Last Updated : 09 May, 2018 10:39 AM

 

Published : 09 May 2018 10:39 AM
Last Updated : 09 May 2018 10:39 AM

உடல் எனும் இயந்திரம் 22: நோய் காட்டும் கண்ணாடி

விரலுக்கு ஒரு கவசம்போல் அமைந்துள்ளது நகம். இது ‘கெரட்டின்’ (Keratin) எனும் புரதப்பொருளால் ஆனது. பளிச்சென்று தெரியும் வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம். இதற்குள் நரம்புகளோ, ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது. இது நகத் தளம் (Nail bed). நகத்துக்கு உணவும் உணர்வும் உயிரும் தருகிற ஓர் உயிர்ப் படுக்கை இது.

விரலில் தோலும் நகமும் இணையும் இடத்துக்குக் கீழே மறைந்திருப்பது நக வேர் (Nail bud). இதுதான் நகத்தை முளைக்க வைக்கிறது. இந்த இடத்தில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் உள்ளன. இதனால், இந்தப் பகுதியை அழுத்தினாலே வலிக்கும். இங்குள்ள செல்கள் வளரும்போது, பழைய செல்கள் முன்னால் தள்ளப்படுகின்றன. இந்தச் செல்கள் நகத்தளத்தைக் கடந்து வளரும்போது, அவற்றுக்கு ஊட்டச்சத்து வழங்கும் நகத்தளத்தின் தொடர்பை இழந்துவிடுவதால், வெள்ளையாக மாறுகின்றன. இந்தப் பகுதியில் ரத்தக்குழாய்களும் இல்லை; நரம்புகளும் இல்லை என்பதால், இந்தப் பகுதி இறந்துவிடும். இதனால்தான் நுனி நகத்தை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.

அடுத்ததாக, நகத்தைச் சுற்றி ‘U’ வடிவத் தோல் அமைப்பு (Nail fold) உள்ளது. நகத்தின் அடியில் காணப்படும் பிறை போன்ற அமைப்பு ‘லுனுலா’ (Lunula). நகத்துடன் இணைந்த தோல் பகுதி ‘எபோநைகியம்’ (Eponychium). நகத்தைச் சுற்றியுள்ள உள்தோல், ‘பெரியோநைகியம்’ (Perionychium). நகத்தைச் சுற்றியுள்ள மேல்தோலுக்குக் ‘கியூட்டிக்கிள்’ (Cuticle) என்று பெயர். இந்த அமைப்புகள் அனைத்தும் கைவிரலுக்கும் கால் விரலுக்கும் பொதுவாகவே இருக்கின்றன.

ஒரு நகம் முழுதாக வளர்வதற்கு நான்கிலிருந்து எட்டு மாதங்கள்வரை எடுத்துக்கொள்ளும். கால் விரல் நகங்களைவிட கை விரல் நகங்கள் வேகமாக வளரும். அதிலும் கோடை காலத்தில் மிகவும் வேகமாக வளரும். கைவிரல் நகம் மாதத்துக்கு சுமார் இரண்டு மி.மீ. வளரும். கால் விரல் நகம் மாதத்துக்கு ஒரு மி.மீ.வரை வளரும். முப்பது வயதுவரை நகத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கும். அதற்குப் பிறகு குறைந்துவிடும். தொடர்ந்து நோய்வாய்ப்பட்டிருப்பது, சத்துக் குறைபாடு, சில வகை மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிடுவது, முதுமை போன்ற காரணங்களால் நகத்தின் வளர்ச்சி குறையலாம். நகத்தின் வேலை என்ன என்று கேட்டால், நாம் அதிகமாகப் பயன்படுத்தும் விரல்களின் முனைகளைப் பாதுகாப்பது. அத்தோடு சிறிய பொருள்களை எடுக்கவும், துருவிப் பார்க்கவும் நகங்கள் பயன்படுகின்றன.

‘பளிங்குபோல கெடுத்ததைக் காட்டும் நகம்’ என்று சொல்லும் அளவுக்கு நகம் ஒரு நோய் காட்டும் கண்ணாடி. ஐம்பதுக்கும் மேற்பட்ட நோய்களை இது நமக்குக் காட்டிக்கொடுத்து விடும்.

சிலர் நகத்தை வெட்டுகிறேன் என்று நகத்தை ஒட்ட வெட்டிவிடுவார்கள். இன்னும் சிலர் நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருப்பார்கள். இதுபோன்று செய்வதால், நகத்தில் பாக்டீரியா நுண்கிருமிகள் நுழைந்து புண்ணாக்கிவிடும். இதுதான் நகச்சுத்தி (Paronychia). நகத்தை நகவெட்டியால் வெட்டினால், நகத்துக்கு வரும் பல ஆபத்துகளைத் தவிர்த்துவிடலாம்.

நகம் சொத்தை ஆகிறதே, ஏன்?

நகத்தின் அழகைக் கெடுக்கும் நோய் நகப்படை அல்லது நகச் சொத்தை (Fungal Nail). டிரைக்கோபைட்டன் ரூப்ரம் (Trichophyton rubrum) எனும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படும் இந்த நோய், கை விரல்களைவிட கால் விரல்களையே அதிகமாகப் பாதிக்கும். குறிப்பாக, தண்ணீரிலேயே விரல்கள் ஊறிக்கொண்டிருந்தால், இந்த நோய் வரும் சாத்தியம் அதிகம்.

கைவிரல் நகங்கள் வெள்ளை நிறத்தில் ஸ்பூன்போல குழிவிழுந்து (Koilonychia) தோன்றும். இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தசோகை ஏற்படுமானால், இதுபோன்று நகங்கள் காணப்படும். கைவிரல் நகங்கள் கிளிமூக்கு’ போல வீங்கிக்கொள்வதும் உண்டு. இதை ‘கிளப்பிங் நெய்ல்ஸ்’ (Clubbing nails) என்று சொல்கிறார்கள். இதயக் கோளாறு, நுரையீரல் கோளாறு, குடல் நோய், கல்லீரல் நோய், பிறவிக் கோளாறு, இதயஉறை அழற்சி நோய், புற்றுநோய், செரிமானக் கோளாறு ஆகிய உடலில் மறைந்திருக்கும் எட்டு நோய்களை வெளிக்காட்டும் ஒரு முக்கியமான அறிகுறி இது.

நகத்தின் மேல் பகுதி வழக்கமான நிறத்திலோ அல்லது வெள்ளையாகவோ இருந்து, கீழ்ப்பகுதி மாநிறத்தில் இருக்குமானால் அது சிறுநீரக நோய் இருப்பதை வெளிக்காட்டும் அறிகுறி. நகம் நீல நிறத்துக்கு மாறியிருந்தால், அது ரத்த ஓட்டம் சரியில்லை என்பதைக் காட்டுகிறது.

குழந்தைகளுக்கு இதயத்தில் பிரச்சினை இருந்தால், நகங்கள் நீல நிறத்தில் தோன்றும். நகம் முழுவதுமே மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலைக்கான அறிகுறி. உடலில் கால்சியம், வைட்டமின், புரதம், இரும்புச்சத்து போன்ற சத்துகள் குறைந்தால், நகத்தின் குறுக்கே அழுத்தமான வெள்ளைக்கோடுகளோ வெள்ளைப் புள்ளிகளோ தோன்றுவதுண்டு.

விலங்குகளின் கொம்புகளும் பறவைகளின் அலகுகளும் நம் நகத்தைப் போன்று வளர்பவைதான். பிற உயிரினங்களைக் கொன்று தின்னும் கழுகு போன்ற பறவைகளின் கால் பாதங்களில் மிக நீண்ட கூர்மையான நகங்கள் (Talons) இருக்கும். விலங்குகளில் மான் கொம்பு மட்டும் சற்றே வித்தியாசமாக வளர்ந்திருக்கும். ஆடு, மாடு, குதிரை, ஒட்டகம் முதலிய விலங்குகளுக்குக் குளம்பு (Hoofs) எனப்படும் காலின் அடிப்பகுதி நகங்களைப்போல் கடினத் தன்மையுடன் இருக்கும்.

(இன்னும் அறிவோம்)

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x