Published : 16 May 2018 10:58 AM
Last Updated : 16 May 2018 10:58 AM
கு
ட்டிகளுக்காகத் தேனடைகளை எடுத்துக்கொண்டு, குகைக்குள் நுழைந்தது தாய்க் கரடி. விளையாடிக் கொண்டிருந்த குட்டிகள், தாயைக் கண்டவுடன் ஓடிவந்தன. அம்மாவைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டன. அப்போது அழுகுரல் கேட்டது.
சுற்றிலும் தேடிப் பார்த்தது தாய்க் கரடி. எதுவும் கண்ணில் படவில்லை.
தேனடைகளைப் பிரித்து, குட்டிகளுக்குக் கொடுத்தது. மீண்டும் அழுகுரல் கேட்டது.
“யாரது? ஏன் இந்த அழுகை?” என்று சத்தமாகக் கேட்டது தாய்க் கரடி.
பாறைக்குப் பின்னாலிருந்து ஒரு குரங்குக் குட்டி எட்டிப் பார்த்தது.
“அம்மா, என்னை ஒன்றும் செய்துவிடாதீர்கள். என் பெற்றோரைத் தேடிக் காடு முழுவதும் அலைந்தேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னை ஒரு பெரிய விலங்கு துரத்தியதால் இந்தக் குகையில் வந்து ஒளிந்துகொண்டேன்” என்று அழுதது குரங்குக் குட்டி.
“அழாதே, முதலில் இந்தத் தேனடைகளைத் தின்று பசியாறு. உன் பெற்றோர் வரும்வரை நீ இங்கேயே என் குட்டிகளுடன் பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ளலாம்” என்று அன்போடு கூறியது தாய்க் கரடி.
“அம்மா, இது யாரு?” என்று கேட்டபடி கரடிக் குட்டிகள் ஓடிவந்தன.
“இவன் உங்க தம்பி. இனிமேல் இங்கதான் இருப்பான். ஒற்றுமையா இருக்கணும், சரியா?” என்றது தாய்க் கரடி.
மாதங்கள் சென்றன. ஆனால் குரங்குக் குட்டியைத் தேடி யாரும் வரவில்லை. பெரியவனாகும்வரை இங்கேயே இருக்கட்டும் என்று முடிவு செய்தது தாய்க் கரடி.
ஒருநாள் குட்டிகளை அழைத்து, “இன்று என்னோடு உணவு தேடுவதற்கு நீங்களும் வர வேண்டும்” என்றது தாய்க் கரடி.
“நீங்கள் கொடுக்கும் உணவே போதும்மா. நான் வர மாட்டேன்” என்றது குரங்குக் குட்டி.
”வளரும் வரைதான் அம்மா உணவு கொடுக்க வேண்டும். வளர்ந்த பிறகு நீங்களே உணவு தேடுவதுதான் நல்லது. அதுதான் இயற்கை. உணவளிப்பது மட்டுமல்ல ஒரு தாயின் கடமை, உணவு தேடக் கற்றுக் கொடுப்பதும்தான்.”
குட்டிகள் ஆர்வத்தோடு அம்மாவுடன் கிளம்பின. கரடிக் குட்டிகளுக்குத் தனியாகவும் குரங்குக் குட்டிக்குத் தனியாகவும் உணவு தேடும் பயிற்சியை அளித்தது தாய்க் கரடி.
மறுவாரம் ஆற்றில் மீன்களைப் பிடித்துக்கொண்டு, குகைக்குத் திரும்பியது தாய்க் கரடி. குட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் அமைதியாக அமர்ந்திருந்தன.
“கண்மணிகளே, ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்? மீன்களைச் சாப்பிடலாம் வாருங்கள். குரங்குக் குட்டியே உனக்கு செவ்வாழைப் பழம் கொண்டு வந்திருக்கேன் பாரு” என்று அன்போடு அழைத்தது தாய்க் கரடி.
“அம்மா, தேனடைகளைக் குரங்கு தம்பி மட்டும் சாப்பிடப் பார்த்தான். அண்ணன் எங்களுக்கும் வேண்டும் என்று சொன்னவுடன் குரங்குக்குக் கோபம் வந்துவிட்டது. உடனே அண்ணனை அடித்துவிட்டான். நீங்களே பாருங்கள், அடித்ததில் அண்ணனின் கன்னம் வீங்கிவிட்டது” என்றது ஒரு கரடிக் குட்டி.
’ஐயோ… குட்டிகளுக்குப் பேதம் பார்க்கும் பருவம் வந்துவிட்டது. இனிமேல் குரங்கு எங்களோடு இருப்பது இருவருக்குமே நல்லதல்ல’ என்று நினைத்த தாய்க் கரடி, ”இதற்கெல்லாமா சண்டையிடுவது? சாப்பிட்டுத் தூங்குங்கள். காலையில் பேசிக்கொள்ளலாம்” என்று சமாதானமாகக் கூறியது.
மறுநாள் காலை குட்டிகள் கண் விழிப்பதற்குள், குரங்கை அழைத்துக்கொண்டு கிளம்பியது தாய்க் கரடி.
“குரங்குக் குட்டியே, இப்போது நீ தனியாக வசிக்கும் நிலைக்கு வந்துவிட்டாய். இனிமேலும் நாம் சேர்ந்து வாழ்வது நல்லதல்ல. நீ தனியாக வசிக்கும் அளவுக்கு உனக்குப் போதிய பயிற்சி அளித்துவிட்டேன். இந்த மலையடிவாரத்தில் உன் இனத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்துகொள். நேரம் கிடைக்கும்போது உன்னைப் பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டு, குகையை நோக்கித் திரும்பியது தாய்க் கரடி.
- எஸ். அபிநயா, 9-ம் வகுப்பு, தேவனாங்குறிச்சி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT