Published : 11 Dec 2024 06:29 AM
Last Updated : 11 Dec 2024 06:29 AM

பூக்களின் வேலைநிறுத்தம்... | கதை

அழகான காடு. அந்தக் காட்டின் நடுவே ஒரு பூந்தோட்டம் இருந்தது. செடிகளிலும் கொடிகளிலும் ஏராளமான பெரிய மலர்கள் பூத்துக் குலுங்கின. அந்த நறுமணம் காடு முழுவதும் வீசியது. காட்டில் உள்ள தேனீக்கள், வண்டுகள், சிறு பறவைகள்,வண்ணத்துப்பூச்சிகள் எல்லாம் பூந்தோட்டத்தை நோக்கி வர ஆரம்பித்தன. ஒரே இடத்தில் ஏராளமான பூக்கள். அத்தனை பூக்களிலும் தேன்.

காட்டின் நடுவே பூந்தோட்டம் இருந்ததால் எந்த ஆபத்தும் நிகழ வாய்ப்பில்லை என்பதால் அச்சமின்றி பூந்தேனைக் குடிக்கலாம். எனவே நாளுக்கு நாள் பூந்தோட்டத்துக்குள் நுழையும் உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒருகட்டத்தில் வந்த உயிரினங்கள் எல்லாம் பூந்தோட்டத்திலேயே நிரந்தரமாகத் தங்க ஆரம்பித்துவிட்டன.

இதனால் முதலில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் நாள்கள் செல்லச்செல்ல அந்தக் காட்டில் இருந்த மரங்களும் செடிகளும் சிரமப்பட்டன. பூச்சிகள், வண்டுகள், பறவைகள் மூலம் நடைபெறும் மகரந்தச் சேர்க்கை நடைபெறவில்லை. காற்றின் மூலம் மிகக் குறைவான அளவிலேயே மகரந்தச் சேர்க்கை நடைபெற்றது. இரண்டு மலர்களின் மகரந்தங்கள் கலப்பதால்தான் பூக்களில் இருந்து காய்கள் உருவாகின்றன. பின்னர் பழமாகின்றன. அதனால் மரங்களும் கொடிகளும் காய்க்கவே இல்லை.

காட்டிலிருந்த மரங்களும் செடிகளும் கொடிகளும் வருந்தின. காய்களும் பழங்களும் விளையாவிட்டால், இவற்றை நம்பி வாழும் உயிரினங்கள் பசியால் தவிக்க நேரிடும். காட்டின் வருத்தத்தைக் கண்ட யானை, காரணத்தைக் கேட்டு அறிந்துகொண்டது. இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக, பூந்தோட்டத்துக்குச் சென்றது. யானையுடன் குரங்கும் மானும் சேர்ந்து கொண்டன. பூந்தோட்டத்தில் பெருகிக் கிடந்த உயிரினங்களைக் கண்டு யானையும் குரங்கும் மானும் திகைத்து நின்றன. வண்டுகளின் ரீங்காரமும் பறவைகளின் கூச்சலும் காதுகளை அடைத்தன.

பூந்தோட்டமும் வருத்தமாகத்தான் இருந்தது. யானையிடம் எப்படியாவது உயிரினங்களின் எண்ணிக் கையைக் குறைக்கும்படிச் சொன்னது. “எதுக்கு இப்படிக் கத்துகிறார்கள்?” என்று கேட்டது யானை. “ஒரு பூவில் நான்கைந்து பேர் தேன் குடிக்க முயன்றால் என்ன ஆகும்? போட்டி அதிகமாகும்போது சண்டை வருகிறது. சண்டையில் கூச்சல் வருகிறது” என்றது பூந்தோட்டம். “இவர்களிடம் காட்டின் மற்ற பகுதிகளுக்குச் சென்று உணவருந்தச் சொல்லலாமே?” “யாரும் நான் சொல்வதைக் கேட்பதே இல்லை. அதனால் இவர்களிடம் பேசிப் பயன் இல்லை” என்றது பூந்தோட்டம்.

“அப்படி என்றால், நான் சொல்வது போல் செய்யும்படி பூந்தோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு செடி, கொடியிடமும் சொல்லிவிடுங்கள்.” “என்ன சொல்லணும்?” “வேலைநிறுத்தம். பூக்கள் மலந்தால்தானே தேன் குடிக்க முடியும்? மலராமல் வேலைநிறுத்தம் செய்யச் சொல்லணும்.” “அடடா! நல்ல யோசனை” என்றது பூந்தோட்டம். “பூக்கள் மலரவில்லை என்றால் இரண்டே நாளில் எல்லாம் உணவு தேடி வேறு இடங்களை நோக்கிக் கிளம்பிவிடும்.”

பூந்தோட்டம் தகவலைச் செடி, கொடிகளிடம் சொல்லி விடுவதாக யானையிடம் சொன்னது. “அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன். நிலைமை சரியாகவில்லை என்றால், வேறு திட்டத்தை யோசிப்போம்” என்ற யானை, குரங்கையும் மானையும் அழைத்துக்கொண்டு சென்றது. மறுநாள் காலை சூரியன் உதித்த பிறகும் பூக்கள் மலரவில்லை. பசியோடு வந்த வண்டுகளும் பூச்சிகளும் பறவைகளும் காரணம் புரியாமல் விழித்தன.

“பூந்தோட்டமே, ஏன் இன்னும் மலர்கள் மலரவில்லை?” என்று கேட்டன. “இன்று அவை வேலைநிறுத்தம் செய்கின்றன” என்றது பூந்தோட்டம். “என்னது, வேலைநிறுத்தமா?” “ஆமாம், நீங்கள் எல்லாம் ஒரு பூவுக்கு ஐந்து பேர் சண்டை போட்டால், என்ன ஆகும்? அதான் இந்த வேலைநிறுத்தம்.

“இது அநியாயம்.” “நீங்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்துகொண்டு உணவுக்குச் சண்டை போடுவது மட்டும் நியாயமா? இனிமேலும் பொறுக்க முடியாது என்பதால்தான் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருக்கின்றன.”“எவ்வளவு நாள் இப்படி இருக்க முடியும்?” “நீங்கள் எல்லாம் காட்டின் மற்ற பகுதிகளுக்கும் சென்று உணவு தேடும் வரை வேலைநிறுத்தம் தொடரும்.”

உயிரினங்கள் உணவு தேடி அக்கம் பக்கம் சென்றன. ஆனாலும் சாப்பிட்டதும் பூந்தோட்டத்துக்கு வந்து, மலர்கள் மலர்கின்றனவா என்று பார்த்தன. ஆனால் பூக்கள் மலருவது போலத் தெரியவில்லை. நாள்கள் சென்றன. பூக்கள் மலரவே இல்லை. வண்டுகளும் பூச்சிகளும் பறவைகளும் வேறு வேறு இடங்களுக்குச் சென்று உணவு தேட ஆரம்பித்தன. “இந்தத் தென்னம்பூவில் உள்ள தேன் எவ்வளவு ருசி” என்றது ஒரு தேனீ. “மாம்பூவில் உள்ள தேன் பிரமாதம்” என்றது ஒரு பறவை.

“நாம் பூந்தோட்டத்திலிருந்து ஒரே விதமான உணவைச் சாப்பிட்டு, சாப்பிட்டு சலித்துவிட்டது. இப்பதான் சுவையாவும் சுவாரசியமாவும் இருக்கு வாழ்க்கை” என்றது ஒரு வண்ணத்துப்பூச்சி. மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற்றதால் காடுகளில் உள்ள மரங்களும் கொடிகளும் செடிகளும் மகிழ்ச்சி யடைந்தன.

பூந்தோட்டத்தைக் காண வந்த யானை, “என்ன, வேலை நிறுத்தம் கைகொடுத்ததா?” என்று கேட்டது. “ஓ, எல்லாருக்கும் மகிழ்ச்சி. நெரிசல் குறைந்துவிட்டது. முன்புபோல் ஆரோக்கிய மாகவும் அமைதியாகவும் இருக்கு. உனக்குதான் நன்றி சொல்லணும்” என்றது பூந்தோட்டம். ஒரு பிரச்சினையைச் சரிசெய்த மகிழ்ச்சியில் யானையும் சென்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x