Published : 12 Feb 2025 06:21 AM
Last Updated : 12 Feb 2025 06:21 AM

பறவைகளுக்கு ஏன் பற்கள் இல்லை? | பறப்பதுவே 11

மனிதர்களுக்குப் ‘பல் போனால் சொல் போச்சு’ என்கிறோம். பல் விழுந்துவிட்டால் கடினமான பொருள்களைச் சாப்பிடுவது சிரமம். மாடு வாங்கும்போது எத்தனை பற்கள் இருக்கின்றன என்பதைப் பார்த்துதான் வாங்குவார்கள். உணவை அசைபோட்டு உண்ணக்கூடிய நிலையில் அவை இருக்கின்றனவா என்பதைப் பற்கள் உறுதிசெய்கின்றன.

பறவைகளுக்குப் பற்களே இல்லை. ஆனால், எப்படிச் சாப்பிடுகின்றன? பறவைகள் தங்கள் செரிமானத்திற்காக உறுதியான அரவைப் பையைக் கொண்டுள்ளன. உணவை விழுங்கும்போது சிறு கற்களையும் பறவைகள் விழுங்கிவிடும். அந்தக் கற்கள் அரவைப் பையில் சேர்ந்து, கடினமான கொட்டை போன்ற உணவுப் பொருள்களை அரைத்துச் செரிக்க உதவுகின்றன.

பறவையின் அளவைப் பொறுத்தும், அது உண்ணும் உணவைப் பொறுத்தும், அது விழுங்கும் கற்களின் அளவு மாறுபடும். தொடர்ந்து இந்தக் கற்கள் அரவைப் பையில் இருப்பதால் தேய ஆரம்பிக்கும். குறிப்பிட்ட அளவு தேய்ந்த பிறகு உடலில் இருந்து அவற்றை வெளியே தள்ளிவிட்டு, புதிய கற்களை உண்டுவிடும். எல்லாப் பறவைகளும் இந்த முறையைப் பயன்படுத்துவது இல்லை. விதைகள், கொட்டைகள், மீன் உள்படக் கடினமான உணவு வகைகளை உண்ணக்கூடிய பறவைகள் இந்த முறையைக் கையாளு கின்றன.

சில பறவைகள் மென்மையான பூச்சிகள், பழங்கள், தேன் போன்றவற்றை உண்பவை. இவற்றைச் செரிப்பதற்குக் கற்கள் தேவைப்படாது. பறவைகளுக்குப் பல் இருந்ததா, அல்லது பரிணாம வளர்ச்சியால் பற்களை இழந்துவிட்டதா? டைனசோர் காலத்துக்கும் பறவை காலத்துக்கும் இடைப்பட்ட உயிரினமான ‘ஆர்கியாப்டெரிக்ஸ்’ முதலில் பறந்த உயிரினமாக வரையறுக்கப்படுகிறது.

இவற்றின் புதைபடிவங்களில் ஆரம்பகாலப் பறவைகளுக்குச் சிறிய கூர்மையான பற்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தப் பற்கள் இரையைப் பிடிக்கவும் கிழித்து உண்ணவும் உதவியாக இருந்திருக்கின்றன. காலப்போக்கில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில் பறவைகள் பற்கள் இல்லாத உடல் அமைப்பைப் பெற்றன. ஏனென்றால், பற்களைத் தாங்குவதற்கு வலிமையான தாடை எலும்பு தேவைப்படும்.

அதனால் பறவையின் எடை கூடும். எடை கூடினால் பறப்பதற்குச் சவாலாக மாறிவிடும். பற்களைவிட பறவைகளின் அலகு உணவு தேடுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதனால் பற்களுக்குப் பதிலாகப் பறவைகளுக்கு அலகுகள் உருவாகிவிட்டன. கடினமான உணவைச் செரிக்க வைப்பதற்கு அரவைப் பை உதவிசெய்கிறது. அதனால் பற்கள் இல்லாமலும் உணவை செரிமானம் செய்யக்கூடிய உயிரினமாக அவை உருமாற்றம் அடைந்தன.

பறவை எந்தச் சூழ்நிலையில் வாழ்கிறது, எந்தவிதமான உணவைச் சாப்பிடுகிறது என்பதைப் பொறுத்து பறவைகளின் அலகுகள் வேறுபடுகின்றன. அலகுகள் பற்களைவிட இலகுவானதாக இருப்பதும் அதன் பரிணாமத்தின் ஒரு மாற்றமாக உள்ளது. சிட்டுக்குருவி போன்ற விதை உண்ணும் பறவைகள் குறுகிய கூம்பு வடிவ அலகுளைக் கொண்டுள்ளன. அவை விதைகளை உடைத்துச் சாப்பிடுகின்றன.

மரங்கொத்தி போன்ற பறவைகள் கூர்மையான அலகுகளைக் கொண்டுள்ளன. அவை மரங்களில் ஓட்டை இடுவதற்கும், பூச்சிகளைப் பிடித்து உண்பதற்கும் ஏதுவாக இருக்கின்றன. கொட்டையை உடைத்து, பருப்பு உண்ணும் கிளிகள் வலிமையான வளைந்த அலகுகளைக் கொண்டுள்ளன.

தேன் குடிப்பதற்காக ஓசனிச் சிட்டுகள் நீண்ட மெல்லிய அலகுகளைக் கொண்டுள்ளன. மீன்பிடிக்கும் பறவைகள், இறந்து போன உயிரினங்களின் சதையைக் கிழித்து உண்ணும் உயிரினங்கள் என ஒவ்வொரு வகைப் பறவையும் அதன் உணவுமுறைக்கு ஏற்ப, பிரத்யேகமான அலகைக் கொண்டுள்ளது.

நம் உடலில் முடி, நகங்களை உருவாக்கும் கெரட்டின் புரதம் பறவைகளின் அலகுகளையும் உருவாக்குகிறது. வீட்டில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு அலகுகளின் பயன்பாடு குறையும்போது, அலகு நீளமாக வளரும். அதை வெட்டி விடுவார்கள். உணவை எடுத்துச் சாப்பிடு வதோடு, இறகுகளைச் சுத்தம் செய்யவும், கூடுகட்டு வதற்கான பொருள்களைச் சேகரிக்கவும், கூடுகட்டவும் அலகுகள் பயன்படுகின்றன. எதிரிகளிடம் சண்டை போடு வதற்கான ஆயுதமாகவும் அலகு களைப் பயன்படுத்தும் பறவைகளும் இருக்கின்றன.

மனிதர்களின் தாடை அமைப்பைப் போலப் பறவை அலகின் மேல்பகுதி அசையாததாகவும் கீழ்ப்பகுதி அசையக்கூடியதாகவும் இருக்கிறது. மரங்களை ஓட்டையிட மரங்கொத்திகள் அலகைப் பயன்படுத்துகின்றன. ஒரு நொடிக்கு 25 முறை அவை மரத்தைத் தாக்குகின்றன. மரங்கொத்தியின் உடல் அமைப்பில் அதன் அலகு மரத்தைக் கொத்தும்போது ஏற்படும் விசை தலையில் 0.3 சதவீதம் மட்டுமே பாயும். மீதி 99.7 சதவீதம் அதன் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று விடுகிறது.

தலை உள்வாங்கும் அதிர்வுகளும் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. அதனால் அதன் மண்டை ஓட்டின் உள்ளே வெப்பம் அதிகரிக்கிறது. அந்த வெப்பத்தைக் குளிர்விக்க இடை இடையே ஓய்வு எடுத்துக் கொள்கிறது. கூடு கட்டுவதற்கு மட்டும் மரங்கொத்திகள் மரத்தைத் துளையிடுவது இல்லை.

மரப்பட்டையில் ஒளிந்திருக்கும் சிறிய பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடுவதற்கும் பயன்படுத்துகின்றன. மரத்தைத் தட்டும்போது எழுப்பப்படும் ஒலியின் வழியாகத் தனது துணையை ஈர்க்கவும், தன் கூட்டத்துக்குச் செய்தியைத் தெரிவிக்கவும் செய்கின்றன மரங்கொத்திகள்.

(பறப்போம்)

- writersasibooks@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x