Published : 06 Jun 2018 10:57 AM
Last Updated : 06 Jun 2018 10:57 AM

டிங்குவிடம் கேளுங்கள்: வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளருமா?

மனிதனுக்கு மட்டும் அழுகை ஏன் வருகிறது, டிங்கு?

– உ. தீனாதரன், 4-ம் வகுப்பு, மேடவாக்கம், சென்னை.

நல்ல கேள்வி, தீனாதரன். அழுகை என்பது உணர்வின் வெளிப்பாடு. வலி, துக்கம், இழிவு, இயலாமை போன்ற நிகழ்வுகளின்போது நம் உணர்வு அழுகையாக வெளிப்படுகிறது. தாங்க முடியாத வலி, பிரியத்துக்குரியவரின் மரணம், மற்றவர்கள் தரக்குறைவாகப் பேசும்போது / நடத்தும்போது, நம்மால் ஒரு செயலைச் செய்ய முடியாதபோது செக்ரடோமோட்டார் (Secretomotor) நுணுக்கமாகச் செயல்பட்டு, கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து (Lacrimal Gland) கண்ணீரைச் சுரக்க வைக்கிறது.

சில நேரம் மகிழ்ச்சியிலும் கண்ணீர் சுரக்கும்; இதை ஆனந்தக் கண்ணீர் என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். வருத்தமான கண்ணீருக்கும் மகிழ்ச்சியான கண்ணீருக்கும் இடையே ரசாயனக் கலப்பில் மாற்றம் இருக்கிறது. ஆண்களை விட பெண்களும் குழந்தைகளும் அதிகமாக அழுகின்றனர். விலங்குகள் நம்மைப்போல் உணர்ச்சிவசப்பட்டு அழுவதில்லை. கண்களில் தூசி, வேண்டாத பொருள் உறுத்தும்போது கண்ணீர் விடுகின்றன.

வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளரும் என்கிறார் அம்மா. இது உண்மையா, டிங்கு?

– கு. லிபிவர்ஷ்னி, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

உங்கள் அம்மா மட்டுமில்லை, பெரும்பாலான அம்மாக்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் அறிவு வளரும் என்றுதான் சொல்கிறார்கள். வழவழப்பான வெண்டைக்காயைச் சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு, சாப்பிட வைப்பதற்காக இப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கலாம். இப்படிச் சொன்னால், பிடிக்காவிட்டாலும் கூட வெண்டைக்காயைச் சாப்பிடுவார்கள் என்று நினைத்திருக்கலாம். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. புரதம், மாவுச்சத்து, கொழுப்பு, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் சில சத்துகள் இருக்கின்றன. அதனால் வெண்டைக்காயைச் சாப்பிடுவது நல்லது. அறிவு வளர வேண்டும் என்றால், தேடித் தேடிப் படிக்க வேண்டும்; சிந்தனையை வளர்த்துக்கொள்ள வேண்டும், லிபிவர்ஷ்னி.

எறும்பு தூங்குமா, டிங்கு?

– ஆர். சஞ்சீவ் குமார், திருப்பாச்சேத்தி.

எறும்புகளும் தூங்குகின்றன, சஞ்சீவ் குமார். ஆனால் ராணி எறும்புகளுக்கும் வேலைக்கார எறும்புகளுக்கும் தூக்கத்தில் வித்தியாசம் இருக்கிறது. ராணி எறும்பு ஒரு நாளைக்கு 9 மணி நேரம்வரை தூங்குகிறது. வேலைக்கார எறும்புகள் சுமார் 4 மணி நேரமே தூங்குகின்றன. அதையும் ஒரே நேரத்தில் தூங்குவதில்லை. சில நிமிடங்கள் தூங்குவது, பிறகு எழுந்து வேலை செய்வது என்று தங்கள் வேலைகளுக்கு இடையே தூங்கிக்கொள்கின்றன. இப்படித் தூங்குவதால் எறும்புப் புற்றுக்குள் 80 சதவீத வேலைக்கார எறும்புகள் வேலைகளைச் செய்துகொண்டிருக்கின்றன. ராணி எறும்பு ஆண்டுக் கணக்கிலும் வேலைக்கார எறும்புகள் மாதக் கணக்கிலும் உயிர் வாழ்வதற்குக் காரணம், இந்த உறக்கம்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள், சஞ்சீவ் குமார்.

சமீபத்தில் பார்த்த ‘தி வே ஹோம்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீ பார்த்திருக்கிறாயா, டிங்கு?

– வி. அனிதா தேவி, திருத்துறைப்பூண்டி.

எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ‘தி வே ஹோம்’ திரைப்படமும் ஒன்று. நகரத்திலிருந்து விடுமுறைக்காக, மலைக் கிராமத்தில் இருக்கும் பாட்டி வீட்டுக்கு வருகிறான் ஒரு சிறுவன். கிராமச் சூழல், உணவு, வீடு, வசதியின்மை என்று பல விஷயங்கள் அவனுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. பேரனுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் செய்து கொடுப்பார் பாட்டி. ஆனால் அது அவன் எதிர்பார்ப்பதைப்போல் இருக்காது. ஏமாற்றமடையும் சிறுவன் பாட்டி மீது கோபப்படுவான். ஒருகட்டத்தில் பாட்டி மீது அன்பு சுரக்கும். அப்போது விடுமுறை முடிந்து, நகரத்துக்கு அழைத்துச் செல்ல அவனது அம்மா வந்துவிடுவார். பாட்டியும் பேரனும் கண்ணீருடன் விடைபெறுவார்கள். நல்ல திரைப்படம். இன்றுவரை பாட்டியையும் பேரனையும் மறக்க முடியவில்லை, அனிதா தேவி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x