு செய்திருந்தார். 1678இல் அந்த நட்சத்திரங்களின் பட்டியலை வெளியிட்டார். இதன் மூலம் தன்னை வானியலாளராக நிலைநிறுத்திக்கொண்டார். ராயல் கழகத்தின் உறுப்பினரானார்.
படிப்பைப் பாதியில் விட்டுச் சென்றதால் கல்லூரி அவரை அனுமதிக்கவில்லை. மன்னரின் பரிந்துரையால் மீண்டும் ஆக்ஸ்போர்டில் சேர்ந்து முதுகலை முடித்தார்.
ராபர்ட் ஹுக்கும் கிறிஸ்டோபர் ரென்னும் நியூட்டனுடன் சேர்ந்து எந்தச் சக்தியால் சூரியனைக் கோள்கள் சுற்றுகின்றன, அவை ஏன் விண்வெளியில் பறக்கவில்லை, அல்லது சூரியனில் விழவில்லை என்பது போன்றவற்றைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டனர். கோள்களின் இயக்கங்களுடன் பொருந்தக்கூடிய ஒரு சுற்றுப்பாதையை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. அப்போதுதான் ஹாலி நியூட்டனைச் சந்தித்தார்.
சுற்றுப்பாதை நீள்வட்டப் பாதை என்பதை நிரூபிக்கக் கணக்கீடுகள் சரியாக இல்லை. அதிகமான தரவுகளை அர்த்தமுள்ள வரிசையில் குறைத்தார் ஹாலி. நியூட்டனுக்கும் ஹாலிக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. நியூட்டனின் படைப்புகளை ஹாலி வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார். ராயல் கழகத்தின் உறுப்பினராக இருந்த ஹாலி அதன் செயலாளர் ஆனார். தன் கட்டுரைகள் ராயல் கழகத்தில் வந்தால் போதும் என்று இருந்த ஹாலி, படிப்படியாக வளர்ந்து அதன் செயலாளராக உயர்ந்தார்.
1704இல் ஆக்ஸ்போர்டில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார் ஹாலி. 1705இல் ஹாலி 24 வால்மீன்கள் சுற்றுப்பாதைகளின் பட்டியலை வெளியிட்டார். 1531, 1607, 1682ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட வால்மீன்கள் ஒத்த சுற்றுப்பாதைகளைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்தார். ஒரு முறை 75 ஆண்டுகள் கழித்து வருவதாகவும், அடுத்த முறை 76 ஆண்டுகள் கழித்து திரும்புவதாகவும் ஹாலி கணக்கிட்டார்.
மீண்டும் 76 ஆண்டுகள் கழித்து 1758இல் வரும். அப்போது நான் உயிருடன் இருக்க மாட்டேன் என்றார் ஹாலி. ஜனவரி 14, 1742 இல் ஹாலி மறைந்தார். அவர் சொன்னதுபோல் 16 ஆண்டுகள் கழித்து 1758இல் அந்த வால்மீன் தோன்றியது. ஹாலி கண்டறிந்தது என்பதால் அவர் நினைவாக அதற்கு, ’ஹாலி வால்மீன்’ எனப் பெயரிட்டனர். அதைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு 75, 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த வால்மீன் பூமிக்கு மிக அருகில் வருகிறது.
- கட்டுரையாளர், எழுத்தாளர்
| முந்தைய அத்தியாயம்: ஆண்டனி வான் லீவன்ஹோக் | விஞ்ஞானிகள் - 21 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT