Published : 11 Jul 2018 10:35 AM
Last Updated : 11 Jul 2018 10:35 AM

டிங்குவிடம் கேளுங்கள்: விலங்குகளுக்கு வியர்க்குமா?

விலங்குகளுக்கு ஏன் வியர்ப்பதில்லை, டிங்கு?

– எஸ். ஹரிஹரசுதன், 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம், திருச்சி.

விலங்குகளுக்கு வியர்ப்பதில்லை என்று சொல்லிவிட முடியாது, ஹரிஹரசுதன். பாலூட்டிகள் வெப்ப ரத்தப் பிராணிகள். தங்கள் உடல் வெப்பநிலையை ஒரே சீராக வைத்துக்கொள்ளக்கூடிய தகவமைப்பைப் பெற்றுள்ளன. வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்கும்போது வியர்வைச் சுரப்பிகள் வேலை செய்து, வியர்வையை வெளியேற்றி, வெப்பநிலை உயராமல் பார்த்துக்கொள்ளும். பாலூட்டிகளில் நாய், பூனை, யானை, வெளவால், குரங்குகள் போன்றவை எக்கிரின் அல்லது அபோகிரின் அல்லது இரண்டு சுரப்பிகளையும் சேர்த்துப் பெற்றுள்ளன.

எக்கிரின் சுரப்பிகள் (Eccrine glands) உடல் முழுவதும் இருக்கக்கூடியவை. மனிதர், வால் இல்லாக் குரங்குகள் போன்றவை எக்கிரின் சுரப்பிகளைப் பெற்றுள்ளன. வால் இல்லாக் குரங்குகளில் முடிகளால் மூடப்பட்ட கொரில்லாக்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் அக்குள், உள்ளங்கைகள், கால் பாதங்கள் போன்றவற்றில் வியர்வைச் சுரப்பிகள் இருக்கின்றன. நாய்களும் பூனைகளும் அபோகிரின் சுரப்பிகளைப் (Apocrine Glands) பெற்றுள்ளன. இவை பாதங்களில் இருக்கும். நாய்களுக்கு இந்தச் சுரப்பிகள் மிகக் குறைவாக இருப்பதால், கோடைக் காலத்தில் நாக்கின் மூலம் நீரை வெளியேற்றி, சுவாசப் பாதையை ஈரமாக வைத்துக்கொண்டு, உடலின் வெப்பத்தைச் சீராக வைத்துக்கொள்கின்றன.

பன்றி, காண்டாமிருகம், நீர்யானை போன்றவை வெப்ப ரத்தப் பிராணிகளாக இருந்தாலும் அவற்றுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லை. அதனால்தான் பெரும்பாலான நேரம் தண்ணீரிலும் சகதியிலும் உடலை அமிழ்த்தி, உடலின் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கின்றன.

dingu_13-09.jpgமாணவர்களாகிய நாங்கள் காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன, டிங்கு?

- ஆர். அம்ருதாஸ்ரீ, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.

உங்களைப் போன்று மாணவர் பருவத்தில் மிகவும் பயந்தவராகவும் கூச்ச சுபாவம் கொண்டவராகவும் அவர் இருந்தார். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் திரும்பிய பிறகுகூட, நீதிமன்றத்தில் அவரால் வாதிட இயலவில்லை. இதே காந்தி தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பிய பிறகு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தனித்தனியாகப் போராடிக் கொண்டிருந்த மக்களை ஒருங்கிணைத்தார். அந்த ஒற்றுமையின் பலம் ஆங்கிலேயர்களை அஞ்ச வைத்து, நாட்டை விட்டு வெளியேறச் செய்தது. அச்சம், கூச்சம் போன்றவற்றை நாம் கைவிட்டு, நம்மாலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட முடியும் என்று காந்தியிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

எந்தச் சூழ்நிலையிலும் பொய் சொல்லக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளலாம். உடை, உணவு என்று எல்லாவற்றிலும் எளிமையாக வாழ்ந்தவரிடமிருந்து அந்த எளிமையைக் கற்றுக்கொள்ளலாம். வன்முறைகள் இல்லாத அறவழிப் போராட்டங்கள் மூலம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியதற்காக அகிம்சையைக் கற்றுக்கொள்ளலாம், அம்ருதா.
 

Tinku -1crightநான் முதல் குழந்தை என்பதால் இடி இடிக்கும்போது ‘அர்ஜூனன் பேர் பத்து’ என்று பாட்டி சொல்லச் சொல்கிறார். அப்படிச் சொன்னால் என் மீது இடி விழாது என்கிறார். இது உண்மையா, டிங்கு?

–டி. கல்யாண் குமார், முதுகுளத்தூர்.

இடி இடிக்கும்போது வெட்ட வெளியில் நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று நின்றுகொள்ள வேண்டும். முக்கியமாக மரத்தடியில் நிற்கக் கூடாது. இடி மரத்தில் இறங்கினால் தீப்பற்றிக்கொள்ளும். இடி தாக்கினால் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடலாம். அதனால் ‘அர்ஜூனன் பேர் பத்து’ இல்லை, ’அர்ஜூனன் பேர் நூறு’ என்று சொன்னால்கூட இடியிடம் இருந்து தப்பிக்க முடியாது. அந்தக் காலத்தில் இடியைக் கண்டு பயந்திருப்பார்கள். அந்தப் பயத்தைக் குறைத்து, கவனத்தைத் திசை திருப்புவதற்காக இப்படிச் சொல்லச் சொல்லியிருக்கலாம், கல்யாண் குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x