Last Updated : 30 May, 2018 10:56 AM

 

Published : 30 May 2018 10:56 AM
Last Updated : 30 May 2018 10:56 AM

உடல் எனும் இயந்திரம் 25: உடலில் பாயும் நதி

டலில் ஓடும் ரத்தக்குழாய்களை நிலத்தில் பாயும் நதிக்கு ஒப்பிடலாம். எப்படி நதியானது ஏரியாக, குளமாக, சிறு ஓடையாகப் பிரிந்து, தான் ஓடும் இடங்களில் எல்லாம் நீரைப் பாய்ச்சி, நிலத்தை வளப்படுத்துகிறது. அதுபோல நம் உடலில் ஓடும் ரத்தக்குழாய்களும் தாம் செல்லும் உறுப்புகளுக்கு எல்லாம் ரத்தம் கொடுத்து, அவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.

ரத்தம் பாயும் பாதைகள்தான் ரத்தக்குழாய்கள். மனிதருக்கு ரத்தக்குழாய்களின் மொத்த நீளம் சுமார் 1,60,000 கி.மீ. ரத்தக்குழாயால் தனித்து இயங்க முடியாது. இதயம், நுரையீரல்கள், ரத்தம் ஆகியவற்றுடன் இணைந்து ரத்தச் சுற்றோட்டத்தை (Circulatory System) உருவாக்கி, அதன் மூலமே இயங்குகிறது. மனிதன் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கு நுரையீரல் சுற்றோட்டம் (Pulmonary circulation), மண்டலச் சுற்றோட்டம் (Systemic circulation) என இரட்டைச் சுற்றோட்டங்கள் உள்ளன. மீன் போன்ற நீர் வாழினங்களுக்கு ஒற்றைச் சுற்றோட்டம் மட்டுமே உள்ளது. சில வகைப் புழுக்களுக்கு ரத்தக்குழாய்களே இல்லை.

நுரையீரல் சுற்றோட்டத்தில் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. வலது இதயத்திலிருந்து அசுத்த ரத்தம் இரண்டு நுரையீரல் தமனிகள் (Pulmonary arteries) வழியாக நுரையீரல்களுக்குச் சென்று, சுத்திகரிக்கப்பட்டு, சுத்த ரத்தமாக மாறி, நான்கு நுரையீரல் சிரைகள் (Pulmonary veins) வழியாக மீண்டும் இடது இதயத்துக்கு வந்து சேர்கிறது.

மண்டலச் சுற்றோட்டத்தில் உணவுப் பகிர்தலும் கழிவு அகற்றலும் நிகழ்கின்றன. இடது இதயத்தில் தொடங்கும் ரத்தக்குழாய் சுத்த ரத்தத்தைச் சுமந்து கொண்டு, நுரையீரல் நீங்கலாக, உடல் முழுவதும் கொடுத்துவிட்டு, அங்கிருந்து அசுத்தத்தைக் கொண்டுவந்து, வலது இதயத்துக்குத் தருகிறது. இந்தப் பயணத்தின்போது தன்னிடமுள்ள சில கழிவுகளை, நுரையீரல், சிறுநீரகம், தோல் வழியாகவும் வெளியேற்றுகிறது. இதனால்தான் உடல் எப்போதும் சீராக இயங்க முடிகிறது.

ரத்தக்குழாயானது தமனி (Artery), சிரை (Vein), தந்துகிகள் (Capillaries) என மூன்று பிரிவுகளில் அமைந்துள்ளது. ‘ஆக்ஸிஜன் மிகுந்த சுத்த ரத்தத்தை எடுத்துச் செல்வது தமனிகள். விதிவிலக்காக, நுரையீரல் தமனிகள் மட்டும் கார்பன் - டை – ஆக்ஸைடு மிகுந்த அசுத்த ரத்தத்தைச் சுமக்கின்றன.

தமனிக் குழாய் உள்ளிருந்து வெளிப் பக்கமாக உள்பாளம் (Tunica intima), நடுப்பாளம் (Tunica media), வெளிப்பாளம் (Tunica adventitia) என மூன்றடுக்குச் சுவர்களால் ஆனது. நடுப்பாளத்தில் மீள்திசுக்கள் (Elastic tissues) அதிகம். இதன் பலனாக, தமனிகளுக்கு மீள்தன்மை (Elasticity) கிடைக்கிறது. தமனிகளின் சிறப்பு இந்த மீள்தன்மையில்தான் உள்ளது. இதயத்திலிருந்து வெளிவரும் அழுத்தம் மிகுந்த ரத்தம் தமனிகளைப் பாதிக்காமலிருக்க, இந்த மீள்தன்மை தேவைப்படுகிறது. தமனிகளில் வால்வுகள் இல்லை. எனவே, இதயம் தரும் விசையில் தமனியில் பாய்கிற ரத்தம் எவ்விதத் தடையுமின்றி, உறுப்புகளுக்குள் சென்றடைகிறது. தமனிகளில் ரத்தம் பாய்வதைப் பரிசோதிப்பதுதான் ‘நாடி’ (Pulse) பார்ப்பது.

shutterstock_468603398

சராசரியாக ஒரு தமனியின் தடிமன் 1 மி.மீ., உள்விட்டம் 4 மி.மீ.. இடது இதயத்தில் கிளம்பும் மகாதமனிதான் (Aorta) உடலிலேயே மிகப் பெரிய ரத்தக் குழாய். இதன் தடிமன் 2 மி.மீ., உள்விட்டம் 2.5 செ.மீ. இது உடலுக்குள் செல்லும்போது, கழுத்து, மூளை, கைகள், நெஞ்சு, வயிறு, கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், இடுப்பு, கால்களுக்கு என்று தனித்தனி குறுந்தமனிகளாகப் பிரிகிறது. இப்படி ஒவ்வோர் உறுப்பிலும் நுழையும் குறுந்தமனிகள் நூலிழைபோல் மெலிந்து நுண்தமனிகளாகிப் (Arterioles) பின்னர் தந்துகி வலைப்பின்னல்களாகக் கிளைவிட்டு, திசுக்களுக்கு இடையில் ஊடுருவுகின்றன.

ரத்தத்தில் வரும் உணவுச் சத்துகள், ஆக்ஸிஜன், ஹார்மோன்கள் முதலியவை தந்துகிகளின் மெல்லியச் சுவர்கள் வழியாகக் கசிந்து உடல் செல்களுக்குச் செல்கின்றன; அப்போது அங்கு சேர்ந்திருக்கும் கார்பன் - டை – ஆக்ஸைடு, உப்பு போன்ற கழிவுகளைத் தந்துகிகள் பெற்றுக்கொள்கின்றன. சுத்த ரத்தம் அசுத்த ரத்தமாவது இப்படித்தான்.

சிரை என்பது அசுத்த ரத்தத்தை இதயத்துக்கு எடுத்துச் செல்லும் ரத்தக்குழாய். விதிவிலக்காக, நுரையீரல் சிரைகள் (Pulmonary veins) மட்டும் சுத்த ரத்தத்தை இதயத்துக்குக் கொண்டு வருகின்றன. சிரைகளுக்கும் மூன்றடுக்குச் சுவர் உண்டு. ஆனால், நடுப்பாளத்தில் திசுக்களின் கனம் குறைவு என்பதால், தமனியைவிட சிரைக்குழாய் மிக மெல்லியது. ஒரு சிரையின் தடிமன் 0.5 மி.மீ., உள்விட்டம் 5 மி.மீ.

தமனிச் சுற்றும் சிரைச் சுற்றும் சந்திக்கிற இடம்தான் தந்துகிகள். பல தந்துகிகள் இணைந்து, நூலிழைகள் போன்ற நுண்சிரைகளைத் (Venules) தோற்றுவிக்கின்றன. நுண்சிரைகள் ஒன்றிணைந்து சிரைகளை உருவாக்குகின்றன. தந்துகிகளின் அசுத்த ரத்தம், நுண்சிரை, சிரை எனும் பாதையில் பயணித்து, இறுதியில் பெருஞ்சிரைகளை (Vena cava) அடைகிறது. தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றில் உள்ள சிரைக்குழாய்கள் இணைந்து மேற்பெருஞ்சிரையாகவும் (Superior vena cava), இதயத்துக்குக் கீழே உள்ள சிரைகள் இணைந்து கீழ்ப்பெருஞ்சிரையாகவும் (Inferior vena cava) உருவெடுத்து, வலது இதயத்துக்கு வருகின்றன. உடலில் உள்ள சிரைக்குழாய்களில் மிகப் பெரியவை இவை இரண்டும்தான்.

சிரைகளின் சிறப்புத் தன்மை வால்வுகளைக் கொண்டிருப்பது. இவை இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்வதால், புவிஈர்ப்பு விசை காரணமாக, ரத்தம் பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்கவும், இதயத்தை நோக்கி ஒரே திசையில் செல்லவும் வால்வுகள் பயன்படுகின்றன. விதிவிலக்காக மூளை, நெஞ்சு, வயிறு ஆகிய இடங்களில் சிரைகளுக்கு வால்வுகள் இல்லை. இவற்றில் மீள்திசுக்களும் இல்லை என்பதால் மீள்தன்மையும் இல்லை. இவை சுயமாகவும் இயங்க முடியாது; சுற்றியுள்ள தசைகளின் இயக்கத்தால்தான் சிரைகளின் வழியே ரத்தம் செல்கிறது.

உடலிலுள்ள தமனிகளில் மிக முக்கியமானவை இதயத் தமனிகள் (Coronary arteries). இவை மகாதமனியின் கிளைகள். இவை இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கின்றன. கொழுப்புப் பொருளாலோ, ரத்தக்கட்டியாலோ இவை அடைத்துக்கொள்ளும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதுபோல் மூளைக்கு ரத்தம் கொடுப்பது பெருமூளைத் தமனிகள் (Cerebral arteries). இவை பாதிக்கப்படும்போது, பக்கவாதம் (Stroke) உண்டாகிறது.

(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x