Published : 10 Jul 2024 06:00 AM
Last Updated : 10 Jul 2024 06:00 AM

கதை: ஏடிஎம் தாத்தா

ஏடிஎம் வாசலில் கிடந்த குப்பைகளை எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டார் தாத்தா. மாநகரின் மையத்தில், அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகில் இருந்தது அந்த ஏடிஎம். அங்கே காவலுக்கு இருப்பவர்தான் அந்தத் தாத்தா. அவர் பெயர்கூட யாருக்கும் தெரியாது. ‘ஏடிஎம் தாத்தா’ என்றால்தான் தெரியும்.

தாத்தாவுக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்தில் ஒரு சிறிய நகரம். விவசாயம் செய்தவர். இப்போது காவலாளி வேலைக்கு வந்துவிட்டார். தாத்தா மிகவும் நேர்மையானவர். தெருமுனை வீட்டின் மொட்டை மாடி அறையில்தான் தங்கியுள்ளார். அவரே சமைத்துச் சாப்பிடுவார்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள குழந்தைகளுக்கு ஏடிஎம்தாத்தாவுடன் பேசுவதும் விளையாடு வதும்தான் பொழுது போக்கே. தாத்தாவும் வேலை நேரம் முடிந்தாலும் குழந்தைகளோடு விளையாடி விட்டே தான் தங்கி இருக்கும் அறைக்குச் செல்வார். ஒருநாள் ஆகாஷுக்கு உடல்நிலை சரியில்லை. பழங்கள் வாங்கிக்கொண்டு அவன் வீட்டுக்குச் சென்றார் தாத்தா.

ஆகாஷின் அம்மாவும் அப்பாவும் தாத்தாவை அன்போடு வரவேற்றனர்.

பழங்களை ஆகாஷிடம் கொடுத்து விட்டு, சிறிதுநேரம் பேசிவிட்டு வந்தார் தாத்தா. ஏதோ மேஜிக் போல அடுத்த நாளே ஆகாஷின் உடல்நிலை சரியாகிவிட்டது. அதற்கு அடுத்த நாள் பள்ளிக்கே சென்றுவிட்டான்.

அன்று சனிக்கிழமை. மாலை நேரம். ஏடிஎம் வாசலில் தாத்தாவைக் காணச் சிறார் கூட்டம் சென்றது. ஆனால், தாத்தாவின் முகம் சோர்ந்துகிடந்தது.

“என்னாச்சு தாத்தா?” என்று ஆகாஷ்தான் கேட்டான்.

“ஊர்ல என் பேத்திக்குப் பொறந்த நாள். போன் பண்ணி வாழ்த்தலாம்னா இதுல காசு இல்ல. ரீசார்ஜ் பண்ணலாம்னு போனா மூணு கடையும் பூட்டிக்கிடக்கு” என்று வருத்தமாகச் சொன்னார் தாத்தா.

“எங்க அப்பா போன் வழியாவே ரீசார்ஜ் பண்ணுவாரு. அவர் கிட்ட சொல்லிச் செய்யச் சொல்றேன் தாத்தா” என்றான் ஆகாஷ்.

“வேணாம்” என்று மறுத்துவிட்டார் தாத்தா.

இரவும் வந்துவிட்டது. ரீசார்ஜ் செய்யும் கடைகள் திறக்கவே இல்லை. பேத்தியின் நினைவாகவே இருந்தார் தாத்தா. அதனால் குழந்தைகளுடன் விளையாடக்கூட வரவில்லை.

இரவு உணவு உண்ணும் நேரம் வந்துவிட்டது. உணவு எடுத்து வந்திருந்தார். ஆனால், சாப்பிட விருப்பம் இல்லை. பேத்திக்கு எப்படியாவது வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டார் தாத்தா. யாரிடமும் உதவி கேட்க அவர் மனம் இடம்கொடுக்கவில்லை.

இரவு மணி 12.02. அவரின் மொபைல் போனில் அழைப்பு வந்தது. அவர் மகனின் எண். உடனே எடுத்துப் பேசினார்.

“தாத்தா, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என்று பேத்தி சொல்வதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் குழம்பினார் தாத்தா.

“எதுக்கும்மா?”

“எனக்காக அழகான கேக் வாங்கி அனுப்பியதுக்கு” என்றாள் பேத்தி.

இன்னும் குழம்பிப் போனார் தாத்தா. பேசிக்கொண்டிருக்கும் போதே இணைப்புதுண்டிக்கப்பட்டது.

திடீரென்று அடுக்குமாடிக் குடியிருப்பின் குழந்தைகள் ஓடிவந்தனர்.

ஆகாஷின் கையில் இருந்த மொபைல் போனில், “தாத்தா, உங்க பேத்தியைப் பாருங்க” என்று காட்ட, அதில் பேத்தி கேக் வெட்டக் காத்திருந்தாள். தாத்தா பார்க்க, கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடினாள் பேத்தி.

எல்லாரும் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைப் பாடினர். தாத்தாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அனைவரும் வீட்டுக்குப் புறப்படும் போது, ஆகாஷைப் பிடித்து இழுத்தார் தாத்தா.

“நீங்க சோகமா இருந்தா எங்களுக்கு வருத்தமா இருக்கும்ல. அதான் எங்களோட பாக்கெட் மணியில், எங்க அப்பா மூலம் உங்க பேத்திக்கு ஆன்லைன்ல கேக் ஆர்டர் போட்டோம்” என்றான் ஆகாஷ்.

கலைந்திருந்த ஆகாஷின் தலைமுடியைச் சரிசெய்து, முத்தம் கொடுத்தார் தாத்தா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x