Published : 22 May 2018 07:01 PM
Last Updated : 22 May 2018 07:01 PM
என் தாத்தாவின் பெயரை எனக்கு வைத்திருக்கிறார்கள். என் தங்கைக்கு, பாண்டியம்மாள் என்ற பாட்டியின் பெயருடன் ஸ்ரேயா என்ற பெயரையும் வைத்துவிட்டனர். அதனால் எல்லோரும் ஸ்ரேயா என்றே கூப்பிடுகிறார்கள். என்னை மட்டும் சுந்தரம் என்றே அழைக்கிறார்கள். தாத்தாவைப் பிடித்திருந்தாலும் எனக்கு இந்தப் பெயரைப் பிடிக்கவில்லை. பெயரை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார் என் அப்பா. பிடிக்காத பெயரை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது, டிங்கு?
– எஸ்.ஆர். சுந்தரம், பரமக்குடி.
நீங்கள் சொல்ல வருவது, உங்களுக்கு மட்டும் நவீனமான பெயர் வைக்கவில்லை என்பதுதானே, சுந்தரம்? பெயரில் என்ன இருக்கிறது? பெயர் என்பது அடையாளத்துக்குத்தான். சுந்தரம் என்று கூப்பிட்டால், நீங்கள் திரும்பிப் பார்க்க வேண்டும். உங்கள் வகுப்பில் இரண்டு சுந்தரம் இருந்தால், எஸ்.ஆர். சுந்தரம் என்று கூப்பிட்டால் நீங்கள் மட்டுமே திரும்பிப் பார்ப்பீர்கள். அவ்வளவுதான்.
இன்றைய நவீனப் பெயர்கள் பெரும்பாலும் வேறு பகுதிகளில் இருந்து வந்தவை. ஆனால் சுந்தரம் என்பது தமிழ்ப் பெயர். இதற்காக நீங்கள் உங்கள் பெற்றோருக்கு நன்றிதான் சொல்ல வேண்டும்.
சிலருடைய பெயர்கள் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை நான் மறுக்கவும் இல்லை. என்னுடன் வெவ்வேறு வகுப்புகளில் ’சின்னப் பொண்ணு’, ‘போதும் பொண்ணு’ என்று இருவர் படித்தனர். சின்னப் பொண்ணு எங்கள் வகுப்பிலேயே மிகப் பெரியவராக இருப்பார். அவரை அந்தப் பெயர் சொல்லி அழைக்கும்போதே பலரும் சிரித்துவிடுவார்கள். பெண் குழந்தைகளாகப் பிறந்ததால், ‘போதும் பொண்ணு’ என்று பெயர் வைத்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பியதால், அந்தத் தோழிக்கு இந்தப் பெயர்.
இருவரும் தங்கள் பெயரை நினைத்து வருத்தப்பட்டனர். 18 வயதுக்குப் பிறகு தங்களுக்குப் பிடித்த பெயரை வைத்துக்கொள்ளப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் இன்றும் அதே பெயர்களில்தான் இருக்கிறார்கள். காரணம் கேட்டதற்கு, ‘பெயரில் என்ன இருக்கு? இவ்வளவு வருஷம் இந்தப் பெயரில் வாழ்ந்தாச்சு’ என்கிறார்கள்.
நீங்களும் உங்கள் பெயரை மாற்றும் காலம்வரை காத்திருங்கள். அப்போதும் பிடிக்கவில்லை என்றால், பிடித்த பெயரை வைத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால், அன்பான தாத்தாவின் பெயரிலேயே இருந்துவிடுங்கள். உங்கள் விருப்பம்தான். அதுவரை பெயரை நினைத்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்காதீர்கள், சுந்தரம்.
–ந. சீனிவாசன், 9-ம் வகுப்பு, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.
கடுமையான கோடைக் காலத்தில் தார் சாலைகளிலும் பாலைவனங்களிலும் கானல் நீரைப் பார்க்க முடியும். தண்ணீர்தான் இருக்கிறது என்று அருகில் சென்றால், இன்னும் சற்றுத் தொலைவில் கானல் நீர் தெரியும். இது ஒரு மாயத் தோற்றம். நிலத்தில் இருந்து அதிகமான வெப்பம் மேலே வருகிறது. மேலே இருக்கும் காற்று சற்றுக் குளிர்ச்சியாகக் கீழ் நோக்கி வருகிறது. இவை இரண்டையும் ஊடுருவிக்கொண்டு சூரிய ஒளிக்கதிர்கள், வெப்பத்திலும் குளிர்ச்சியிலும் வெவ்வேறு வேகத்தில் நுழைகின்றன. அப்போது ஒளிக்கதிர்கள் வளைகின்றன. இதை நம் மூளை நிலத்திலிருந்து தண்ணீர் தோன்றுவதுபோல் எண்ணிக்கொள்கிறது, சீனிவாசன்.
மாணவர்களாகிய நாங்கள் பின்பற்ற வேண்டியவை என்னவென்று சொல்ல முடியுமா, டிங்கு?
–எஸ், ஹரிஹரசுதன், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.
நல்லதை நினையுங்கள், நல்லதைச் செய்யுங்கள். எல்லோரையும் நேசியுங்கள். நண்பர்கள், உடன் பிறந்தவர்களுக்கு விட்டுக்கொடுங்கள். ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுங்கள். நன்றாகத் தூங்குங்கள். தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு, பாடம் அல்லாத புத்தகங்களைப் படியுங்கள். விளையாடுங்கள். அன்றைய பாடத்தை அன்றே படித்துவிடுங்கள். எந்த விஷயத்தையும் இன்னொரு நாள் செய்யலாம் என்று தள்ளிப் போடாதீர்கள், ஹரிஹரசுதன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT