Published : 09 May 2018 10:33 AM
Last Updated : 09 May 2018 10:33 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நொறுக்குத்தீனியை நிறுத்துவது எப்படி?

விடுமுறைக்காகச் சென்னை வந்திருக்கிறோம். இங்கே பழைய சோறு என்றால் என்னவென்று கேட்கிறார்கள். எங்கள் ஊரில் கோடை காலத்தில் பெரும்பாலும் பழைய சோறுதான் இரவில் சாப்பிடுவோம். நீயாவது பழைய சோறு சாப்பிட்டிருக்கியா, டிங்கு?

–என். வானதி, சிவகங்கை.

என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள் வானதி! பழைய சோறு சாப்பிடாதவர்கள் வாழ்க்கையில் முக்கியமான சுவையை இழந்தவர்களாகிறார்கள். எங்கள் ஊரிலும் இரவில் பெரும்பாலும் பழைய சோறுடன் பழைய குழம்பு, வடகம், வற்றல், ஊறுகாய் போன்றவற்றை வைத்து திருப்தியாகச் சாப்பிடுவார்கள். எனக்குப் பிடித்த உணவுகளில் பழைய சோறுக்கு முக்கியமான இடம் உண்டு. வெயில் காலத்தில் பழைய சோறு உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். எளிதில் ஜீரணம் ஆகும். சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் இரவில் டிபனுக்கு மாறிவிட்டார்கள். அதனால் இவர்களுக்குப் பழைய சோற்றின் அருமை தெரியவில்லை. ஒருமுறை சாப்பிடக் கொடுத்தால் பிறகு விட மாட்டார்கள்.

பிப்ரவரி மாதத்துக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் வருகின்றன, டிங்கு?

செ. உ. சஹானா, காஞ்சிபுரம்.

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வரும் காலமே ஓர் ஆண்டு. பூமியின் அச்சு சாய்வாகச் சுற்றுவதால் பருவ கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வானியல், பருவ காலம் ஆகியவற்றோடு ஆண்டை இணைத்து மாதங்களாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் பிப்ரவரிக்கு மட்டும் குறைவான நாட்கள் வருகிறது. ஓர் ஆண்டுக்கு 365 நாட்களாக இருக்கும்போது பிப்ரவரிக்கு 28 நாட்கள் வருகின்றன. லீஃப் ஆண்டில் 366 நாட்கள் வரும்போது பிப்ரவரிக்கு 29 நாட்கள் வருகின்றன, சஹானா. இது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். ஒருவர் லீஃப் ஆண்டில் பிப்ரவரி 29 அன்று பிறந்தால், அவருக்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பிறந்தநாள் வரும்!

நொறுக்குத்தீனி சாப்பிடுவது உடல் நலனுக்குக் கேடு என்று தெரிகிறது. ஆனாலும் அதைத்தான் மனம் விரும்புகிறது. நொறுக்குத்தீனியைக் கைவிட யோசனை சொல்ல முடிமா, டிங்கு?

– ஹ. நேஹா, 7-ம் வகுப்பு, எஸ். ஜே. எஸ். வி. சிபிஎஸ்இ பள்ளி, கோவை.

பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத்தீனிகளை என்றாவது ஒருநாள் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் தினமும் அவற்றைச் சாப்பிட்டால் வயிறுக்குக் கேடுதான். சட்டென்று ஒரு பழக்கத்தைக் கைவிடுவது சிரமம். அதனால் முதலில் வீட்டில் செய்யும் நொறுக்குத்தீனியை மட்டும் சாப்பிடுவேன் என்று முடிவு எடுங்கள். வீட்டில் எப்போதும் நொறுக்குத்தீனி செய்து வைக்க வாய்ப்பில்லை. பிறகு நொறுக்குத்தீனிக்குப் பதிலாகச் சத்து மாவு உருண்டை, கடலை மிட்டாய், பழங்கள் போன்றவற்றைச் சாப்பிட ஆரம்பியுங்கள். காலப்போக்கில் நொறுக்குத்தீனி பழக்கத்திலிருந்து வெளிவந்துவிடுவீர்கள், நேஹா.

சூரியன் இல்லாவிட்டால் பூமி என்னாகும், டிங்கு?

கே. அஜித் குமார், 9-ம் வகுப்பு, திருச்சி.

பூமி முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். குளிர் அதிகமாகும். தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாது. தாவரங்கள் மடிந்தால், தாவரங்களை நம்பி வாழும் உயிரினங்களுக்கும் உணவு கிடைக்காது. நீர்நிலைகள் எல்லாம் உறைந்துவிடும். விரைவில் வாழ இயலாதகோளாக பூமி மாறிவிடும். சூரியன் இல்லாவிட்டால் பூமியும் இல்லை. சூரியனே அனைத்துக்கும் வாழ்வாதாரம். சூரியன் இன்னும் 500 கோடி வருடங்கள்வரை இருக்கும். அதற்குப் பிறகு வெள்ளைக் குள்ளன், கறுப்புக் குள்ளன் போன்ற நிலைகளைக் கடந்து, பூமி போன்ற கோள்களை இழுத்துக்கொள்ளும். அதனால் சூரியன் இல்லாமல் பூமியோ மற்ற கிரகங்களோ இருக்க முடியாது, அஜித் குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x