Published : 16 Oct 2024 06:06 AM
Last Updated : 16 Oct 2024 06:06 AM
பறவைகள் பறக்கின்றன. அடர்த்தி குறைவான ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்ட பலூன்கள் பறக்கின்றன. சூடான காற்றின் அடர்த்தி குறைவு என்பதால் வெப்பக் காற்றுப் பலூன்களில் வெப்பத்தைச் செலுத்தி, காற்றின் அடர்த்தி குறைக்கப்பட்டுப் பறக்க வைக்கப்படுகின்றன.
அடர்த்தி குறைவான வாயுவால் நிரப்பப்பட்ட பலூன் மேல்நோக்கிச் செல்வதுபோல் அழுத்த வேறுபாடும் பறக்க உதவுகிறது. வேகமாகக் காற்று அடித்தவுடன் வீட்டின் மேல் கூரை பறந்து செல்கிறது. கூரையின் மீது காற்று அதிக வேகத்தில் மோதுவதால் அங்கே அழுத்தம் குறையத் தொடங்குகிறது. அதே நேரத்தில் வீட்டின் உள்ளே அழுத்தம் அதிகமாக இருக்கிறது. இந்த அழுத்த வேறுபாடு கூரையைப் பறக்க வைக்கிறது.
ஒருவர் பாராசூட்டை மாட்டிக்கொண்டு உயரத்தில் இருந்து குதித்ததும் அதன் மேல்பகுதியில் இருக்கும் அழுத்தத்தைவிடக் கீழ்ப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த அழுத்த வேறுபாடு மேல் நோக்கி ஓர் உந்துவிசையை உருவாக்கும். இந்த உந்துவிசை புவியின் ஈர்ப்பு விசைக்கு எதிர்த் திசையில் செயல்படுவதால் குதிக்கும் நபர் பூமியை நோக்கி இறங்கும் வேகம் கணிசமாகக் குறைக்கப் படுகிறது. அதனால், பத்திரமாகத் தரையிறங்க முடிகிறது.
பறவைகளும் அழுத்த வேறுபாட்டை உருவாக்குவதன் மூலம் பறக்கின்றன. இறக்கையை நன்றாக விரித்துக் காற்றை அழுத்துவதன் மூலம், இறக்கைக்குக் கீழே அதிக அழுத்தத்தை உருவாக்குகிறது. இந்த அழுத்த வேறுபாடு பறவை மேல் நோக்கி எழும்ப உதவுகிறது. பறவை காற்றை மேலிருந்து கீழே அழுத்தும்போது இறக்கையை விரித்து வைத்துக்கொண்டு அழுத்தும்;கீழிருந்து இறக்கையை மேலே கொண்டு போகும்போது இறக்கையைச் சுருக்கி வைத்துக்கொண்டு மேலே செல்லும்.
புறா, காகம் போன்றவை இருக்கும் இடத்திலிருந்து எழும்பிப் பறப்பதற்கு இறக்கையைக் கீழே நகர்த்தி, அழுத்தத்தை உருவாக்கி, பறக்க ஆரம்பிக்கின்றன. பறந்து கொண்டிருக்கும்போது இறக்கை அடிப்பதை நிறுத்தினால் கீழே விழ ஆரம்பித்துவிடும். அதனால் தொடர்ந்து இறக்கையை அடித்துக்கொண்டே செல்கின்றன. இவற்றைச் ’சிறகடித்துப் பறக்கும் பறவைகள்’ என வகைப்படுத்தலாம்.
அடுத்த வகை ’மிதக்கும் பறவைகள்’. இவை குறைவான நேரம் மட்டுமே சிறகடிக்கும். கடற்பறவை அல்பட்ராஸ், கழுகு ஆகியவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவை எப்படி அழுத்த வேறுபாட்டை ஏற்படுத்துகின்றன என்பதை அறிந்துகொள்வதற்கு முன் இறக்கைகளின் வடிவமைப்பைப் புரிந்துகொள்வோம். விமானத்தின் இறக்கை, ஹெலிகாப்டரின் இறக்கை, பறவைகளின் இறக்கை என அனைத்தும் ’காற்றிதழ்’ (Airfoil) வடிவத்தில் இருக்கும்.
காற்றிதழின் மேற்புறம் வளைவான பகுதியாக இருக்கும், அதனால் நீளம் அதிகமாக இருக்கும். அதன் கீழ்ப்பகுதி தட்டையாக இருக்கும். இந்த உருவமைப்புக் காற்றைக் கிழித்துக்கொண்டு நகரும்போது, மேல் பகுதியில் அதிகமான தொலைவைக் கடந்து செல்வதற்காகக் காற்று வேகமாக நகர ஆரம்பிக்கும். அதனால் அழுத்தம் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் கீழ்ப்பகுதியில் காற்று மெதுவாக நகர்வதால் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள தொலைவை இரண்டு வழிப் பாதைகளில் கடப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு பாதை 5 கி.மீ. தொலைவும், மற்ற பாதை 8 கி.மீ. தொலைவும் இருக்கின்றன. இருவரும் ஒரே நேரத்தில் புறப்பட்டு ஒரே நேரத்தில் சென்றடைய வேண்டும். 8 கி.மீ. தொலைவு இருக்கும் பகுதி காற்றிதழின் மேல்பகுதி என்று வைத்துக்கொண்டால், அதில் பயணம் செய்பவர் சற்று வேகமாகப் பயணிப்பார். 5 கி.மீ. தொலைவு பயணித்து இலக்கை அடைபவர் சற்று மெதுவாகச் செல்வார். இப்படிக் காற்றிதழின் மேற்பரப்பில் காற்று வேகமாகவும் கீழ்பரப்பில் மெதுவாகவும் பயணம் செய்கிறது.
இந்த அழுத்த வேறுபாடு மேல்நோக்கு விசையை உருவாக்குகிறது. ஆனால், இந்த மேல்நோக்கு விசையை உருவாக்கக் காற்றிதழ் வடிவில் உள்ள இறக்கையின் மீது காற்று வேகமாக வீச வேண்டும், அல்லது பறவை வேகமாகக் காற்றைக் கிழித்துக்கொண்டு முதலில் நகர வேண்டும். வேகமாக நகர்ந்து, தேவையான மேல்நோக்கு விசையை உருவாக்கியவுடன்தான் பறக்க முடியும். அதற்காகத்தான் விமானங்களுக்கு ஓடுதளம் தேவைப்படுகிறது.
பறக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக விமானம் மணிக்கு 100 - 250 கி.மீ. வேகத்தை அடைய வேண்டி இருக்கும். அதற்காக ஓடுதளத்தில், சில நூறு மீட்டரில் இருந்து கிலோமீட்டர் வரை பறக்க வேண்டிய கட்டாயம் விமானங்களுக்கு இருக்கிறது. தொலைவும் வேகமும் விமானத்தின் வடிவமைப்புக்கு ஏற்ப மாறுபடுகின்றன. அதிக எடையைக் கொண்டுள்ள சர்வதேச விமானங்களுக்கு மேல்நோக்கு விசை அதிகமாகத் தேவைப்படும். அதனால், அதிகமான தொலைவுக்கு ஓடுதளம் தேவைப்படும்.
இறக்கையை அடித்து அழுத்தத்தை உருவாக்க முடியாத பறவைகள் இது போலச் சற்றுத் தொலைவு ஓடி அல்லது மலையில் இருந்து குதித்து அழுத்த வேறுபாட்டை உருவாக்கி, மேலே பறக்க ஆரம்பிக்கின்றன.
அடுத்த வகைப் பறவைகள் காற்றின் உதவியைப் பெற்றுப் பறக்க ஆரம்பிக்கின்றன. அவை பகலில் சூரியன் வருகைக்காகக் காத்திருக் கின்றன. சூரியன் வந்தவுடன் காற்று சூடாகி மேல் நோக்கிச் செல்லும். இப்படி மேல் நோக்கிச் செல்லும் காற்றில் வட்டமிட்டு பறவைகள் உயரே செல்லும்.
அதே போன்று மலை முகடுகளுக்கு அருகில் பயணத்தை ஆரம்பிக்கும் பறவைகளும் இருக்கின்றன. சமதளப் பரப்பிலிருந்து வீசும் காற்று மலைமுகடுகளைத் தாண்டி மேல்நோக்கிச் செல்லும். இப்படியாகக் குன்றுகளின் மீது தவழ்ந்து மேல் நோக்கிச் செல்லும் காற்றில் பயணித்துப் பயணத்தைத் தொடரும் பறவைகளும் இருக்கின்றன.
கடல் நீரில் இருக்கும் காற்று அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக கரையை நோக்கி நகர ஆரம்பிக்கும். இந்தக் காற்றைப் பயன்படுத்திக் கடல் பறவைகள் பறக்கின்றன.
மிதக்கும் பறவைகள் தரையில் இருந்து பறந்து ஒரு குறிப்பிட்ட உயரத் திற்குச் சென்றவுடன் இறக்கையை முழுவதுமாக விரித்து வைத்துக் கொள்கின்றன. குறிப்பிட்ட வேகத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு பறக்கின்றன. அதனால், இறக்கையின் மேல் பக்கம் குறைந்த அழுத்தமும் கீழ்ப்பக்கம் அதிக அழுத்தமும் உருவாகிறது. இந்த அழுத்த வேறுபாடு அவை காற்றில் மிதந்துகொண்டே இருக்க உதவியாக இருக்கிறது.
சில பறவைகள் பகுதி நேரம் சிறகடித்தும் பகுதி நேரம் மிதந்தும் செல்கின்றன. சிறகடித்து ஒரு குறிப்பிட்ட உயரத்திற்குச் சென்றுவிடும். சிறகடிப்பதை நிறுத்திய உடன் அதன் உயரம் குறைந்துகொண்டே வரும். குறிப்பிட்ட உயரம் வந்தவுடன் மீண்டும் சிறகடித்துப் பறக்க ஆரம்பிக்கும். மரங்கொத்தி, சிட்டுக்குருவி, ஆந்தை ஆகியவை இதுபோன்று பறக்கின்றன.
எப்போதும் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்க அதிகப்படியான ஆற்றல் தேவை. அந்த வகைப் பறவைகளால் தொலைதூரத்துக்குப் பறக்க இயலாது. மிதந்துகொண்டு பறக்கும் பறவைகள் குறைவான ஆற்றலைச் செலவிட்டுப் பறக்க இயலும். அவற்றால் தினமும் பல நூறு கி.மீ. தொலைவுக்கு எளிதாகப் பறக்க இயலும்.
- writersasibooks@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT