Published : 28 Jan 2025 12:38 PM
Last Updated : 28 Jan 2025 12:38 PM

நீல்ஸ் போர் | விஞ்ஞானிகள் - 19

அணுவியலில் அடிப்படைக் கருத்தாங்களைக் கொடுத்த மிகச் சிறந்த விஞ்ஞானி நீல்ஸ் போர். அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். 1922இல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

1885, அக்டோபர் 7 அன்று டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகனில் பிறந்தார் நீல்ஸ் போர். தந்தை எரிக் போர் ஆசிரியர், தாய் எலன் அட்மிராலா.
நீல்ஸ் போர் பள்ளியில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரராக இருந்தார். இயற்பியல் பிடிக்கும். குறிப்பாக இயற்பியலுக்கான சமன்பாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர். விளையாட்டு நேரத்திலும் பந்து போடும் கம்பத்தில் சமன்பாடுகளை எழுதிப் பார்ப்பார் நீல்ஸ் போர்.

கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் ஆய்வுக்கூட வசதி போதவில்லை. தந்தையின் ஆய்வுக்கூடத்தைப் பயன்படுத்திப் படித்தார். முனைவர் பட்டம் பெற்ற பிறகு, ராயல் கழகத்தின் உறுப்பினரானார் நீல்ஸ் போர்.

’போர்ஸ் நிறுவனம்’ என்கிற இயற்பியல் நிறுவனத்தைத் தொடங்கினார். இளம் இயற்பியலாளர்கள் தங்கள் இயற்பியல் முயற்சிகளைப் பற்றிப் பேசவும், அவற்றைச் சோதித்துப் பார்க்கவும் கூடிய நிறுவனமாக இது அமைந்தது.

ஜார்ஜ் ஹெவ்சி, டிர்க் கோஸ்டர் ஆகிய இருவரும் சேர்ந்து, போர்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்தனர். அணு எண் 72 கொண்ட ஹாஃப்னியம் (கோபன்கேஹன் என்பதன் லத்தீன் பெயர்) என்கிற தனிமத்தைக் கண்டறிந்தனர். ஹாஃப்னியத்தின் பண்புகளைக் கவனித்து அதன் கட்டமைப்பை உருவாக்கினார் நீல்ஸ் போர். அந்தப் பணிக்காக அவர் பெயரில் அந்தத் தனிமத்திற்கு ’போரியம்’ என்று பெயரிட்டனர்.

அணுவில் அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றுகின்றன. ஒவ்வோர் அணுவும் தனித்துவமான ஆற்றல் நிலைகளைக் கொண்டது. எலக்ட்ரான்கள் குறிப்பிட்ட ஆற்றல் மட்டத்திலிருந்து மற்ற ஆற்றல் மட்டங்களுக்குத் தாவுகின்றன போன்ற கருத்துகளை முன்வைத்தார் நீல்ஸ் போர். 1922ஆம் ஆண்டு இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. நீல்ஸ் போரை இங்கிலாந்து வரும்படி அந்நாடு அழைத்தது. அணுகுண்டு உருவாக்கும் வேலைக்காக அழைக்கிறார்கள் என்பதை அறிந்த நீல்ஸ் போர், அழைப்பை ஏற்கவில்லை.

1943க்குப் பிறகு டென்மார்க்கின் நிலைமை மோசமானது. நீல்ஸ் போர் ஜெர்மனியின் நாஜிகளால் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் ஸ்வீடனுக்குச் சென்றார். அங்கும் இங்கிலாந்தின் அழைப்பு வந்தது. ராணுவ விமானம் மூலம் லண்டன் கொண்டு செல்லப்பட்டார். நேச நாடுகளின் அணுகுண்டு திட்டம் விளக்கப்பட்டது. நீல்ஸ் போர் தன் நான்காவது மகன் ஆகேவுடன் இணைந்தார். அணுக்கருவின் கூட்டு மாதிரிக்காக 1975இல் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்ட மூவரில் நீல்ஸ் போரின் மகன் ஆகே போரும் ஒருவர்.

போருக்குப் பிறகு நீல்ஸ் போர் டென்மார்க் திரும்பியபோது, அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்திரிகைகள் கொண்டாடின. நீல்ஸ் போர் பெரும்பாலான நேரத்தைத் தனது இயற்பியல் கூடத்திலேயே செலவிட்டார். ரிசோவில் அணுசக்தி ஆராய்ச்சி மையம் நிறுவுவதில் பங்கேற்றார். ஜெனீவாவில் CERN (ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம்) அமைப்பை உருவாக்கினார். இது இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ’நோர்டிடா’ (நோர்டிக் இன்ஸ்டிடியூட் ஃபார் தியரிட்டிக்கல் ஃபிசிக்ஸ்) உருவாக்கத்திலும் நீல்ஸ் போர் பணியாற்றினார். உலகின் முன்னணி இயற்பியல் நிறுவனங்களை உலகிற்குக் கொடுத்த நீர்ஸ் போர், 77 வயதில் (நவம்பர் 18, 1962) மறைந்தார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

> முந்தைய அத்தியாயம்: சர் சி.வி.ராமன் | விஞ்ஞானிகள் - 18

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x