Published : 12 Jun 2018 05:54 PM
Last Updated : 12 Jun 2018 05:54 PM

டிங்குவிடம் கேளுங்கள்: எரிகல் பார்த்தால் மறதி வருமா?

என் அம்மா வேலைக்குச் செல்வதால், வீட்டு வேலைகளில் தங்கையின் உதவியைக் கேட்பார். என் தங்கை என்னையும் வேலைகளைச் செய்யச் சொல்லிச் சண்டை போடுவாள். என் அப்பா வீட்டு வேலைகள் செய்ததில்லை. அதனால் நானும் செய்வதில்லை. இது தவறா, டிங்கு? நீ வீட்டு வேலைகள் செய்வாயா?

–வி. நகுலன், நாமக்கல்.

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகளை ஆண்கள் செய்ய வேண்டுமா என்றுதானே கேட்கிறீர்கள், நகுலன்? ஆண் வேலை, பெண் வேலை என்று தனித்தனியாக எதுவும் இல்லை. நம் எல்லோருக்குமே வயிறு இருக்கிறது, அது வேளாவேளைக்குப் பசிக்கவும் செய்கிறது. நமக்கான உணவை நாமே செய்து சாப்பிடுவதிலோ, அல்லது செய்து கொடுப்பவர்களுக்கு உதவுவதிலோ என்ன கஷ்டம்? உங்கள் வீட்டில் அம்மா வெளி வேலைக்கும் செல்கிறார், வீட்டிலும் வேலைகளைச் செய்கிறார். உங்கள் அப்பாவோ வெளி வேலையை மட்டும் செய்துவிட்டு, வீட்டில் சும்மா இருக்கிறார்.

இப்போது யாருக்கு அதிக வேலைப் பளு? உங்களைப் போலவே உங்கள் தங்கையும் பள்ளிக்குச் செல்கிறார். பாடம் படிக்கிறார். ஆனாலும் வீட்டில் அவர் மட்டும் வேலை செய்ய வேண்டும் என்கிறீர்கள். எந்த விதத்தில் உங்கள் அம்மாவும் தங்கையும் உங்கள் அப்பாவையும் உங்களையும்விடக் குறைந்துவிட்டனர்? ஏன் அவர்களுக்கு மட்டும் வேலைச் சுமை அதிகம் என்று யோசித்துப் பாருங்கள். வீட்டு வேலைகளை ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்வதுதான் நியாயம் என்று புரியும்.

எங்கள் வீட்டிலும் சரி, நான் யார் வீட்டுக்குப் போனாலும் சரி, வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்க மாட்டேன். ஒருவர் வேலை செய்வதைப் பார்த்துக்கொண்டு, என்னால் சும்மா இருக்க முடியாது. வீடு பெருக்குவேன், பாத்திரம் தேய்ப்பேன், துணி சுவைப்பேன், சமையல் செய்வேன். நீங்களும் வீட்டு வேலைகளைச் செய்து பாருங்கள், உங்களுக்கே அதில் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். உங்கள் அம்மாவும் தங்கையும் உங்களைக் கொண்டாடுவார்கள்.

shutterstock_349451003தலைக்குக் குளித்த உடன் தூக்கம் வருகிறதே ஏன், டிங்கு?

-ப்ராங்க் ஜோயல், 5-ம் வகுப்பு, ஜெயின் வித்யாலயா, மதுரை.

தண்ணீர் தலையில் விழுந்தவுடன் ரத்தக் குழாய்கள் சற்று சுருங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதன் காரணமாக நமக்குத் தூக்கம் வருகிறது. இதேபோலதான் சாப்பிட்ட பிறகும் ரத்தக் குழாய்கள் சற்று சுருங்குகின்றன. மூளைக்குச் செல்லும் ரத்தமும் குறைகிறது. அதனால் தூக்கம் வருகிறது, ப்ராங்க் ஜோயல்.

எரிநட்சத்திரம் என்றால் என்ன, அதைப் பார்த்தால் ஞாபக மறதி வருமா, டிங்கு?

வி. திவ்யதர்ஷினி, 4-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

நமது சூரிய மண்டலத்தில் பல கோடிக்கணக்கான கற்களும் உலோகப் பாறைகளும் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவை சில நேரம் பூமியின் காற்று மண்டலத்துக்குள் வேகமாக வரும்போது, உராய்வினால் எரிய ஆரம்பிக்கின்றன. இதைத்தான் எரிகல், எரிநட்சத்திரம், விண்வீழ்கல் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். எரி கல்லைக் கண்டால் மறதி ஏற்படும் என்று என் பாட்டிகூடச் சொல்லியிருக்கிறார். ஆனால் மறதிக்கும் எரிகல்லுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை, திவ்யதர்ஷினி.

என் வீட்டில் கிளி, நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்க்கிறோம். நீ ஏதாவது செல்லப் பிராணியை வளர்த்து வருகிறாயா, டிங்கு?

எம். அபிஷேக், வாணியம்பாடி.

எனக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் விருப்பமோ, ஆர்வமோ இல்லை, அபிஷேக். பறந்து திரியும் பறவைகளைக் கூண்டுக்குள் வைத்தால் சிறை வைத்ததுபோல் தோன்றும். அன்பு என்ற பெயரில் எந்தப் பிராணியையும் நமக்கு அடிமையாக வைத்துக்கொள்வதில் விருப்பமில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x