Last Updated : 06 Jun, 2018 10:58 AM

 

Published : 06 Jun 2018 10:58 AM
Last Updated : 06 Jun 2018 10:58 AM

உடல் எனும் இயந்திரம் 26: உயிர்த் திரவம்

த்தமும் ஓர் உடல் உறுப்புதான். மற்ற உறுப்புகள் எல்லாமே திட உறுப்புகள் என்றால், ரத்தம் மட்டும் திரவ உறுப்பு. நம் உடலின் எடையில் 8 % ரத்தத்தின் எடை. ரத்தத்தின் நிறம் எல்லோருக்கும் சிவப்புதான்.

ரத்தம் நம் உயிர் காக்கும் திரவம். 70 கிலோ எடையுள்ள ஒருவரின் உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. காஷ்மீர், ஊட்டி, கொடைக்கானல் போன்ற காற்றழுத்தம் குறைந்த மலைப் பிரதேசங்களில் வசிப்போருக்கு 2 லிட்டர் ரத்தம் வரை கூடுதலாக இருக்கும். இவர்களுக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு இயல்பாகவே குறைவாக இருக்கும். அப்போது அவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனை ஈடுகட்ட ரத்தம் கூடுதலாக இருக்கிறது.

ரத்தத்தில் 55 % பிளாஸ்மா திரவம் உள்ளது. மீதி ரத்த அணுக்கள். பிளாஸ்மாவில் 90 % தண்ணீர். ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, உணவுச் சத்துகள், தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்புப் புரதங்கள், ஹார்மோன்கள், உடல் கழிவுகள் போன்றவை பிளாஸ்மாவில் மிதந்துகொண்டிருக்கும் மற்ற பொருள்கள்.

இதயத் துடிப்பு கொடுக்கும் விசையாலும், தசைகள் தரும் அழுத்தம் காரணமாகவும் ரத்தம் உடல் எங்கும் சுற்றிக்கொண்டிருக்கிறது. பார்ப்பதற்குத் திரவமாகத் தெரிந்தாலும், ரத்தத்தில் திடப்பொருள்களும் இருக்கின்றன. அவை ‘ரத்த அணுக்கள்’. சிவப்பணுக்கள் (Erythrocytes), வெள்ளணுக்கள் (Leucocytes), தட்டணுக்கள் (Platelets) என மொத்தம் மூன்று வகை.

சிவப்பணுக்கள்தான் ரத்தத்துக்குச் சிவப்பு நிறத்தைத் தருகின்றன. இவற்றில் இருக்கும் ‘ஹீமோகுளோபின்’ எனும் இரும்பு மிகுந்த புரதப்பொருள் சிவப்பாக இருப்பதால்தான், ரத்தமும் சிவப்பாக இருக்கிறது. உடல் பாகங்களுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்வதும், நுரையீரல் வழியாக கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்ற உதவுவதும் ஹீமோகுளோபின் செய்யும் முக்கியமான வேலைகள். சாதாரணமாக ஒருவருக்கு இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் 15 கிராம்வரை இருக்க வேண்டும்.

ஒரு சிவப்பணுவானது சிறிதாக, வட்டமாக, இருபுறமும் குழிந்து, அணுக்கரு (Nucleus) இல்லாமல் இருக்கும். இவை தொடர்ந்து எலும்பு மஜ்ஜையில் (Bone marrow) பல்வேறு கட்டங்களில் வளர்ந்து ரத்தச்சுற்றோட்டத்துக்கு வரும். முழு வளர்ச்சி பெற்ற சிவப்பணுக்கள் 120 நாட்கள்வரை உயிர்வாழும். அதற்குப் பிறகு இவை மண்ணீரலிலும் கல்லீரலிலும் அழிக்கப்படும். 18 வயதைக் கடந்த ஆண்களின் ரத்தத்தில் ஒரு கன மி.மீ.க்கு சுமார் 52 லட்சம் சிவப்பணுக்கள் இருக்கும். இது பெண்களுக்கு 45 லட்சம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும், சிவப்பணு எண்ணிக்கையும் குறைவதை ‘ரத்தசோகை’ (Anaemia) என்கிறோம். ரத்தசோகை இருந்தால் சீ்க்கிரம் சோர்வடைந்து விடுவீர்கள்; படிப்பில் கவனம் குறையும்.

Blood cir

உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தருபவை வெள்ளணுக்கள். இவை நோய்த் தொற்றுகளிலிருந்து நம்மைக் காக்கின்றன. இவற்றில் அணுக்கரு இருக்கிறது. ஆனால், ஹீமோகுளோபின் இல்லை. ஆகவே, இவற்றுக்கு நிறமில்லை. நோய் எதிர்ப்புப் பொருள்களை (Antibodies) உற்பத்தி செய்வது, இறந்த உடல் செல்களை உட்கொண்டு அழிப்பது, ரத்தம் உடலுக்குள் உறைவதைத் தடுப்பது போன்றவை வெள்ளணுக்கள் செய்யும் முக்கியப் பணிகள். ஒரு கன மி.மீ. ரத்தத்தில் சாதாரணமாக 4,000 முதல் 11,000 வரை வெள்ளணுக்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 5 வகை உண்டு. நோய்களின் தாக்கத்தாலும் புற்றுநோய் பாதிப்பினாலும் வெள்ளணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அடுத்தது, தட்டணுக்கள். இவற்றின் எண்ணிக்கை ஒரு கன மி.மீ. ரத்தத்தில் 1.5 முதல் 4 லட்சம்வரை இருக்கும். ஒரு தட்டணு அதிகபட்சமாக 10 நாட்களுக்குத்தான் உயிரோடு இருக்கும். உடலில் அடிபட்டு ரத்தம் கசியும்போது சிறிது நேரத்தில் ரத்தம் உறைந்து போகிறதல்லவா? அதற்குக் காரணம் இந்தத் தட்டணுக்கள்தான். இவை உடலில் காயம்பட்ட இடத்தில் ஃபைப்ரின் இழைகளை உற்பத்தி செய்து, கசியும் ரத்தக்குழாயை ஒரு பசைபோல் மூடிவிடும். இதனால் ரத்தக்கசிவு நின்றுவிடும். இப்படி உடலில் ரத்தம் வீணாகாமல் தடுப்பதில் தட்டணுக்களின் பங்கு மகத்தானது. ரத்தம் உறைவதற்கு மொத்தம் 13 பொருட்கள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் ரத்தம் உறையாது. டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களால் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்போது உடலெங்கும் ரத்தக்கசிவு ஏற்படும்.

ரத்தம் என்ன செய்கிறது?

ரத்த ஓட்டத்தின் மூலம் ஆக்ஸிஜனை உடல் எங்கும் பகிர்ந்தளிக்கிறது. கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றுகிறது. திசுக்களுக்குத் தேவையான உணவுச் சத்துகளையும் ஹார்மோன்களையும் எடுத்துச் செல்கிறது. உடல் கழிவுகளை அகற்றுகிறது. உடலின் வெப்பத்தைச் சீராக்குகிறது. உடலுக்குள் தண்ணீரின் அளவைச் சமப்படுத்துகிறது. ரத்தம் உறைவதற்கு உதவுகிறது. அமிலக் காரத் தன்மையை நடுநிலையில் வைத்துக்கொள்கிறது. நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது.

உங்களுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு இருந்தால், சில துளி ரத்தம் எடுத்துப் பரிசோதிக்கிறார்கள் அல்லவா? அப்போது ரத்த அணுக்களின் அமைப்பு, எண்ணிக்கை, கனம், சர்க்கரை, யூரியா, கொழுப்பு, ஹார்மோன் போன்றவற்றின் அளவுகள், மலேரியா, காசநோய் போன்றவற்றுக்கான கிருமிகள், இன்ன பிற பரிசோதனைகளைச் செய்து, உடல் உறுப்புகள் எவ்வாறு வேலை செய்கின்றன, எந்த நோய் உள்ளது என்பதை மருத்துவர்கள் அறிந்துகொள்கிறார்கள். நோய் இருந்தால், தகுந்த சிகிச்சை அளிக்கிறார்கள்.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x