Published : 21 Aug 2024 06:29 AM
Last Updated : 21 Aug 2024 06:29 AM
நான் இந்த உலகிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்வது எல்லாம் ஒன்றுதான். தயவுசெய்து என்னை மேதை என்று அழைக்காதீர்கள். தயவுசெய்து என்னை உச்சத்தில் உட்காரவைத்துக் கொண்டாடாதீர்கள். தயவுசெய்து என் படைப்புகளை வைத்து என்னை எடை போட்டுவிடாதீர்கள். நான் அதற்கெல்லாம் தகுதியானவன் கிடையாது.
நான் பீத்தோவன் மட்டுமல்ல. ஒரு சராசரி மனிதனும்கூட. பீத்தோவனைக் கொண்டாடுவதாக நினைத்து என்னையும் சேர்த்து உயர்த்திவிடாதீர்கள். நான் வேறு, பீத்தோவன் வேறு. இரண்டையும் ஒன்றாக்கிக் குழப்பிக்கொள்ளாதீர்கள்.
ஒழுங்கான, நிறைவான, தூய்மையான மனிதன் இதுவரை தோன்றியதில்லை. தோன்றப்போவதும் இல்லை. நூறு குறைகள் உள்ளன என்னிடம். ஆயிரம் குற்றங்கள் இழைத்திருக்கிறேன் இதுவரை. எண்ணற்ற முறை தடுமாறியிருக்கிறேன். எண்ணற்ற முறை தடம்புரண்டிருக்கிறேன்.
சொல்லாலும் செயலாலும் எவ்வளவோ பேரைக் காயப்படுத்தி இருக்கிறேன். எவ்வளவு முயன்றும் ஒழுங்கு கைகூடவில்லை இன்னமும். எவ்வளவு படித்தும் தெளிவு பிறக்கவில்லை எனக்கு. என் அறியாமை ஒவ்வொரு நாளும் பெருகுகிறதே தவிர, மறைவதாகத் தெரியவில்லை. கசடுகளாலும் கசப்புகளாலும் நிறைந் திருக்கிறது என் வாழ்க்கை.
துயரும் வெறுப்பும் வேதனையும் வலியும் போட்டியிட்டுத் தின்று கொண்டிருக்கின்றன என்னை. எல்லாரையும் அரவணைத்துச் செல்லும் அளவுக்கு, எல்லார் மீதும் அன்பு செலுத்தும் அளவுக்கு இன்னமும் விரியவில்லை என் இதயம். நான் குறைபாடுகளோடு வாழும் ஓர் எளிய மனிதன் மட்டும்தான்.
நான் பீத்தோவனாக மாறுவது பியானோவின் முன்பு அமரும்போது மட்டும்தான். என் விரல்கள் பியானோவின் விசைகளின்மீது பதியும்போது வேறோர் உயிராக நான் உருமாறுகிறேன். நான் என்னை மறக்கிறேன். என் உலகை மறக்கிறேன். என் விரல்கள் நடனமாடத் தொடங்கும்போது சுருங்கிக்கிடக்கும் என் இதயம் சூரியகாந்தி பூவைப் போல் விரிகிறது. என் இதயம் விரியும்போது அதில் படர்ந்திருக்கும் கசடுகள் மறைகின்றன.
நான் பீத்தோவனாக மாறும்போது என் குறைகள் என்னைவிட்டு விலகுகின்றன. என் குற்றங்களையும் அவை ஏற்படுத்திய வடுக்களையும் என் இசை வேகமாக அழிக்க ஆரம்பிக்கிறது. எண்ணற்ற புத்தகங்களை வாசித்தும் கிடைக்காத தெளிவு பியானோவை வாசிக்கும்போது வந்துசேர்கிறது. ஒரு மனிதனாக என்னால் ஒருபோதும் அடைய முடியாத ஒழுங்கை என்னுடைய சில நிமிட இசை கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது.
நான் உடைந்த மனிதனாக இருந்தாலும் தலைநிமிர்ந்து நிற்கிறது என் இசை. ஒரு மனிதனாக என்னிடம் குவிந்திருக்கும் ஒழுங்கீனங்களை என் இசையில் என்னால் காண இயலவில்லை. ஒரே ஒரு குற்றம்கூடச் சொல்ல முடியாத அளவுக்கு, ஒரே ஒரு பொட்டு அழுக்கைக்கூடச் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்குத் தூய்மையோடு மிளிர்கிறது என் இசை. என்னால் ஒருபோதும் அவ்வாறு இருக்க முடியாது. ஒரேயொரு நொடிகூட.
என்னால் வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை என் இசை வெளிப் படுத்துகிறது. என்னால் நினைத்தும் பார்க்க முடியாத உயரங்களை என் இசை அசாத்தியமாகக் கடந்து மேலும் மேலும் உயரத்தை அடைந்து கொண்டிருக்கிறது. நான் சண்டையிட்டவர்களை இழுத்துப் பிடித்துவந்து என் கரங்களில் சேர்க்கிறது என் இசை. நான் காயப்படுத்திய அனைவரையும் தொட்டுத் தழுவிக் குணப்படுத்துகிறது என் இசை.
நான் கால் பதிக்காத தேசங்களில் எல்லாம் என் இசை வாழ்ந்துகொண்டிருக்கிறது. அறிமுகமற்ற மனிதர்கள் எல்லாம் என் இசையைக் கேட்டுக் கசிந்து உருகிக்கொண்டிருக்கிறார்கள். அளவில்லா அன்பை, அளவில்லாக் கருணையைச் சுமந்துகொண்டு நிற்கிறது என் இசை. இந்தப் பண்புகள் எவையும் ஒரு மனிதனாக என்னிடம் இல்லை.
அதனால்தான் சொல்கிறேன். என் படைப்பு வேறு, நான் வேறு. என்னால் இசைக்க மட்டும் முடியுமே தவிர, ஒருபோதும் என் இசையாக மாற முடியாது. என் இசையின் நளினம் என்னிடம் இல்லை. மரபையும் நவீனத்தையும் என் இசை போல் என்னால் நுணுக்கமாக இணைக்க முடியாது. ஒரே ஓர் உள்ளத்தைக்கூட ஒரு மனிதனாக என்னால் தொட முடியாது.
என் இசை முழு உலகையும் கைப்பற்றி உள்ளங்கைக்குள் வைத்துக் கொள்ளும். என்னைக் கொண்டு என் இசையை எவ்வாறு மதிப்பிட முடியாதோ அவ்வாறே என் இசையைக் கொண்டு என்னை மதிப்பிடவும் முடியாது.
நாம் எல்லாருமே மனிதர்கள். கணக்கில்லாக் குறைகளோடு வாழ்பவர்கள். நம் குறைகளைக் களைவதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. குறை இல்லாத ஒன்றை நாம் படைக்க வேண்டும். குறையில்லாத ஒன்றை நாம் விட்டுச் செல்ல வேண்டும். முழு நிறைவான மனிதர்கள் இந்த உலகில் தோன்றியதில்லை, தோன்றப்போவதுமில்லை. ஆனால், குறைவில்லாத ஒரு படைப்பை எல்லாராலும் உருவாக்க முடியும்.
(இனிக்கும்)
ஆர்வம் இல்லாமல் ஒரு செயைலச் செய்யாதீர்கள்.- பீத்தோவன், உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்.
- marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT