Published : 09 Dec 2024 02:08 PM
Last Updated : 09 Dec 2024 02:08 PM

மகத்தான விஞ்ஞானி லூயி பாஸ்டர் | விஞ்ஞானிகள் - 12

போரில் மடிந்தவர்களைவிட நோயால் இறந்தவர்கள் அதிகம் என்கிறது வரலாறு. மருத்துவர்களும் மருந்து கண்டறிந்தவர்களும் கடவுளுக்கு இணையாக மதிக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் லூயி பாஸ்டர். 1822 டிசம்பர் 27இல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். மருத்துவர் அல்ல, ஆனால் வேதியியலாளராகவும் நுண்ணுயிரியலாளராகவும் மருத்துவத் துறைக்கு அவர் செய்த பங்களிப்பு ஏராளம்!

லூயி பாஸ்டருக்குச் சிறு வயதிலிருந்தே இயற்கை மீதும் ஓவியம் மீதும் ஆர்வம் வந்துவிட்டது. பின்னர் அறிவியல் அவருக்கு மிகவும் பிடித்த துறையாக மாறியது. 1842இல் ராயல் கல்லூரியில் இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்றார். 1845இல் முதுகலைப் பட்டமும் 1847இல் முனைவர் பட்டமும் பெற்றார். ஸ்ட்ராஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியரானார்.

ஒயின் தயாரிப்பாளரான தன் நண்பருக்கு உதவுவதற்காக ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டார். அப்போதுதான் ஒயினைப் புளிக்கச் செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார். தொடர்ந்து செய்த ஆராய்ச்சியில் பாலைப் புளிக்க வைப்பதும் பாக்டீரியாதான் என்பதையும் குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலைக் கொதிக்க வைத்து, பின்னர் குளிர வைத்தால் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் என்பதையும் கண்டறிந்தார். இதுதான் ‘பாஸ்ச்சரைசேஷன்’ (பாக்டீரியா நீக்கம்) என்று அழைக்கப்படுகிறது. இன்றுவரை இந்த முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக மனித உடலில் நுண்ணுயிர்கள் நுழைவதைத் தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீரா நோய் எனக் கருதப்பட்ட சின்னம்மை நோய் வருவதைத் தடுக்கவும் வந்த பிறகு குணப்படுத்தவும் மருந்துகள் கண்டறியப்பட்டன.

வெப்பத்தால் காசநோய்க் கிருமிகளையும் அழிக்க முடியும் என்பதை ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்தனர். அதன் விளைவாகக் காசநோய்க்கு மருந்து கண்டறியப்பட்டது.

பிரான்சில் பட்டுப்புழுவை மர்ம நோய் தாக்கியது. ஐரோப்பா முழுவதும் அந்நோய் பரவியது. அதில் நோயை ஏற்படுத்தும் கிருமிகளை முதலில் அடையாளம் கண்டார். அவற்றின் தாக்கத்தைத் தடுக்கும் முறையை உருவாக்கினார். இதைத் தொடர்ந்து விலங்குகளின் நோய்கள் பக்கம் திரும்பினார். கோழிகளைத் தாக்கும் காலரா, கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்கள் மீது கவனம் செலுத்தினார். தடுப்பூசி கண்டறிந்தார். 70 பண்ணை விலங்குகளிடம் சோதனை செய்தார். 12 நாள்கள் இடைவெளியில் இரண்டு தடுப்பூசிகளைப் போட்டார். தடுப்பூசி போடப்பட்ட விலங்குகள் உயிர் பிழைத்தன.

வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டறியும் முயற்சியில் இறங்கினார். அதுக்குக் காரணமான கிருமி நாயின் எச்சிலில் இருந்தது. ஆனால் அதிலிருந்துதான் மருந்து எடுக்க முடியும் என நினைத்தார். அதற்காகத் தன் உயிரைப் பொருள்படுத்தாமல் அதன் வாயில் குழாயைச் செருகி எச்சிலை எடுத்தார். மருந்தைக் கண்டறிந்தார். ’ஜோசப் மெய்ஸ்டர்’ என்கிற சிறுவனுக்கு முதலில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. மிகப் பெரிய பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

1888இல் ’பாஸ்டர் இன்ஸ்டிடியூட்’ என்கிற அமைப்பை பாரிஸில் தோற்றுவித்தார். லூயி பாஸ்டரின் அடிப்படைக் கொள்கைகளைப் பயன்படுத்தி பிற விஞ்ஞானிகள் ஜன்னி, இளம்பிள்ளைவாதம் போன்ற நோய்களுக்குத் தடுப்பூசிகளைக் கண்டறிந்தனர்.

லூயி பாஸ்டர் பிரான்ஸின் மிகச் சிறந்த குடிமகனாகக் கெளரவிக்கப்பட்டார். பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மையங்கள், கோள், நிலவின் பள்ளங்கள் போன்றவற்றுக்கு லூயி பாஸ்ட்ரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இன்றைய மக்களின் ஆயுள்காலம் அதிகரித்திருப்பதில் லூயி பாஸ்டரின் பங்கு முக்கியமானது. தன் வாழ்நாள் முழுக்க மக்களின் நலனுக்காகவே உழைத்த லூயி பாஸ்டர், 1896, செப்டம்பர் 28 அன்று 73வது வயதில் மறைந்தார்.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

> முந்தைய அத்தியாயம்: அலெக்சாண்டர் கிரகாம் பெல் | விஞ்ஞானிகள் - 11

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x