Published : 30 May 2018 10:53 AM
Last Updated : 30 May 2018 10:53 AM

டிங்குவிடம் கேளுங்கள்: விஷத் தவளைகள் உண்டா?

மீண்டும் பள்ளி செல்ல இருக்கும் எங்களுக்கு டிங்குவின் ஆலோசனையும் வாழ்த்தும் கிடைக்குமா?

- என். ராஜசேகர், 10-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, பெரியகுளம்.

என் வாழ்த்து உங்கள் எல்லோருக்கும் எப்போதும் உண்டு, ராஜசேகர். பள்ளி திறக்கப் போகிறது, நீண்ட காலம் பார்க்காத நண்பர்களை மீண்டும் பார்க்கப் போகும் ஆர்வம் இருக்கும். வகுப்பு, புத்தகங்கள், நோட்டுகள், ஆசிரியர்கள் என்று எல்லாமே புதிதாக அமைந்திருக்கும். மகிழ்ச்சியாக இந்த வருடத்தை ஆரம்பியுங்கள். நீங்கள் பத்தாம் வகுப்பு என்பதால் ஆரம்பத்திலிருந்தே பாடங்களில் கவனமாக இருங்கள்.

அன்றன்று நடத்தும் பாடங்களை அன்றன்றே படித்துவிடுங்கள். புரியாத விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். கடினமான விஷயங்களை எழுதிப் பார்த்துவிடுங்கள். பொழுதுபோக்கு விஷயங்களைக் குறைத்துக்கொண்டு, விளையாட்டில் கவனம் செலுத்துங்கள். உடல்நலனில் கவனமாக இருங்கள். வாழ்த்துகள்!

மழையில் நனைவது நல்லதா? காகிதக் கப்பல் விட்டது உண்டா, டிங்கு?

பா. சுபஸ்ரீ, எஸ்.ஆர்.வி. பள்ளி, சமயபுரம்.

மழையில் நனைவது நல்லதா, கெட்டதா என்று எப்படிச் சொல்ல முடியும்? உங்களுக்கு மழையில் நனையப் பிடிக்கும் என்றால், மழையில் நனைவதால் உடலுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்றால் நனையலாம். சளிப் பிடிக்கும், தலைவலி வரும், காய்ச்சல் வரும் என்பவர்கள் மழையில் நனைய வேண்டாம். மழையில் நனைவதைவிட உடல்நலம் முக்கியம். நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள், சுபஸ்ரீ.

காகிதத்தில் கப்பல் செய்து, மழை நீரில் விடாத குழந்தைப் பருவம் யாருக்காவது இருக்குமா? நம் ஊரில் எல்லோருக்கும் தெரிந்த ஒரே ஆரிகாமி இந்தக் காகிதக் கப்பல் செய்வதுதான்! விதவிதமான கப்பல்களைச் செய்து, போட்டிப் போட்டுக்கொண்டு பெருக்கெடுத்து ஓடும் நீரில் விட்டிருக்கிறோம்.

பவுர்ணமி அன்றுதான் சந்திர கிரகணம் ஏற்படும் என்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சந்திர கிரகணம் வருவதில்லையே ஏன், டிங்கு?

– ந. ஷ்ருதி, 8-ம் வகுப்பு, திருச்சி.

நீங்கள் சொல்வதுபோல் சந்திர கிரகணம் பவுர்ணமி அன்றுதான் ஏற்படும். ஆனால் சந்திரன், பூமி, சூரியன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் சந்திர கிரகணம் ஏற்படும். இப்படி ஒரே நேர்க்கோட்டில் மூன்றும் வரும்போது, சூரியனின் கதிர்களை நடுவில் இருக்கும் பூமி மறைத்துவிடுவதால், சந்திரன் மீது வெளிச்சம் விழுவதில்லை. இதனால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. மூன்றும் ஒரே நேர்கோட்டில் எப்போதாவது தான் வரும் என்பதால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை, ஷ்ருதி.

விஷத் தவளைகள் இருப்பதாகச் சொல்கிறான் என் நண்பன். அது உண்மையா? நம் நாட்டில் உண்டா, டிங்கு?

சி. ஸ்டீபன் பால், திருவள்ளூர்.

விஷத் தவளைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அவை நம் நாட்டில் இல்லை, ஸ்டீபன். தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் உள்ள மழைக்காடுகளில் மட்டுமே விஷத் தவளைகள் (Poison dart frog) வசிக்கின்றன. கண்கவர் வண்ணங்களுடன் அழகாகக் காட்சியளிக்கின்றன. நீலம், பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களில் கறுப்புப் புள்ளிகள் காணப்படுகின்றன. மிகவும் சிறியவை. எதிரியைக் கண்டதும் முதுகில் இருந்து விஷத்தைச் சுரக்கின்றன. இது கடுமையான விஷம் என்பதால் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. என்னிடம் விஷம் இருக்கிறது, எச்சரிக்கையாக இருங்கள் என்று தெரிவிக்கவே இந்தத் தவளைகளுக்கு கண்கவர் நிறங்கள். 220 வகை விஷத் தவளைகள் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x