Published : 20 Jun 2018 10:55 AM
Last Updated : 20 Jun 2018 10:55 AM

கதை: முதலை மீது சவாரி

 

ற்றை ஒட்டிய மரத்தில் குரங்குக் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. அந்த ஆற்றில் முதலை வசிப்பதை அறியாத விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும்போது, முதலையிடம் சிக்கிக்கொள்வது உண்டு. அதனால் தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளிடம் விஷயத்தைச் சொல்லி எச்சரித்துவந்தது குரங்கு.

’நீர் விலங்குகளைச் சாப்பிட்டு சலிப்பாக இருக்கிறது. நில விலங்குகளை இந்தப் பொல்லாத குரங்கு தடுத்துவிடுகிறது. குரங்கைக் கொன்றால்தான், நான் விதவிதமாகச் சாப்பிட முடியும்’ என்று நினைத்தது முதலை.

அப்போது நரி தண்ணீர் குடிக்க வந்தது. வழக்கம்போல் குரங்கு எச்சரித்தது.

“முதலை இருக்கிற மாதிரியே தெரியலையே தம்பி. ரொம்பத் தாகமாக இருக்கு” என்று சொல்லிவிட்டு, தண்ணீர்ப் பருகியது நரி.

திடீரென்று தலையை வெளியே நீட்டியது முதலை. பயந்து பின்னால் சென்றது நரி.

“நரியே, பயப்படாதே. நான் சொல்வதுபோல் நடந்துகொண்டால் நீ எப்போது வேண்டுமானாலும் இங்கே தண்ணீர் குடிக்கலாம்” என்றது முதலை.

“என்ன செய்யணும்?”

“அந்த மரத்தில் இருக்கும் குரங்கு என்னுடைய எதிரி. நீ என்னுடன் நட்பாகப் பழகுவதை வைத்து, அந்தக் குரங்குக்கு என்னிடம் நம்பிக்கை வரவேண்டும். குரங்கு என்னிடம் நெருங்கும்போது அதை நான் கவனித்துக்கொள்கிறேன்” என்றது முதலை.

“எனக்குப் பிரச்சினை இல்லை என்று சொன்னதால், இந்த உதவியைச் செய்கிறேன்” என்றது நரி.

”என்ன செய்தால் குரங்கை நம்ப வைக்க முடியும்?”

“ம்… என்னை உன் முதுகில் ஏற்றிக்கொண்டு அக்கரைவரை சென்று திரும்பி வா. சில நாட்களில் குரங்குக்கு உன் மீது நம்பிக்கை வந்துவிடும். பிறகு குரங்கையும் அக்கரைக்கு வரச் சொல்லி அழைப்போம்” என்றது நரி.

“பிரமாதமான திட்டம். சீக்கிரம் வந்து என் முதுகில் ஏறிக்கொள்” என்று அவசரப்படுத்தியது முதலை.

நரி முதுகில் ஏறியதும் முதலை நீந்த ஆரம்பித்தது. நீண்ட நேரம் கழித்து மீண்டும் கரையில் இறக்கிவிட்டது.

எல்லாவற்றையும் அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்த குரங்கு, “உனக்கு முதலையிடம் பயமில்லையா? அந்தப் பொல்லாத முதலை உன்னைப் பத்திரமாக இறக்கிவிட்டு விட்டதே, எப்படி?” என்று கேட்டது.

”உனக்கு விஷயமே தெரியாதா? முதலை இப்போது புது அவதாரம் எடுத்துவிட்டது. யாரையும் கொல்வதில்லை. இறந்து மிதக்கும் மீன்களை மட்டுமே சாப்பிடுகிறது. என்னைக் கூட எவ்வளவு அன்பாக நடத்தியது தெரியுமா?” என்று குரங்கின் ஆர்வத்தை அதிகரித்தது நரி.

மறுநாள் மீண்டும் ஆற்றுக்கு வந்தது நரி. குரங்கையும் வரச் சொல்லி அழைப்பு விடுத்தது.

“நான் வரவில்லை. நீ போயிட்டு வா.”

ஒரு வாரமாக முதலையின் முதுகில் சவாரி செய்துவிட்டு, பத்திரமாகத் திரும்பும் நரியைப் பார்த்து குரங்குக்கு நம்பிக்கை வந்தது. மறுநாள் நரி அழைத்த உடன் கிளம்பியது.

“அடடா! இன்று குரங்கும் நம்மோடு வருகிறதா? வா, அக்கரையில் பழங்கள் அதிகம் இருக்கின்றன. நீ வயிறு நிறைய உண்ணலாம்” என்று வரவேற்றது முதலை.

“நரி வந்தால்தான் நான் உன்னோடு வருவேன்” என்றது குரங்கு.

வேறு வழியின்றி நரியையும் குரங்கையும் ஏற்றிகொண்டு கிளம்பியது முதலை. பத்திரமாக மீண்டும் கரை சேர்த்துவிட்டது.

மறுநாள் நரியும் குரங்கும் வந்தன. “நரி, இன்று நீ வர வேண்டாம். மேற்கு பகுதியில் நிறைய நாவல் பழங்களும் கொய்யாப்பழங்களும் இருக்கின்றன. குரங்கு சாப்பிட்டுவிட்டு, உன் குடும்பத்துக்கும் கொண்டு வரலாம். நரி வந்தால் என் முதுகில் இடம் இருக்காது” என்றது முதலை.

குரங்கும் அதை நம்பி முதுகில் ஏறிக்கொண்டது. பாதித் தூரம் சென்றதும், “முட்டாள் குரங்கே, உன்னைக் கொல்வதற்காகத்தான் நானும் நரியும் திட்டம் போட்டோம். நன்றாக மாட்டிக்கொண்டாயா? நீர் குடிக்க வரும் விலங்குகளைத் தடுத்ததால் எனக்குச் சுவையான உணவுகளே கிடைப்பதில்லை. இன்றோடு அந்தப் பிரச்சினை முடிந்தது” என்று சிரித்தது முதலை.

பயத்தை மறைத்துக்கொண்டு, குரங்கும் சிரித்தது.

“உயிர் போகும் வேளையிலும் சிரிப்பா?“

“முட்டாள் முதலையே, என்னைக் கொன்றால் உன் பிரச்சினை தீருமா? என் மனைவி தண்ணீர்க் குடிக்க வரும் விலங்குகளை எச்சரிக்க மாட்டாரா? திரும்பிச் செல். மனைவியையும் அழைத்து வருகிறேன். அதற்குப் பிறகு உனக்குப் பிரச்சினையே இருக்காது” என்றது குரங்கு.

பேராசையால் புத்தியை இழந்த முதலை, கரையை நோக்கி வேகமாகத் திரும்பியது.

“இப்போதே சென்று, மனைவியை அழைத்து வா” என்று ஆவலோடு இறக்கிவிட்டது முதலை.

மரத்தில் ஏறிய குரங்கு, “நாங்கள் வருவோம் என்று இன்னுமா நினைக்கிறாய்? நட்பு என்ற பெயரில் ஏமாற்றிய உனக்கு இனிமேல் இங்கே உணவு கிடைக்க வாய்ப்பே இல்லை” என்று சிரித்தது குரங்கு.

இனி இந்த இடத்தில் வசிப்பதில் அர்த்தம் இல்லை என்று நினைத்த முதலை, வேறு இடம் நோக்கிக் கிளம்பியது.

-எஸ். அபிநயா, 10-ம் வகுப்பு, தேவனாங்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x