Published : 21 Aug 2024 06:10 AM
Last Updated : 21 Aug 2024 06:10 AM
ஒரு வீட்டுக்கூடத்தில் புதிதாக வாங்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடித் தொட்டியில் தங்க மீன்கள் உலவிக்கொண்டிருந்தன. குமாருக்கும் பூஜாவுக்கும் அந்த மீன்களைப் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் முக்கியப் பொழுதுபோக்கு.
காலையில் எழுந்ததும் மீன்களுக்கு அளவாக உணவிடுவார்கள். அவை உண்ணும் அழகை ரசிப்பார்கள். பள்ளிக்குச் செல்லும்போது சீக்கிரம் வந்துவிடுகிறோம் என்று மீன்களிடம் சொல்லிவிட்டுச் செல்வார்கள். தங்க மீன்களும் குமாரையும் பூஜாவையும் பார்த்ததும் மிகவும் சுறுசுறுப்பாகிவிடும்.
ஒரு வார விடுமுறைக்கு குமாரும் பூஜாவும் பாட்டி ஊருக்குச் சென்றிருந்தார்கள்.
“என்ன வாழ்க்கை இது? வெளிய எல்லாரும் சுதந்திரமா, மகிழ்ச்சியா இருக்காங்க. நாம இந்தத் தொட்டிக்குள்ளயே காலம் முழுக்கச் சுற்றிச் சுற்றி வரவேண்டியிருக்கு. நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?” என்று கவலையாகச் சொன்னது, தொட்டியில் இருந்த ஒரு தங்க மீன்.
“ஆமாம், நானும் அதையேதான் நினைத்தேன். இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?” என்றது இன்னொரு தங்க மீன்.
இதை எல்லாம் கேட்ட மூன்றாவது தங்க மீனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. “உங்கள் இருவருக்கும் என்னாச்சு? ஏன் இப்படிக் கவலையா இருக்கீங்க?” என்றது.
முதல் தங்க மீன், “அதோ எதிரில் இருக்கும் அந்தச் சுவரைப் பார். ஒரு பல்லி அங்கும் இங்கும் சுதந்திரமாகத் திரிகிறது” என்றது.
“சரி, அதுக்கு என்ன இப்ப?”
“அதோ பார், ஒரு சிலந்தி தன் விருப்பத்திற்கு அங்குமிங்கும் அலைந்து வலையைப் பின்னிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாம், இதே கண்ணாடித் தொட்டியில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சுற்றிச் சுற்றி வாழ வேண்டி இருக்கிறது. என்ன வாழ்க்கை இது?” என்றது இரண்டாவது தங்க மீன்.
“நீ சொல்வதில் ஒரு விஷயம் உண்மைதான். நாம் வசிக்கும் பரப்பு குறைவாகத்தான் இருக்கு. ஆனால், நமக்கு இங்கே எல்லாமே கிடைக்குது. இங்கே நமக்குன்னு எதிரி யாரும் கிடையாது. எங்கே இருந்தாலும் தண்ணீரில்தான் நம் வாழ்க்கை” என்றது மூன்றாவது தங்க மீன்.
ஆனாலும் அந்த இரண்டு தங்க மீன்களும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.
தினமும் அவை சுவரில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் பல்லிகளையும் பறந்து திரியும் பூச்சிகளையும் கண்ணாடி வழியே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
ஒரு வாரத்துக்குப் பிறகு ஊரிலிருந்து வந்ததும் குமாரும் பூஜாவும் தங்க மீன்களைப் பார்க்க ஓடிவந்தனர்.
“குமாரும் பூஜாவும் தள்ளிப் போங்க. ஒட்டடை அடிக்கப் போறேன். அப்புறம் வந்து தங்க மீன்களைப் பார்க்கலாம்” என்றார் அவர்களின் அப்பா.
வாக்குவம் கிளீனரை எடுத்துக்கொண்டு வந்து சுவரைச் சுத்தம் செய்தபோது, பூச்சிகள் அந்த இயந்திரக் குழாய்க்குள் சென்றுவிட்டன. சுவர் பளிச்சென்று சுத்தமாக இருந்தது.
தங்க மீன்கள் இரண்டும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தன.
பூஜாவின் அப்பா ஓர் ஈரத்துணியுடன் மீன்தொட்டியை நோக்கி வந்தார்.
‘‘ ஐயோ, ஆபத்து... ஆபத்து...” என்று இரண்டு தங்க மீன்களும் அலறின.
“என்ன ஆபத்து?” என்று கேட்டது அந்த மூன்றாவது தங்க மீன்.
“நம்மையும் தூக்கி வெளியில் வீசப் போறார்...” என்றது முதல் தங்க மீன்.
“உங்க கற்பனையை நிறுத்துங்க. விலை கொடுத்து வாங்கி, இவ்வளவு அருமையாகப் பார்த்துக்கிறாங்க. நம்மை ஏன் தூக்கி வெளியில் வீசப்போறாங்க? ”என்று கேட்டது மூன்றாவது தங்க மீன்.
மற்ற இரண்டு தங்க மீன்களும் நம்பிக்கை இல்லாமல் பூஜாவின் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தன.
அவர் ஈரத்துணியால் தொட்டி மீது படிந்திருந்த தூசியைத் துடைத்தார். ஏற்கெனவே இருந்ததைவிட, கண்ணாடித் தொட்டி இப்போது பளிச் என்று தெரிந்தது.
“அப்பாடா! நாம் தப்பிச்சோம்! இனி யாரையும் பார்த்து அவங்களை மாதிரி நாம இல்லைன்னு நினைக்க மாட்டேன்” என்றது முதல் தங்க மீன்.
“ரொம்பப் பாதுகாப்பான ஒரு இடத்துல இருந்துகிட்டு மத்தவங்களைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடாது.பூச்சிகளும் தங்க மீன்கள் மாதிரி நமக்கு ஒரு வாழ்க்கைக் கிடைச்சிருந்தால், இந்நேரம் ஜாலியா இருந்திருப்போமேன்னு நினைச்சிருக்கலாம். அவை சுதந்திரமாகத் திரிந்தாலும் எந்த நேரமும் ஆபத்தை எதிர்நோக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
பல்லிக்கு மனிதர்கள் ஆபத்து என்றால், சிலந்திக்கு மனிதர்களும் பல்லியும் ஆபத்து. எந்த வாழ்க்கையும் எளிதானது அல்ல. கிடைத்த வாழ்க்கையில் சந்தோஷமா இருப்போம்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தது மூன்றாவது தங்க மீன்.
‘‘ புரிந்துகொண்டோம். அதோ பூஜாவும் குமாரும் வர்றாங்க. அவங்களைக் குஷிபடுத்துற மாதிரி ஒரு டான்ஸை ஆடுவோமா?” என்று கேட்டது இரண்டாவது தங்க மீன்.
முதல் தங்க மீனும் மூன்றாவது தங்க மீனும் நடனத்தில் இணைந்துகொண்டன. பூஜாவும் குமாரும் சந்தோஷத்தில் குதித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT