Published : 19 Jun 2024 05:55 AM
Last Updated : 19 Jun 2024 05:55 AM
எல்லாப் பறவைகளுக்கும் கூடு இருக்குமா, டிங்கு? - ர. தக்ஷணா, 6-ம் வகுப்பு, செண்பகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி.
எல்லாப் பறவைகளும் கூடு கட்டுமா என்று கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். முட்டை இடவும் குஞ்சுகளை வளர்க்கவும் பறவைகளுக்குப் பாதுகாப்பான இடம் தேவை. அதற்காகவே கூடுகளைக் கட்டுகின்றன. சில பறவைகள் நேர்த்தியாகக் கூடுகளைக் கட்டுகின்றன. சில பறவைகள் எதிரியின் கண்களுக்கு எளிதாகப் புலப்படாத வண்ணம் எளிய கூடுகளை உருவாக்குகின்றன. மேலும் சில பறவைகள் மரப் பொந்து, கட்டிடங்களின் விரிசல் போன்றவற்றை முட்டையிடவும் குஞ்சுகளை வளர்க்கவும் பயன்படுத்துகின்றன. சில பறவைகள் ஆண்டுக்கு 4, 5 கூடுகளை உருவாக்குவது உண்டு.
சில பறவைகள் பிற பறவைகள் கைவிட்ட பழைய கூடுகளைப் பயன்படுத்திக்கொள்கின்றன. குயில் போன்ற சில பறவைகள் காகம் போன்ற பறவைகளின் கூடுகளில் முட்டைகளை இட்டுவிடுகின்றன. இன்னும் சில பறவைகள் கூடு கட்டிய பறவைகளை விரட்டிவிட்டு, அந்தக் கூடுகளைப் பயன்படுத்திக்கொள்வதும் உண்டு. சில பறவைகள் தரையிலோ உயரமான தட்டையான பரப்பிலோ முட்டைகளை இடுகின்றன, தக்ஷணா.
நீண்ட நேரம் தண்ணீரில் கைகளை வைத்தால் தோல் சுருங்குவது ஏன், டிங்கு? - சு. பிரார்த்தனா, 2-ம் வகுப்பு, ஏ.எம்.டி. ஜெயின் பப்ளிக் பள்ளி, மாதவரம், சென்னை.
கைகளும் கால்களும் கடினமான வேலைகளைச் செய்யக்கூடியவை. அதனால் கை, கால்களைப் பாதுகாப்பதற்காகத் தோலில் சீபம் என்கிற எண்ணெய் சுரக்கிறது. சாதாரணமாகத் தண்ணீரில் கைகளை வைத்து வேலை செய்யும்போது சீபம் சுரந்து, தோலுக்குள் தண்ணீர் செல்லாமல் பாதுகாத்துவிடுகிறது. அதிக நேரம் தண்ணீரில் கைகள் இருக்கும்போது, அந்த அளவுக்கு சீபம் சுரக்காது. அதனால், தண்ணீர் தோலுக்குள் நுழைந்துவிடுகிறது.
கை, கால்களில் மேடு, பள்ளம் தோன்றிவிடுகிறது. தண்ணீரைவிட்டு விரல்களை எடுத்த சிறிது நேரத்தில் தண்ணீர் வெளியேறி, மீண்டும் சீபம் சுரந்து விரல்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும், பிரார்த்தனா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT