Published : 22 Jan 2025 06:20 AM
Last Updated : 22 Jan 2025 06:20 AM

ஆராய்ச்சியாளர் சுந்தரி! | கதை

சுந்தரிக்குப் பூச்சிகளைப் பிடித்து, அவற்றைப் பக்கத்தில் பார்ப்பதில் ஆர்வம் அதிகம். அதற்கு அவள் பக்கத்து வீட்டு மஞ்சு அக்காதான் காரணம். மஞ்சு படிக்கும் கல்லூரியில் பட்டுப்பூச்சி வளர்க்கும் இடம் உண்டு. போன வாரம் அந்தப் பூச்சிகளை வீடியோ எடுத்திருந்தார். அதைச் சுந்தரியிடம் காட்டினார். அதில் ஏராளமான பட்டுப்புழுக்கள் இருந்தன. ஒவ்வொன்றும் மல்பெரி இலைகளை வேக வேகமாகச் சாப்பிட்டன.

"எவ்வளவு வேகமா சாப்பிடுது!" என்று ஆச்சரியப்பட்டாள் சுந்தரி. இப்படித்தான் புழு, பூச்சிகளைப் பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் அவளுக்கு வந்தது. பூச்சிகளைப் பிடித்து, பாட்டிலுக்குள் சிறிது நேரம் வைத்திருந்து, ஆராய்ச்சி செய்துவிட்டு வெளியே விட்டுவிடுவாள் சுந்தரி. முதலில் பூச்சிகளைப் பிடிக்க அவளுக்குப் பயமாக இருந்தது. முதல் நாள் அம்மாவைத்தான் உதவிக்குக் கூப்பிட்டாள். அவள் கேட்டது ஒரு தும்பியை.

"இது என்ன புதுப் பழக்கம்? அதெல்லாம் பிடிக்க வேண்டாம்" என்று அம்மா சொன்னவுடன், அழுதுவிட்டாள். ”பூச்சிகளுக்கும் வலிக்குமே, அதான் வேண்டாம்னு சொல்றேன்...” “நான் அதைத் துன்புறுத்த மாட்டேன். கொஞ்ச நேரம் வச்சிருந்து, அதைக் கவனிச்சிட்டு விட்டுடுவேன்” என்றாள் சுந்தரி. “நான் பிடிக்க மாட்டேன்” என்று அம்மா சொல்லிவிட்டார். சுந்தரி தானே முயன்று ஒரு தும்பியைப் பிடித்துவிட்டாள்.

அது அவளிடமிருந்து பறப்பதற்கு முயற்சி செய்தது. சிறிது நேரம் கையில் வைத்திருந்துவிட்டு, பறக்கவிட்டாள் சுந்தரி. அன்றிலிருந்து பூச்சிகளின் பின்னால் சுற்ற ஆரம்பித்தாள். அன்று சூரியன் மறைந்து இருட்ட ஆரம்பித்தது. தோட்டத்துக்குச் சென்ற சுந்தரி, கண்ணாடி பாட்டிலோடு அங்கும் இங்கும் பார்த்தாள். ‘மினுக் மினுக்' என்று ஒரு மின்மினிப் பூச்சி அவள் கண்ணில் பட்டது.

மெதுவாகச் சென்று மின்மினிப் பூச்சியைப் பிடித்து, பாட்டிலுக்குள் போட்டாள். தன் அறையில் இருந்த விளக்கை அணைத்தாள். மினுக்... மினுக்... என்று மின்மினிப் பூச்சி அழகாக மின்னியது. அம்மாவிடம் காட்டினாள் சுந்தரி. “போதும் சுந்தரி, பூச்சியை வெளியே விடு. காலையில் ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடிச்சே, இப்போ மின்மினியா?” என்று கேட்டார் அம்மா.

“அதை எவ்வளவு கஷ்டப்பட்டுப் பிடிச்சேன் தெரியுமா?” “பிடிச்சு என்ன சாதிச்சே? அதை மறுபடியும் பறக்க விடும்போது இறக்கை பிய்ந்து, எவ்வளவு கஷ்டப்பட்டுச்சு, பாவம்.” “நான் ஒரு பூச்சியியல் நிபுணரா வருவேன். அதுக்காகத்தான் இந்த ஆராய்ச்சி” என்றாள் சுந்தரி. அம்மா கோபத்துடன் வீட்டுக்குள் சென்றுவிட்டார். மறுநாள் காலை தோட்டத்தில் மீண்டும் பூச்சியைத் தேடிச் சென்றாள் சுந்தரி. ஒரு பூச்சியைப் பிடிக்கப் போகும்போது கல் தடுக்கி விழுந்தாள். விரலில் லேசாக ரத்தம் வந்தது. காயத்துக்கு மருந்து போட்டார் அம்மா.

அந்த நிமிடத்திலிருந்து சுந்தரி கட்டிலை விட்டுக் கீழே இறங்கவில்லை. கட்டிலில் அமர்ந்து சாப்பிட்டாள், படித்தாள், டிவி பார்த்தாள். ”லேசான காயம்தானே சுந்தரி, எழுந்து வா. ஒண்ணும் ஆகாது” என்றார் அம்மா. "எனக்கு வலிக்கறது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டவள், அடுத்த இரண்டு நாள்களுக்குக் கட்டிலைவிட்டு இறங்கவே இல்லை.

மூன்றாம் நாள் பாட்டிலுடன் அம்மாவிடம் வந்தாள் சுந்தரி. "கால் சரியானதும் பூச்சிப் பிடிக்கக் கிளம்பிட்டீயா?" என்று கேட்டார் அம்மா. "பாட்டில் எனக்கு வேண்டாம்மா." "ஏன், என்னாச்சு?" "சின்ன காயமா இருந்தாலும் எனக்கு ரொம்ப வலிச்சிருச்சு. அதே மாதிரிதானே பூச்சிகளுக்கும் வலிக்கும். இனிமே பூச்சிகளைப் பிடிக்காமல் என் ஆராய்ச்சியைத் தொடர்வேன்" என்ற சுந்தரியைக் கட்டிக்கொண்டார் அவள் அம்மா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x