Published : 10 Apr 2024 06:06 AM
Last Updated : 10 Apr 2024 06:06 AM
ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துப் பார்த்துவிட்டுப் பறக்க விட்டுவிட்டேன். அப்போது என் விரல்களில் வண்ணத்தூள் ஒட்டிக்கொண்டது. அது என்ன டிங்கு? - கே. சாருமதி, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளிலிருந்து உங்கள்விரல்களில் ஒட்டிக்கொண்ட அந்தத் தூள், மிகச் சிறிய செதில்கள். இவை உணர்கருவிகள் (Setae). சூரிய ஒளியை உறிஞ்சி, பிரதிபலிப்பதன் மூலம் வெப்பத்தைச் சமநிலைப்படுத்துகின்றன.
இது தவிர, மென்மையான இந்தச் செதில்கள் எதிரியிடமிருந்து வழுக்கிக்கொண்டு தப்பிச் செல்லும் விதத்தில் அமைந்திருப்பதால், அவற்றின் உயிரையும் காப்பாற்றுகின்றன. வண்ணத்துப்பூச்சி செதில்களை இழந்தால் விரைவில் உயிர் இழந்துவிடும். அதனால் இனி வண்ணத்துப்பூச்சிகளைப் பிடிக்காமல் ரசியுங்கள், சாருமதி.
தேர்வு முடிந்தவுடன் உன் விருப்பம்போல் ஸ்மார்ட் போனில் விளையாடலாம் என்று சொன்னார்கள். இப்போது விடுமுறையில் ஸ்மார்ட் போனை எடுத்தாலே கோபப்படுகிறார்கள். இந்தப் பெரியவர்களைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. நான் என்ன செய்வது, டிங்கு? - என். பிரித்விராஜ், 8-ம் வகுப்பு, தூய வளனார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கோவை.
உங்கள் வருத்தம் புரிகிறது, பிரித்விராஜ். பொழுதுபோக்குவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றாக ஸ்மார்ட் போனை நீங்கள் பயன்படுத்தலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால், உங்களைப் போன்ற மாணவர்களில் பலர் ஸ்மார்ட் போனைத் தவிர வேறு எதிலும் ஆர்வம் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்.
விடுமுறை விட்டதே ஸ்மார்ட் போனில் விளையாடுவதற்கும் டிவி பார்ப்பதற்கும் என்று நினைத்துக்கொண்டு, தூங்கும் நேரம் தவிர அவற்றிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். ஸ்மார்ட் போனில் அதிக நேரம் செலவிடுபவர்களுக்கு மூளையில் பாதிப்பும் மன அழுத்தமும் ஏற்படும் என்கிறார்கள்.
அது மட்டுமன்றி, இப்படியே பழகிவிட்டால் நம் கவனம் வேறு எதிலும் செல்லாது. பள்ளி திறந்தவுடன் அந்த வாழ்க்கைக்குச் செல்லவும் கஷ்டமாக இருக்கும். கைக்கு அடக்கமான ஒரு சாதனத்துக்கு நம்மை மறந்து கட்டுப்பட்டுக் கிடப்பது சரியா என்று யோசியுங்கள். நீங்களே அளவோடு ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திப் பாருங்கள். உங்கள் பெற்றோர் உங்களைக் குறைசொல்ல மாட்டார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT