Published : 02 May 2018 11:53 AM
Last Updated : 02 May 2018 11:53 AM
க
ருவிழிக்குப் பின்னால் சிறிய மாத்திரை அளவில் ‘விழியாடி’ (Lens) உள்ளது. பார்வைப் புலன் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பது இதுதான். விழியாடியை ‘சிலியரி பாடி’ (Ciliary body) எனும் தசைப் பகுதி மேலும் கீழும் தாங்கிப் பிடித்துள்ளது. ‘பிணைய நார்கள்’ (Suspensory ligaments) சிலியரி பாடியை விழியாடியோடு இணைக்கின்றன.
சிலியரி பாடி தண்ணீர் போன்ற திரவத்தைச் சுரக்கிறது. இதற்கு 'முன்கண் திரவம்' (Aqueous humor) என்று பெயர். இது விழியாடிக்கும் கார்னியாவுக்கும் நடுவில் பரவியுள்ளது. கார்னியா, விழிப்பாவை, விழியாடி உள்ளிட்டப் பகுதிகளுக்குத் தேவையான உணவுச்சத்துகளை விநியோகிக்கவும், கண்ணுக்குள் உருவாகும் கழிவுகளை அகற்றவும் இது தேவைப்படுகிறது.
விழியாடிக்குப் பல சிறப்புத் தன்மைகள் உண்டு. இது ஜெல்லி போன்ற புரதப் பொருளால் ஆனது. இது ஓர் இரட்டைக் குவியாடி (Biconvex). தனக்குள் வரும் ஒளிக்கதிர்களைப் பிம்பங்களாக மாற்றி விழித்திரையில் விழச் செய்கிறது. கார்னியாவைப்போல் இதிலும் ரத்தக்குழாய்கள் இல்லை. எனவே, இதன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்வது எளிதாகிறது. உள்ளுக்குள் நுழையும் ஒளிக்கு ஏற்பவும், பார்க்கும் பொருளின் தூரத்துக்கு ஏற்பவும் விழியாடி தட்டையாகி, தன் நீள அகலங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. இந்தச் செயலுக்குப் ‘பார்வைத் தகவமைப்பு’ (Accommodation) என்று பெயர். சிலியரி பாடி தசைகள் (Ciliary muscles) பார்வைத் தகவமைப்புக்கு உதவுகின்றன. இந்தச் செயலால்தான் அருகில் இருக்கும் புத்தகத்தையும் படிக்க முடிகிறது; தூரத்தில் பறக்கும் பறவையையும் பார்க்க முடிகிறது.
விழியாடிக்குப் பின்னால், விழிக்கோளத்தின் உட்புறத்தில் வெங்காயச் சருகுபோல் விழித்திரை (Retina) உள்ளது; பத்து படலங்களால் ஆனது. மிக நுண்ணிய பிம்பத்தையும் உணரக்கூடிய திறனுள்ளது. இங்கு குச்சிகள் (Rods), கூம்புகள் (Cones) என இருவகை ஒளி ஏற்பிகள் (Photoreceptors) உள்ளன. மொத்தம் 12 கோடி குச்சிகள், 60 லட்சம் கூம்புகள். இவை விழித்திரையில் விழும் பிம்பங்களை உறிஞ்சி, மின்தூண்டல்களாக மாற்றி பார்வை கிடைக்க உதவுகின்றன. குச்சிகள், இருட்டிலும் குறைந்த வெளிச்சத்திலும் பார்வை தருகின்றன. கூம்புகள், நாம் பார்க்கும் பொருட்களின் நிறங்களைத் தெரிவிக்கின்றன; பகலில் பார்வை தருகின்றன.
விழித்திரையின் மையப்பகுதி, ஒளிக்குவியம் (Macula). இது மஞ்சள் நிறத்தில் இருப்பதால், 'மஞ்சள் புள்ளி' (Yellow spot) என்றும் இதை அழைப்பதுண்டு. இங்கு 'ஃபோவியா' (Fovea) எனும் குழி உள்ளது. இங்குதான் கூம்புகள் மிகவும் அடர்த்தியாக உள்ளன. இதனால் இது பகலில் பார்வையைத் துல்லியமாக உணரச் செய்கிறது; நிறங்களையும் அறியச் செய்கிறது. புத்தகம் வாசிப்பது, வாகனம் ஓட்டுவது, ஊசியில் நூல் கோப்பது, கணினியில் பணி செய்வது போன்ற நுட்பமான பணிகளைச் செய்வதற்கு இதுதான் உதவுகிறது.
விழித்திரையில் ஒளிக்குவியத்துக்குக் கீழே 'விழிவட்டு' (Optic disc) உள்ளது. இதைக் 'குருட்டுப் புள்ளி' (Blind spot) என்றும் அழைக்கின்றனர். விழித்திரையில் ஒளி ஏற்பிகள் இல்லாத பகுதி இது என்பதால், ஒளியை இங்கு உணர இயலாது. விழிவட்டிலிருந்து ஒரு கண் நரம்பு (Optic nerve) கிளம்பி, மூளையில் இணைகிறது. விழியாடிக்கும் விழித்திரைக்கும் நடுவில் முட்டையின் வெள்ளைக்கருபோல் கொழகொழப்பான திரவம் ‘பின்கண் திரவம்’ (Vitreous humor) சுரக்கிறது. இது கண்ணின் கோள அமைப்பைக் கட்டமைக்கிறது.
பார்வை கிடைப்பது எப்படி?
பார்க்கிற பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் கார்னியாவைத் துளைத்து, விழிப்பாவை வழியாக விழியாடி மீது விழுகின்றன. இது குவியாடி என்பதால், ஒளிக்கதிர்களைக் குவித்து விழித்திரையில் விழச் செய்கிறது. அப்போது அங்கு தலைகீழ் பிம்பம் உண்டாகிறது. விழித்திரையில் உள்ள ஒளி ஏற்பிகள் பிம்பத்தின் வடிவம், நிறம், ஒளிக்கதிரின் அடர்த்தி போன்ற பல செய்திகளைச் சேகரித்து, மின்தூண்டல்களாக மாற்றி, பார்வை நரம்பு வழியாக மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் மூளைக்குக் கடத்துகின்றன. அங்கு அந்தக் காட்சி பகுக்கப்பட்டு, நாம் பார்க்கும் பொருள் எது என்பதை மூளை தெரிவிக்கிறது. இதற்கு மூளை எடுத்துக்கொள்ளும் நேரம் 0.15 விநாடி மட்டுமே!
கண்ணின் அமைப்பைப் பழைய காலத்து கேமராவுடன் ஒப்பிடுவது வழக்கம். என்ன காரணம்? கேமராவில் ஒரு குவியாடி உள்ளதுபோல், கண்ணில் விழியாடி உள்ளது. கேமராவில் பிம்பம் விழுவதற்கு ஃபிலிம் உள்ளதுபோல், கண்ணில் விழித்திரை உள்ளது. கேமராவில் ஒளிக்கதிர்கள் நுழைய ஒரு ‘துளைவெளி’ (Aperture) உள்ளதுபோல, கண்ணில் விழிப்பாவை உள்ளது. கேமராவில் பிம்பம் தலைகீழாகவே விழுகிறது. நம் கண்ணிலும் அப்படியே!
கண்ணில்லாத உயிரினம், புழு. பொதுவாக, இரை மேயும் விலங்குகளுக்குக் கண்கள் பக்கவாட்டில் இருக்கின்றன. ஆந்தைக்கும் சில காட்டு விலங்குகளுக்கும் இருட்டில் நம்மைவிடப் பார்க்கும் சக்தி அதிகம். கழுகு 4 கி.மீ. தொலைவில் இருக்கும் தன் இரையைத் தெரிந்துகொள்ளும் சக்தி படைத்தது.
நிறங்களைப் பிரித்துப் பார்க்கும் சக்தி நமக்கும் வண்ணத்துப்பூச்சிக்கும், சில பறவைகளுக்கு மட்டுமே கிடைத்திருக்கும் வரம். மற்ற உயிரினங்கள் கறுப்பு – வெள்ளையில்தான் பார்க்கின்றன. பூனையின் கருவிழி இடது பக்கம் ஒரு நிறத்திலும் வலது பக்கம் வேறு நிறத்திலும் இருக்கும். ஒட்டகம் போன்ற சில விலங்குகளுக்கும் பெரும்பாலான பறவைகளுக்கும் மூன்று இமைகள் இருக்கின்றன. மூன்றாவது இமைக்கு ‘நிக்டிடேடிங் மெம்பரேன்’ (Nictitating membrane) என்று பெயர்.
ஆந்தை போன்ற பறவைகளுக்கும் பூனை போன்ற விலங்குகளுக்கும் கண்ணில் விழியாடிக்குப் பின்புறம் ஒளியைப் பிரதிபலிக்கும் படலம் ஒன்று இருக்கிறது. இதனால்தான் அவற்றின் கண்கள் இருட்டில் ஒளிர்கின்றன.
(இன்னும் அறிவோம்)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT