Published : 17 Jan 2025 12:34 PM
Last Updated : 17 Jan 2025 12:34 PM
உயிரினங்களின் மொழி - 2
மனிதர்களிடம் நெருங்கிப் பழகக்கூடிய உயிரினங்களில் ஒன்று ஓங்கில் (டால்பின்). இது கடல்வாழ் பாலூட்டி. திமிங்கிலத்தின் உறவு.
ஒரு வயது நிரம்பிய ஓங்கில்கள் தங்களுக்கெனத் தனித்துவமான ஒலியை உருவாக்கிக் கொள்கின்றன. ஓர் ஓங்கிலின் ஒலி ’வீ-ஊ’ என்று இருந்தால், மற்றொன்றின் ஒலி ’ஊ-வீ’ என்று இருக்கும். ஒருபோதும் இரண்டு ஒலிகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஓங்கில்களின் இந்தத் தனித்துவமான ஒலிகளைக் கொண்டுதான் ஒன்றை மற்றொன்று புரிந்துகொள்கின்றன. இந்த ஒலிகள் கடலில் பல கி.மீ. தொலைவு வரை பயணிக்கும் திறன் கொண்டவை.
தாய் ஓங்கில்கள் குட்டி ஓங்கில்களுக்குத் தகவல் தொடர்பு முறைகளைக் கற்பிக்கும் விதம் சுவாரசியமானது. அவை குட்டிகளுடன் உரையாடும்போது தமது ஒலிகளின் வேகத்தைக் குறைத்து, எளிமையாக உரையாடுகின்றன. குட்டிகள் வளர வளர படிப்படியாகச் சிக்கலான ஒலிகளைக் கற்றுக் கொள்கின்றன.
ஓங்கில்களின் பார்வை தண்ணீருக்குக் கீழும் மேலும் நன்றாகவே இருக்கும். ஆனால் தொலைவில் இருக்கும் பொருள்களைப் பார்க்க அவற்றிற்கு இந்தப் பார்வைத் திறன் போதாது. ஆகையால், ஒளியை நம்பாமல் ஒலி அலைகளைப் பயன்படுத்தி ஓங்கில்கள் தகவல்களை அறிந்துகொள்கின்றன. இதற்குப் பெயர், ‘எக்கோலொகேஷன்.’
ஓங்கிலின் நெற்றிப் பகுதியில் உள்ள ‘மெலன்’ என்கிற பகுதியிலிருந்து சொடக்கு ஒலிகள் வெளிப்படுகின்றன. இந்த ஒலிகள் நீரில் பயணித்து, பொருள்களில் மோதி, மீண்டும் டால்பினை வந்தடைகின்றன. திரும்பிவரும் ஒலி அலைகள், ஓங்கிலின் கீழ்த்தாடையில் பட்டு, அதன் உள் காதுகளுக்குச் செல்கின்றன. ஓங்கிலின் மூளை இந்த ஒலி தகவல்களை ஒரு காட்சியாக மாற்றுகிறது.
இந்த அற்புதமான திறன் மூலம் ஓங்கில்களால் 100 மீட்டர் தொலைவில் உள்ள சிறிய பொருள்களையும் கண்டறிய முடிகிறது. இதன் மூலம் மணலில் புதைந்திருக்கும் மீன்களையும், நீரில் மறைந்திருக்கும் இரைகளையும் எளிதாகக் கண்டறிந்துவிடுகின்றன. மேலும் உலோகம், பிளாஸ்டிக் பொருள்களை வேறுபடுத்தி அறியும் திறனும் ஓங்கில்களுக்கு உண்டு. சில நேரம் மற்ற ஓங்கில்களின் உடல் நிலையையும்கூடத் தெரிந்துகொள்கின்றன.
ஒங்கில்களின் மற்றொரு வியக்கத்தக்க திறன், அவை தங்கள் ‘எக்கோலொகேஷன்’ மூலம் பெறும் ’ஒலிப் படங்களை’ மற்ற ஓங்கில்களுடன் பகிர்ந்துகொள்வது.
ஓர் ஓங்கில் எக்கோலொகேஷன் மூலம் ஒரு பொருளைப் பார்க்கும்போது, அதே ஒலி அலைகள் அருகிலுள்ள மற்ற ஓங்கில்களையும் சென்றடைகின்றன. இதனால் அந்த ஓங்கில்களும் அதே காட்சியைப் பெறுகின்றன. இது நாம் ஒளிப்படங்களை நண்பர்களுடன் பகிர்வதைப் போன்றது.
ஓங்கில்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தவும் பல்வேறு வகையான ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. மகிழ்ச்சியான நேரத்தில் உற்சாகமான ஒலிகளை எழுப்புகின்றன. ஆபத்து நெருங்கும்போது எச்சரிக்கை ஒலிகளை வெளியிடுகின்றன. உணவைக் கண்டறியும்போது ஆர்வமான ஒலிகளையும், நட்பு பாராட்டும்போது மென்மையான ஒலிகளையும் வெளிப்படுத்துகின்றன.
ஆனால் இந்த ஒலிக்கு இந்த அர்த்தம் மட்டும்தான் என்கிற முடிவுக்கு நாம் வர முடியாது. உதாரணத்துக்கு நாம் கை அசைக்கிறோம், எந்தச் சூழலில் அதைச் செய்கிறோம் என்பது முக்கியமல்லவா? ‘ஹாய்’ ஆக இருக்கலாம், ‘வேண்டாம்’ என்று சொல்வதாக இருக்கலாம். ஓங்கில்களின் உடல் அசைவுகளையும், ஒலிகளையும் அவற்றின் சூழல்களை வைத்து மட்டுமே புரிந்துகொள்ள முடியும்..
நாய்க்கு இருக்கும் கற்றல் அறிவு ஓங்கில்களுக்கும் உண்டு. மனிதர்கள் கொடுக்கும் பயிற்சியை உள்வாங்கிக் கொண்டு, அதற்கு ஏற்ற மாதிரி செயலாற்றும். பந்து விளையாடுவது, வளையங்களுக்குள் பாய்ந்து சென்று நீந்துவது போன்ற பல செயல்களைப் பயிற்சியின் மூலம் கற்றுக் கொள்கின்றன.
தங்களுடைய உணர்ச்சிகளை மட்டுமன்றி மனிதர்களின் உணர்ச்சிகளையும் உள்வாங்கிக் கொள்ளும் திறன் ஓங்கில்களுக்கு உண்டு. தனக்கு அருகில் ஓங்கில்களோ மனிதர்களோ துன்பத்தில் இருந்தால், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சுற்றிச் சுற்றி வரும்.
ஒலிகள் மூலம் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் ஓங்கில்களின் மொழியை இன்னமும் நம்மால் முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் மூலம் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். எதிர்காலத்தில் கடலைப் பாதுகாக்கவும் இது உதவும்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: writernaseema@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT