Published : 08 May 2024 06:10 AM
Last Updated : 08 May 2024 06:10 AM
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த டைனசோர்களின் எலும்புகள் எப்படிக் கிடைக்கின்றன, டிங்கு? - ஆர். நிதின், 2-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர், கன்னியாகுமரி.
டைனசோர்களின் எலும்புகள் எல்லாம் புதைபடிவங்களாகத்தான் கிடைக்கின்றன நிதின். ஓர் உயிரினம் இறந்த உடன் அதன் உடலை வண்டல் விரைவாக மறைக்க வேண்டும். இந்த வண்டல்தான் அந்த இறந்த உயிரினத்தை விலங்குகள், சிதைவுகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கிறது.
இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு புதைபடிவமாக மாறும். பெரும்பாலும் எலும்புகள், பற்கள், ஓடுகள், மரம் போன்ற கடினமான திசுக்களே புதைபடிவங்களாக உருவாகும். கால்தடங்கள் போன்ற அடையாளங்களும் புதைபடிவமாக மாறும். உதாரணத்துக்கு, ஒரு டைனசோர் ஏரியில் நீந்தும்போது இறந்துவிடுகிறது. டைனசோரின் சதைப் பகுதிகள் சில வாரங்களில் சிதைந்துவிடுகின்றன.
ஆனால், கடினமான எலும்புகள் ஏரியின் அடிப்பகுதியில் அப்படியே இருக்கும். அவற்றின் மீது வண்டல் படியும். காலப்போக்கில் ஒரு தடிமனான வண்டல்படுகை மேலே குவிந்து, டைனசோர் எலும்புகளை உயிரினங்களிடமிருந்து பாதுகாக்கும். படிப்படியாக எலும்புகள் நிலத்தடி நீரில் உள்ள தாதுக்களால் மாற்றத்துக்கு உள்ளாகும். காலப்போக்கில் எலும்புகள் கல்லாக (புதைபடிவமாக) மாறுகின்றன.
வீட்டு வாசலில் மாட்டுச் சாணம் தெளிப்பது ஏன், டிங்கு? - இ. அனுஷியா, 8-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
வீட்டு வாசலில் உள்ள தரையில் இருந்து புழுதி கிளம்பும். காற்றடித்தால் புழுதி வீட்டுக்குள் வரும். மாட்டுச் சாணத்தைத் தண்ணீரில் கலந்து தெளிக்கும்போது, புழுதி அடியில் தங்கிவிடும். தரை வழுவழுப்பாக மாறிவிடும். பூச்சி, பாம்பு ஏதாவது வந்தாலும் சட்டென்று கண்ணில் தென்படும் என்பதற்காகச் சாணத்தைத் தெளிக்கிறார்கள், அனுஷியா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT