Published : 27 Jun 2018 09:47 AM
Last Updated : 27 Jun 2018 09:47 AM

டிங்குவிடம் கேளுங்கள்: பேய் உண்டா?

பேய், பிசாசு இருப்பது உண்மையா? உனக்குப் பேய் என்றால் பயம் உண்டா, டிங்கு?

-உ. ஷைனி, 8- ம் வகுப்பு வேலம்மாள் வித்யாஷ்ரம், படப்பை.

பேய் இருப்பது உண்மையா என்ற உங்கள் கேள்வியில் இருந்தே தெரிகிறது, அதில் உங்களுக்கு முழு நம்பிக்கை இல்லை என்று. பேய் என்ற ஒன்று இல்லவே இல்லை, ஷைனி. இதுவரை ஒருவரும் அதைப் பார்த்ததில்லை. அது எப்படி இருக்கும் என்று அறிந்ததில்லை. அதனால்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அப்படி, இப்படி என்று கதை விடுகிறார்கள். நேரில் பார்க்காமல், நிரூபிக்கப்படாத எதையும் நம்ப வேண்டிய அவசியமில்லை. இல்லாததை நினைத்துப் பயப்படுவதில் ஒரு பலனும் இல்லை. திகிலுக்காகவும் சுவாரசியத்துக்காகவும் திரைப்படங்களிலும் கதைகளிலும் பேய்கள் வரலாமே அன்றி, நிஜத்தில் வர முடியாது. இதற்கு மேலும் எனக்குப் பேய் பயம் இல்லை என்று தனியாய்சொல்ல வேண்டுமா, என்ன!

அரிசி வேகும்போது கல் ஏன் வேக மாட்டேங்கிறது, டிங்கு?

– ம. அஜய் குமார்,காவல் கிணறு, திருநெல்வேலி.

அரிசி, பருப்பு, தானியங்கள் போன்றவை பார்ப்பதற்கு உலர்ந்ததுபோல் இருந்தாலும் அவற்றுக்குள் நீர்ச் சத்து சிறிதாவது இருக்கும். அதனால்தான் கொதிக்கும் நீரில் போட்டவுடன், அவற்றுக்குள் உள்ளே இருக்கும் நீர்ச்சத்து வெப்பமடைந்து, விரிவடைந்து வெளியே வருகிறது. இதனால் அவை வெந்துவிடுகின்றன. கற்களில் நீர்ச் சத்து இல்லை என்பதால் அவை வேக முடிவிடுவதில்லை, அஜய் குமார்.

மடிக்கணினியைக் கண்டுபிடித்தவர் யார், டிங்கு?

ந. சீனிவாசன், 10-ம் வகுப்பு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பில் மாக்ரிட்ஜ், 1979-ம் ஆண்டு முதல் மடிக்கணினியை உருவாக்கினார். ஆனால் அது 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1982-ம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது. அதற்குள் வணிக நோக்கத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் 1981-ம் ஆண்டே ஆடம் ஓஸ்போர்ன் என்ற அமெரிக்க வாழ் தாய்லாந்துக்காரர் மடிக்கணினியை அறிமுகம் செய்துவிட்டார். ஆரம்பத்தில் பெரிதாகவும் எடை அதிகமாகவும் இருந்த மடிக்கணினி இன்று எடை குறைந்து, கைக்கு அடக்கமான அளவிலும் கிடைக்கிறது, சீனிவாசன்.

என் நண்பர்கள் புது வகுப்புக்குச் சென்றதால் பை, தண்ணீர் பாட்டில், பேனா எல்லாம் புதிதாக வாங்கியிருக்கிறார்கள். எங்கள் வீட்டில் புத்தகம், நோட்டுகளைத் தவிர மற்றவற்றைப் புதிதாக வாங்கித் தரவில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது. பெற்றோர் செய்தது நியாயம் இல்லைதானே, டிங்கு?

–ஆர். உதய கீதா, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

புதிய வகுப்பு, புதிய பொருட்கள் எல்லாம் சுவாரசியம் தரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் புத்தகம், நோட்டுகளைப் புதிதாக வாங்கிக் கொடுத்தவர்கள் ஏன் மற்றப் பொருட்களை வாங்கிக் கொடுக்கவில்லை என்று யோசித்துப் பாருங்கள். மற்ற பொருட்கள் எல்லாம் நன்றாக இருக்கலாம், இன்னும் சிறிது காலம் பயன்படுத்தும் நிலையில் இருக்கலாம். அதனால் வீணான பிறகு வாங்கிக் கொடுக்கலாம் என்று உங்கள் பெற்றோர் நினைத்திருக்கலாம்.

இதில் தவறு என்ன இருக்கிறது, உதய கீதா? எந்தப் பொருளும் நமக்கு இலவசமாகக் கிடைப்பதில்லை. பணம் கொடுத்து வாங்கும் பொருட்களை, அவை பயன்படும் வரை பயன்படுத்த வேண்டும். ஒரு பொருள் இருக்கும்போதே இன்னொன்று வாங்குவதில் எந்த நியாயமும் இல்லை. உங்கள் பை வீணான பிறகு நீங்கள் புதிதாகப் பை வாங்கும்போது, மற்றவர்களின் பைகள் பழையதாகியிருக்கும். அதனால் இதற்கெல்லாம் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x